மரணமும் மறுமையும் -06
(பல்வகை மரணங்கள்)
தவணை வந்து விட்டால் அவகாசம் இல்லை
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
இளவயது மரணம், பெற்றோர் பாவத்தின் அடையாளமல்ல!
ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர். சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர். இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.
அறி: அபூ ஸயீத் (ரலி),
(புகாரி: 101, 1250, 7310)
சிறு வயதில் ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக இல்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
தாள்ளாத வயது மரணமும் இழிவானதல்ல
சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.
(புகாரி: 2822, 6365, 6370, 6374, 6390)
இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இவ்வுலகில் துன்பங்களைச் சந்தித்தால் இதன் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் அவர் தண்டிக்கப்படாமல் தப்பிக்க உதவும்.
”இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்கள் :(திர்மிதீ: 2399)(2323),(அஹ்மத்: 7521, 9435)
ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
கடுமையான வேதனையுடன் மரணித்தல்
சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள்.
மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்பட்டதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும்.
மரணத்தின் கடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுபவித்த பின், வேறு எவருக்கும் மரணம் கடுமையாக இருப்பதை நான் வெறுக்க மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடுமையான வேதனையுடன் தான் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். எனவே இத்தகைய வேதனையை ஒருவர் அனுபவிப்பதால் அதைத் துர்மரணம் எனக் கூற முடியாது.
மக்காவிலோ, மதீனாவிலோ மரணித்தால் நல்லவரா?
மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.
இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.
(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்அவ்ஸத் (6/89) நூலில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் மூஸா பின் அப்துர் ரஹ்மான் அல்மஸ்ரூகி இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.
பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளரான யூசுப் பின் அதிய்யா அல்பஸரி என்பவர் பலவீனமானவர். வானத்தில் மரணித்தவர் என்பன போன்ற சொற்களில், நபிமார்களின் சொற்களில் காணப்படும் கருத்தாழம் எதுவும் இல்லை.
இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதுடன் இதன் கருத்தும் ஏற்புடையதாக இல்லை.
வெள்ளிக்கிழமை மரணித்தால், சொர்க்கவாசியா?
வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று பலரும் நம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன.
யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.
எதிர்பாராமல் நிகழும்
சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.
திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை.
திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அபூ ஹுரைரா (ரலி)
(புகாரி: 653, 720, 2829)
صحيح البخاري 2830
பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதவில்லை.
صحيح البخاري 1388
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறி: ஆயிஷா (ரலி)
இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.