மரணமும் மறுமையும் -18

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

உலக அழிவு, ஸூர், கியாமத் நிகழ்வு

மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் மரணிக்கச் செய்வதற்காக இறுதிநாளில் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி முதலாவது சூரை ஊதுவதற்கு கட்டளையிடுவான். முதலாவது சூர் ஊதப்படும் போது அல்லாஹ் படைத்த அனைத்தும் அழிந்துவிடும். அவன் நாடியவர்களை தவிர.

உலகம் அழிக்கப்படும் இறுதி நேரம்

எக்காளம் ஊதப்படுவதற்கு முன்னால் உள்ள, இறுதி நேரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் ஒரு தாய், கடுமையான தூக்கத்தில் இருக்கும் இரவு நேரத்தில் தன் குழந்தை அழுதால் கூட, குழந்தைக்கு என்ன ஆச்சோ என்று பயந்து, பசியாக இருந்தால், அக்குழந்தைக்கு பால் கொடுப்பாள். ஆனால் இறுதி நேரத்தில் அந்த வேதனையின் காரணமாக, ஒரு தாய் தான் பால் ஊட்டும் தனது குழந்தையை மறந்து விடுவாள்.

அதேபோன்று கர்ப்பிணியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தையை பெற்றெடுப்பாள். அது ஆறு ஏழு மாதங்களாக இருந்தாலும் கூட குறை மாதத்தில் பெற்றெடுத்து விடுவாள். திடகாத்திரமாக இருக்கக்கூடிய ஆண்கள் மது அருந்தியதைப் போன்று தள்ளாடி வருவார்கள்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏

மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

(அல்குர்ஆன்: 22:1)

அந்த நேரத்தில் பூமியின் நிலைமை

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ‌ ۘخَافِضَةٌ رَّافِعَةٌ  اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۙ‏  وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا ۙ‏

அந்த நிகழ்ச்சி நடக்கும் போது, அது நிகழ்வதைத் தடுப்பதும் (அதைத்) தாமதப்படுத்துவதும் முன் கூட்டியே நடக்கச் செய்வதும் எதுவுமில்லை. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.

(அல்குர்ஆன்: 56:1-6)

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ

மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.

(அல்குர்ஆன்: 101:5)

உலக அழிவு – ஸூர் ஊதப்படும் நாள் வெள்ளிக்கிழமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1548)

ஸூர் ஊதுதல் – வானவர் யார்?

ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும்.

இறைவன் தன் வசமுள்ள ஸூரை ஒரு மலக்கு மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் என்ற சொல் குறிப்பிடுகின்றது.

இஸ்ராஃபீல் என்ற பெயரில் ஒரு வானவர் உள்ளார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் அவர் தான் சூர் ஊதுவார் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் இல்லை, என்றாலும்  பெயர் குறிப்பிடப்படாத  ஒரு மலைக்கு சூர் ஊதுவார் என்பதற்கு ஆதாரம்  உள்ளது.

وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ

அருகில் உள்ள இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கும் நாளைப் பற்றி கவனமாகக் கேட்பீராக!

(அல்குர்ஆன்: 50:41)

இரண்டு சூர்கள் ஊதப்படும்

சூர்கள் எண்ணிக்கையை பற்றி சிலர் இரண்டு என்றும், சிலர் மூன்று என்றும் கூறியுள்ளனர். வேறு சிலர் 4 என்றும் கூறியுள்ளனர். இவற்றில் 2 ஸூர் என்பதற்கே பலமான குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் உள்ளது.

وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ ؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ‏

ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.

(அல்குர்ஆன்: 39:68)

உலக அழிவின் போது இரண்டு முறை சூர் எனும் எக்காளம் ஊதப்படும். முதல் முறை ஊதப்படும் எக்காளம் எழுப்புகின்ற படுபயங்கரமான ஓசையின் அதிர்ச்சியால் அனைத்து உயிரினங்களும் பொருட்களும் அழிந்து விடும். பிறகு இரண்டாவது முறை ஊதப்படும். எக்காளத்தின் ஓசையைக் கேட்டு மடிந்த அனைவரும் உயிர்பெற்று எழுவர்.

எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பெற்ற வானவர் இந்தப் பணியை மேற்கொள்வார். இங்கு எக்காளம் என்பதைக் குறிக்க சூர் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ஒலிப்பான் வடிவில் அமைந்தள்ள ராட்சச ஊதுகுழலாகும். சில நபிமொழிகளில் கர்ன் எனும் சொல் ஆளப்பட்டுள்ளதால் இதை ஊதுகொம்பு என்றும் கூறலாம்.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்:

فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ ” لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلَّا مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، …

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார்.

இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ‘நபி(ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?’ என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.

பிறகு, ‘அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டதீர்கள். ஏனெனில், (முதல் முறை) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.

பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூஸா(அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கெண்டிருப்பார்கள். ‘ அவர்கள் ‘தூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?’ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 3414)

சூர் ஊதப்படும் முன் உயிரோடு இருப்பவர்கள் யார்?

(ஹதீஸின் ஒரு பகுதி)  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “…. பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும்.” இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும், குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியவுமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, “நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்பான். அந்த மக்கள், “நீ என்ன உத்தரவிடுகிறாய்?” என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.

இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகிவிடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவர்…

(முஸ்லிம்: 5635)

ஸூரின் விளைவிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்கள்

ஸூர் ஊதப்பட்டவுடன் வானம் மற்றும் பூமியில் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். இருந்தாலும் அல்லாஹ் நாடிய சிலர் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்கள்.

وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌

ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள்.

(அல்குர்ஆன்: 39:68)

இவ்வசனத்தில்உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான்.

வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில் உள்ளவர்களில் சிலரும் முதல் ஸூரின் போது மூர்ச்சையாக மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அவன் யாருக்கு விதிவிலக்கு அளிக்க நாடியிருக்கிறான் என்பதைத் திருக்குர்ஆனும், நபிமொழியும் விளக்குகின்றன.

முதல் ஸூர் ஊதப்பட்டு, வானங்கள் வேறு வானமாக மாற்றப்படும் போது மலக்குகள் அதன் ஓரத்தில் இருப்பார்கள் என்றும், அந்நாளில் இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள் என்றும் (அல்குர்ஆன்: 69:17) வசனம் கூறுகிறது.

வானத்திலுள்ள மற்றவர்கள் மூர்ச்சையானாலும் அர்ஷைச் சுமக்கும் வானவர்களும், இதர வானவர்களும் மூர்ச்சையாக மாட்டார்கள் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்பதற்கு இதை விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

அது போல், “மனிதர்களை எழுப்புவதற்கான ஸூர் ஊதப்பட்டதும், நான் தான் முதலில் எழுவேன். ஆனால் எனக்கு முன்பே மூஸா நபி அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். இவ்வுலகில் இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டு அவர்கள் ஏற்கனவே மூர்ச்சையாகி விட்டதால் இப்போது மூர்ச்சையாகாமல் இருந்தாரா? அல்லது மூர்ச்சையாகி எனக்கு முன் எழுந்தாரா? என்று எனக்குத் தெரியாது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 2411, 2412, 3408, 6517, 6518, 7472)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த இரண்டில் முதலாவது காரணமாக இருந்தால் மூர்ச்சையாவதிலிருந்து பூமியில் விதிவிலக்குப் பெற்றவர்கள் என்பது மூஸா நபியைக் குறிக்கும்.

சூர் ஊதும் போது சில வானவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதில் அவர்கள் அழிக்கப்படவே மாட்டார்கள் என்று முடிவு செய்யக் கூடாது.

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

كُلُّ شَىْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ‌ؕ

அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியும்.

(அல்குர்ஆன்: 55:26, 28:88)

வசனங்களில் அனைத்தும் அழியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சாகாமல் உயிரோடு இருப்பவன் அல்லாஹ் மட்டுமே என்று (அல்குர்ஆன்: 25:58) வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 2:255, 3:2)

வசனங்களில் என்றென்றும் உயிருடன் உள்ளவன் என்று அல்லாஹ் கூறுகிறான். முதல் ஸூர் ஊதும் போது அழிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டவர்களும் அதன் பின்னர் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று புரிந்து கொள்வது தான் மேற்கண்ட வசனங்களுக்குரிய விளக்கமாகத் தெரிகிறது.

நாற்பது எனும் சிறிய இடைவெளி

அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது மக்கள், “அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?” என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(இதற்குப் பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். மக்கள், “மாதங்களில் நாற்பதா?”என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(மீண்டும் நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.

மக்கள், “வருடங்களில் நாற்பதா?” என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மீண்டும்), “நான் விலகிக் கொள்கிறேன் (எனக்கு இது குறித்துத் தெரியாது)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5660)

இரண்டாவது சூர் ஊதியவுடன் கப்ரிலிருந்து வெளியேறுவார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான்; அல்லது இறக்குவான். அது “பனித்துளி” அல்லது “நிழலைப்” போன்றிருக்கும். (அறிவிப்பாளர் நுஅமான் அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.)

