மரணமும் மறுமையும் – 08 (இறுதி நேரம் – மரணத் தருவாய்)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

இறுதி நேரத்தில் நம் சிந்தனை, செயல்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

இறுதி நேர சிந்தனையே முக்கியம்

يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறி: ஜாபிர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5518)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللهِ عَزَّ وَجَلَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், “உங்களில் ஒருவர், அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறி: ஜாபிர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5517)

லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுதல்

(916) وحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ بِشْرٍ، قَالَ أَبُو كَامِلٍ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عُمَارَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ».

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்லிம்: 1523, 1524)

இறந்தபின் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா?

மேற்கண்ட நபிமொழிக்கு வேறு விதமாகப் பொருள் கொண்டு சிலர் குழப்புவதால் இது பற்றி சற்று அதிகமாக அறிந்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நபிமொழியில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் மவ்த்தா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு மரணித்தவருக்கு என்பதே நேரடிப் பொருளாகும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இறந்த பின் அவருக்கு அருகில் லாயிலாஹ இல்லலல்லாஹ் என்று கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று குழப்பி வருகின்றனர்.

மவ்த்தா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணித்தவர் என்பது தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனாலும் சில சொற்களுக்கு நேரடிப் பொருள் கொள்ள இயலாத நிலை ஏற்படும் போது அதற்கு நெருக்கமான வேறு பொருள் கொள்வது எல்லா மொழிகளிலும் உள்ளது போலவே அரபு மொழியிலும் உள்ளது.

சிங்கத்தின் வீர முழக்கம் என்ற சொற்றொடரில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு என்றாலும் அத்துடன் இணைந்துள்ள வீர முழக்கம் என்ற சொற்றொடர் சிங்கத்துக்கு நேரடிப் பொருள் கொள்வதைத் தடுக்கிறது. வனவிலங்கு எந்த முழக்கமும் செய்யாது என்பதால் வீரமிக்க ஒரு மனிதரைப் பற்றித் தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வோம்.

அகராதியில் வனவிலங்கு என்று தானே பொருள் செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் இந்தச் சொற்றொடருக்குப் பொருந்தாது. இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. இதே அடிப்படையில் தான் மேற்கண்ட ஹதீஸும் அமைந்துள்ளது.

மரணித்தவரிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுங்கள் என்று சொல்லப்பட்டால் இவர்கள் செய்கின்ற வாதம் பொருந்தலாம்.

மரணித்தவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லிக் கொடுங்கள் என்பது தான் ஹதீஸின் வாசகம். சொல்வது வேறு! சொல்லிக் கொடுப்பது வேறு! சொல்லிக் கொடுப்பது என்றால் அவர் முன்னே நாம் ஒன்றைச் சொல்லி அவரையும் சொல்ல வைப்பதாகும்.

மரணித்தவருக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதால் இந்த இடத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு என்று தான் பொருள் கொண்டாக வேண்டும்.

(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்பவர்களே

என்று திருக்குர்ஆன் (அல்குர்ஆன்: 39:20) கூறுகிறது.

இதிலும் மய்யித் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை மய்யித் என்று அல்லாஹ் கூறுகிறான். இனி மரணிக்கப் போகிறவர் என்று இதை நாம் புரிந்து கொள்கிறோம். இந்த வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்று ஒருவர் கூட புரிந்து கொள்ள மாட்டோம்.

எனவே மரணித்தவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவதாக இருந்தால் அதன் நேரடிப்பொருளில் புரிந்து கொள்ள முடியாது. செவியேற்பவருக்குத் தான் சொல்லிக் கொடுக்க முடியும்.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்: 27:80) என்று அல்லாஹ் கூறுவதால் மரணத்தை நெருங்கியவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று தான் மேற்கண்ட நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இப்னு ஹிப்பான் என்ற நூலில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபிமொழி நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»

‘உங்களில் மரணிக்க உள்ளவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசி பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். இதற்குமுன் அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே’ என்று நபிகளார் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (இப்னு ஹிப்பான்: 3004) (7/272)

இயன்றால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும்..

 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ ‏النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ ‏إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: ‏‏«الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»‏

யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‎பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் ‎விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது ‎தலைக்கு அருகில் அமர்ந்து, நீ இஸ்லாத்தை ஏற்றுக் ‎கொள்ளலாமே? என்று கூறினார்கள். அவர் தனது தந்தையைப் ‎பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள் என்று ‎அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ‎ஏற்றுக் கொண்டார். இவரை நரகத்திலிருந்து விடுவித்த ‎அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறிக் கொண்டே ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.‎

அறி: அனஸ் (ரலி)‎

நூல்: (புகாரி: 1356), 5657‎

முஸ்லிமல்லாதவர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் ‎அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது இஸ்லாத்தை எடுத்துச் ‎சொல்ல முயல வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழிகள் ‎சான்றுகளாகவுள்ளன.‎

கூறாவிட்டால் நரகமா?

கடைசி நேரத்தில் வலியின் காரணமாகவோ, வேறு சிந்தனையின் காரணமாகவோ,  ”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூறாவிட்டால் அதற்காக நரகமா? என்றால் இல்லை.

நபியவர்களின் கடைசி வார்த்தை ”லாயிலாஹ இல்லல்லாஹ்” இல்லை. கடைசி வார்த்தை ”ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி…)” என்பதாகும்.

إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي، وَفِي يَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ: دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ، وَبِيَدِهِ السِّوَاكُ، وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ، وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ، فَقُلْتُ: آخُذُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَتَنَاوَلْتُهُ، فَاشْتَدَّ عَلَيْهِ، وَقُلْتُ: أُلَيِّنُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَلَيَّنْتُهُ، فَأَمَرَّهُ، وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ – يَشُكُّ عُمَرُ – فِيهَا مَاءٌ، فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي المَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ، فَجَعَلَ يَقُولُ: «فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, ‘உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?’ என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், ‘ஆம்’ என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், ‘பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?’ என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், ‘ஆம்’ என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக் குவளையொன்று’ இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு’ என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, ‘(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

((புகாரி: 4449))

தவணை வந்ததும் மரணம் நிகழும்

தனிமனிதனாக இருந்தாலும், ஒரு கூட்டமாக இருந்தாலும், அல்லாஹ் நாடிய நேரத்தில், நாடிய விதத்தில் மரணம் ஏற்படும். ஒரு ஒருபோதும் எதற்காகவும் தாமதிக்கப்படாது.

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் – நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 63:11)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:34)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 10:49)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 63:11)

மரணம் யாரையும் விட்டு வைக்காது

அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

“நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 62:8)

உயிர்களை கைப்பற்றுதல்

39:42   اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

39:42. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

மலக்குல் மவ்து வருகை

قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏

32:11. “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி இவ்வசனங்கள் (4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:1,2) கூறுகின்றன.

மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக தமிழக முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இஸ்ராயீல் என்ற பெயரில் ஒரு வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித்தனியான வானவர்கள் இருப்பதாக 32:11 வசனம் கூறுகிறது.

அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும்போது “அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்” என்று பன்மையாகவே கூறப்படுகிறது. இதை 4:97, 6:93, 8:50, 16:28, 16:32, 47:27 ஆகிய வசனங்களில் காணலாம்.

நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று 6:61, 7:37 வசனங்களிலும் பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.

அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார். இது தான் திருக்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.

ஒரே ஒரு வானவர் உலகத்திலுள்ள அனைவருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.