மரணமும் மறுமையும் -11
தீயவர்களின் கப்ர் வாழ்க்கை-1
கப்ர் வேதனை இந்த சமுதாயத்திற்கும் உண்டு
அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் யூதப்பெண் ஒருவர் “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக்குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் “யூதர்கள்தாம் (சவக்குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.
சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “நீ அறிவாயா? சவக்குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
கப்ரில் விசாரணை – பதில் கூறாதவனுக்கு தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து
‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். நிராகரிப்பவனாகவோ! நயவஞ்சகனாகவோ! இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ”’எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே! நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான்.
அப்போது அவனிடம், நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாதவனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப்படும். நெருப்பில் புரட்டப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நரகத்தின் முன்னோட்டம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவனுக்கு நெருப்பால் ஆன ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும்.
பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார். அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலை கூட மண்ணாகிவிடும். ஜின்களையும், மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகிவிடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி),
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்துவிட்ட கெட்ட) மனிதனிடம் வருவார். உனக்குத் தீங்கு தரக்கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இது தான் என்று கூறுவார். அதற்கு அவன் உன் முகமே! மீண்டும் மீண்டும் தீய செய்தியைக் கொண்டு வருகிறதே நீ யார்? என்று கேட்பான். அதற்கு அவர் நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே! என்று கூறுவான்.
அறி: பராஉ பின் ஆஸிப் (ரலி),
நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை
இறந்தவனிடத்தில் நன்மை ஏதும் இருக்கிறதா என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல் நல்லுபதேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூறமாட்டான். இதனால் அவனுடைய எழும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறையில் இறை மறுப்பாளனின் தலைப்புறமாக வந்து (நன்மை ஏதும் இருக்கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கு) எதுவும் இருக்காது. அவனுடைய இரு கால்களிடத்தில் (நன்மை இருக்கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கும்) எதுவும் இருக்காது. எனவே அவன் திடுக்கிட்டுப் பயந்தவனாக எழுந்து அமருவான்.
உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? என்று அவனிடம் வினவப்படும். அதற்கு அவன் மக்கள் எதையோ கூறிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அவர்கள் கூறியது போல் நானும் கூறிக் கொண்டிருந்தேன் என்று கூறுவான். நீ உண்மை கூறினாய். இப்படித் தான் நீ வாழ்ந்தாய். இப்படியே மரணித்தாய். இவ்வாறு அல்லாஹ் நாடினால் நீ எழுபப்படுவாய்! என்று அவனிடம் கூறப்படும்.
அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். இதைப் பற்றித் தான் அல்லாஹ் (இந்த வசனத்தில்) கூறுகிறான். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124)
அறி: அபூ ஹுரைரா (ரலி),
நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105
”எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் ”அல்லாஹ்வும், அவனது தூதருமே! மிக அறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.
”இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும்.
அந்தப் பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக்கொண்டும், அவனை தீண்டிக்கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்னது அபீ யஃலா-6644,6504
சிலருக்கு நெருப்பு வீடு
நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் அதிகமான இடஞ்சல்களைக் கொடுத்தார்கள். இவர்களின் மண்ணறைகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக என்று இவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். தீயவர்களுக்கு மண்ணறையில் இப்படி ஒரு தண்டனையும் தரப்படலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறி: அலீ (ரலி),
அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் (எதிரிகளான) அவர்களுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிரிருந்து நம்மைத் தடுத்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),