மரணமும் மறுமையும் -14
கப்ரில் நல்லவர்களின் நிலை-1
சந்தோஷமான செய்தி கூறப்படும்
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள்.
நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.
”எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ”அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” எனக் கூறுவார்கள்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள்.
மேலும் இறைவன் கூறுவான்.
அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்)
(அல்குர்ஆன்: 89:27) ➚ இது மரணத் தருவாயில் என்று சொல்வதற்கு நேரடி சான்றுகள் எதுவும் இல்லை.
எனினும், உயிர் கைப்பற்றப்படும் போது, மலக்குகள் இது போன்ற சில வார்த்தைகளை கூறுவார்கள் என்று(அஹ்மத்: 17803)ஹதீஸில் வருகிறது.
சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்
நல்லவரின் மய்யித் இவ்வுலகில் வாழ விருப்பமில்லாமல், மறுமையை ஆசைப்பட்டு, தன்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள் என்று கூறும்.
இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.
‘ஜனாஸா (பெட்டியில் அல்லது கட்டிலில்) வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக இருந்தால் சீக்கிரம் கொண்டு போங்கள்’ என்று அது கூறும்.
அது கெட்டவரின் உடலாக இருந்தால் அய்யஹோ! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று கேட்கும். அந்த சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் செவியுற்றால் மூர்ச்சையாவான் (மயங்கி விழுந்து விடுவான்)’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூ ஸயீத் (ரலி)
அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவரும், வெறுப்பவரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று சொன்னார்கள்.
அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான்.
இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நல்லவர்களுக்கு வானவர்களின் வரவேற்பு
நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. அதை பின்வரும் ஹதீஸில் காணலாம்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள். திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.
மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும், சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.
அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.
அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடல் அவனுடைய உடனுடன் இந்த ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்.
(இதன் பிறகே, கப்ரில் கேள்விக் கணக்கு துவங்குகிறது…)
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),
(அஹ்மத்: 17803),(முஸ்லிம்: 5510)
இலேசான விசாரனை
அடக்கம் செய்யப்பட்டவுடன், மேற்கண்ட நிகழ்வுகளுக்குப் பிறகு, மரணித்தவருக்கு விசாரணை ஆரம்பித்து விடுகிறது. வானவர்கள் மிகச் சில கேள்விகளை மட்டும் கேட்பார்கள். நல்லடியாராக இருந்தால் இலகுவாக கேள்விகளுக்கு பதில் கூறிவிடுவார். பிறகு அவருக்கு இன்பமான வாழ்வு ஆரம்பித்து விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார்.
எனது அடியான் உண்மை கூறி விட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும்.
நல்ல அமல்களின் உருவம்
அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.
அந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார்.
அதற்கு அம்மனிதர் நான் தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்பொழுது அந்த இறை நம்பிக்கையாளன் இறைவா நான் தேடி வைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமை நாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு இறை நம்பிக்கையாளரின் நிலை இதுவாகும்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு ”இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார்.
பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
ஷஹீதுகளுக்குரிய மரியாதை:
இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.
அறிவிப்பவர்: கஃப் பின் மாக்(ரலி),
மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக வந்திருந்தாலும், இது ஷஹீதுகளுக்குரிய மரியாதை என்பதை மற்ற ஹதீஸ்களிலிருந்த விளங்க முடிகிறது.