உடனே அதன் மூலம் மனிதர்களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்லிம்: 5635)

பூமி பிளந்து வெளியேறுவார்கள்:

இரண்டாவது முறையாக எக்களாம் ஊதப்படும் போது, பூமியில் புதைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பூமியை பிளந்து கொண்டு மிக விரைவாக வெளியே வருவார்கள்.

يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا‌ ؕ ذٰ لِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْر

அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அது தான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.

(அல்குர்ஆன்: 50:44)

وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ‏

மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

(அல்குர்ஆன்: 36:51)

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏

(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.

(அல்குர்ஆன்: 54:7)

வெட்டுக்கிளி போன்று வெளியேறுவார்கள் என்றால் என்ன?

சில தட்பவெட்ப நிலையின் காரணமாக, புதை குழிகளிலிருந்து வெளியேறும் வெட்டுக்கிளித் திரள்கள் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கிய மற்றும் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகளைக் கொண்டிருக்குமாம், சில நேரங்களில் இதைவிடவும் மிகப்பெரியதாக இருக்கலாம்.

அவை ஒரு நாளில் 150 கிலோமீட்டர்கள் (சுமார் 93 மைல்கள்) வரை பயணிக்கும் திறன் கொண்டவை, அவற்றின் பாதையில் பயிர்கள் மற்றும் பிற தாவரங்களை அழிக்கின்றன. வெட்டுக்கிளி திரள்கள் விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் வெளிப்படும் திறன், அத்துடன் நீண்ட தூரம் பயணித்து கணிசமான அளவு பயிர்கள் மற்றும் பசுமையாக உட்கொள்ளும் திறன் ஆகியவை இயற்கையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது.

The 2020 East Africa Locust Outbreak: 2020 கிழக்கு ஆப்பிரிக்க வெட்டுக்கிளி திரள்:

கடந்த 40 ஆண்டுகளில், மிகவும் கடுமையான வெட்டுக்கிளி வெளியேறுதலில் ஒன்றாகும், இது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, எரித்திரியா, ஜிபூட்டி மற்றும் சூடான் உள்ளிட்ட பல நாடுகளை பாதித்தது. இது லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை அழித்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் 2003-2005 வெட்டுக்கிளி பிளேக்: இந்த நிகழ்வு கடந்த 15 ஆண்டுகளில் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது, இது 20 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. மில்லியன் கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டன, மேலும் மில்லியன் கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரிய அளவிலான சர்வதேச உதவி தேவைப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்ன தெரியுமா?

மனிதர்கள் எவ்வாறு கப்ரின் தனிமையின் வாழ்க்கையில் இருந்து வெளியாகி, பெரும் கூட்டமாக மாறி, அவர்களது நிறம் நடத்தை அனைத்தும் மாறி பெரும் கூட்டமாக வந்து மறுமையிலே வந்து நிற்பார்கள் என்று இறைவன் கூறுகிறானோ, அதுபோன்றே இந்த வெட்டுக்கிளிகளும் நடந்து கொள்ளும்.

வெட்டுக்கிளிகள் குறிப்பாக பாலைவன வெட்டுக்கிளிகள் (Schistocerca gregaria) இவ்வாறு பெருந்ததிரளாக வெளிப்படுமாம். அவற்றின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு குறிப்பிட்ட வரம்பை அடையும் போது, சில தட்பவெட்ப நிலையின் காரணமாக, வெட்டுக்கிளிகள் ஒரு தனிமையான வாழ்க்கை முறையிலிருந்து, ஒரு கூட்டமாக வாழும் நிலைக்கு மாறி, நிறம் மற்றும் நடத்தையை மாற்றி, பெருந்திரள்களை உருவாக்கத் தொடங்குகின்றன.

இதை எவ்வளவு அற்புதமாக இறைவன் தனது திருமறையிலே சொல்லிக் காட்டுகிறான்.

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏

(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.

(அல்குர்ஆன்: 54:7)

இவ்வாறு மனிதர்களை, மற்ற உயிரினங்களை அனைத்தையும் அல்லாஹ் மீண்டும் படைப்பான், இது தொடர்பாக இன்னும் சில செய்திகள் இருக்கிறது இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த உரையில் காண்போம்.