மரணமும் மறுமையும் -17
உலக அழிவு மற்றும் கியாமத் நாள்
இறுதி நாளையும் நம்பாவிட்டால் வெற்றி இல்லை
இறை நம்பிக்கையின் 6 முக்கிய அம்சங்களில் மறுமை நாளை நம்புவதும் ஒன்று. ஒருவர் இவ்வுலகத்தில் அல்லாஹ்வை வணங்கி, தொழுது, நோன்பு வைத்து ஜகாத் கொடுத்து ஹஜ் செய்து ஏராளமான நன்மைகளை செய்து விட்டு நான், ”மறுமை நாளை நம்பவில்லை” என்று கூறினால் மறுமையிலே அவர் நஷ்டவாளியாக தான் இருப்பார். ஏனென்றால் அல்லாஹ் தனது திருமறையில் தன்னை நம்புவதற்கு அடுத்தபடியாக இறுதி நாளை நம்புவதை பற்றி குறிப்பிடுகிறான்.
உலக அழிவு நாள் என்பது வேறு, பிறகு நாம் எழுப்பப்படும், விசாரிக்கப்படும், தீர்ப்பளிக்கப்படும் நாள் என்பது வேறு. இறுதி நாள் என்று குர்ஆன், ஹதீஸில் கூறப்படுவது, உலகம் அழிக்கப்படக்கூடிய நாளையும், அதன் பிறகு நாம் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படக் கூடிய நாளையும் சேர்த்தே குறிக்கும்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று.
மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள்.
அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள்.
அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
”யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்” (எனும் (அல்குர்ஆன்: 31:34) ➚ ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை.
பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4
நபியவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்
மார்க்கத்தின் மிக முக்கியமான கடமைகளை பற்றிக் கூறும் போது, நபியவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வாக்கியம் ”யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறார்களோ” என்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
அறி: அபூஹுரைரா(ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறி: அபூ ஹுரைரா(ரலி)
மறுமை நாள் எப்போது?
இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும். இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும், அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது.
அந்த மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை படைத்த அல்லாஹ் மட்டுமே அறிவான். இன்ன ஆண்டு உலகம் அழியும் என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு அதை அல்லாஹ் இரகசியமாகவே வைத்துள்ளான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.
(முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்
(கூடுதல் தகவலுக்கு: Bayan website)
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்:
- என்னுடைய மரணம்.
- பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
- ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்).
- பிறகு செல்வம் பெருகிவழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார்.
- பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.
- பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக என்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.
மகளின் தயவில் தாய்
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 4777, 50)
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
மிகவும் பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பதும் யுக முடிவு நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறி: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 4777)
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
குடிசைகள் கோபுரமாகும்
அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை.
மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது.
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பாலை வனம் சோலை வனமாகும்
இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.
எதற்கும் உதவாத பாலை நிலம்’ என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே.
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
அறி: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 1839, 1681)
என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
(புகாரி: 80, 8, 557, 6808, 5231)
ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக பகிரங்கமாக நடக்கின்றது.
அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள்’ என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப் போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட இந்தத் தீமை தலை விரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.
மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும், அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.
‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
மாபெரும் பத்து அடையாளங்கள்
(கூடுதல் தகவலுக்கு: 10 Signs)
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
சூரியன் மேற்கில் உதித்தல் – தவ்பாவின் வாசல் அடைபடுதல்
நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து “சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது” என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் நடக்க முடியாத இதுவும் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் நடக்கவுள்ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கில் உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும். இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ, பாவமன்னிப்புக் கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை, பயனளிக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா(ரலி),
(புகாரி: 4635, 4636, 6506, 7121)
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்தப் பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அப்படியானால் பல ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங்கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்குப் பின்னர் நடக்கும் பல நிகழ்வுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையிலே காண்போம்.