மரணமும் மறுமையும் – 05
(அல்லாஹ்வே நித்திய ஜீவன், நபியின் மரணம்)
அல்லாஹ்வே நித்திய ஜீவன்
எவ்வளவு தற்காப்பு மேற்கொண்டாலும், கவனமாக இருந்தாலும், மரணம் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொள்ளாத எவரும் இல்லை. அல்லாஹ் மடடுமே நித்திய ஜீவன்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
வணக்கத்திற்கு தகுதியான இறைவன் வேறு யாருமில்லை அவன் மரணம் இல்லாத உயிர் உள்ளவன் என்றும் நிலையானவன் அவனை சிறு உறக்கமும் பீடிக்காது பெரும் நித்திரையும் பீடிக்காது வானங்கள் பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையது
மரணிக்காது, (என்றென்றும்) உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.
55:26. (பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே!
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
களிர் (அலை) பற்றிய உண்மைகளும், கதைகளும்:
களிர் (அலை) அவர்கள் மரணிக்கவில்லை என்று இன்றைக்கும் நம்பும் பல மக்கள் நம் சமுதாயத்தில் உள்ளனர்.
உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.
இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
“ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்” என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது.
ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள்.
“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
“ஹில்று’ நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இவ்வசனத்திலிருந்தும் “ஹில்று’ உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹில்று (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.
இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே “ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை” என்றால் “நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது” என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கின்றது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.
ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபிவழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?
தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு “குலாம் அஹ்மத்” தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை? இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?
ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.
ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி “இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் “100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்” என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.
பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.
எவன் இது போன்ற கதைகளைச் சொல்கிறானோ, அதனை நம்புகின்றானோ, அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவன் தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.
இமாம் புகாரி, இப்ராஹீம் அல்ஹர்பி, இப்னு ஜவ்ஸீ, காழீ முகம்மது பின் ஹுஸைன், அபூதாஹிர், இப்னு கஸீர் போன்ற பேரறிஞர்களும் ஹில்று (அலை) அவர்கள் மரணமடைந்து விட்டதாகவே கூறியுள்ளார்கள்.
இது போன்ற கற்பனைக் கதைகளை நம்புவதை விட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக.
நபியின் மரணம்
அனைவருக்கும் மரணம் வரும். இதற்கு எந்த இறைதூதரும் விதிவிலக்கல்ல. நபி (ஸல்) அவர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், நபியவர்கள் மரணித்த போது, அவர்கள் மீது கொண்ட பேரன்பின் காரணமாக, நபித்தோழர்களால் இதை ஏற்க முடியவில்லை. அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வைத்த வாதங்கள், பேசிய பேச்சுக்கள், நம் சமுதாயம் மிகப் பெரிய ஒரு வழிகேட்டிற்குச் செல்லாமல் பாதுகாத்தது. அந்த சம்பவத்தை பாருங்கள்.
நபி மரணித்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘ஸுன்ஹ்’ என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்’’ என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.
(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) “சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்’’ என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் ‘அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்’ என்று சொன்னார்கள்.
மேலும், ‘‘(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே’’ என்னும் (அல்குர்ஆன்: 39:30)-ம் இறை வசனத்தையும், ‘‘முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’’ என்னும் (அல்குர்ஆன்: 3:144)-ம் இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நூல்: (புகாரி: 3667), 3668
நபி இருந்திருந்தால், மக்கள் பிளவுபட்டிருக்க மாட்டார்களே!
இஸ்லாம் முழுமைப் படுத்தப்பட்டதோடு, அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் தீர்வை சொல்லிவிட்டது. ஆனால், அந்த தீர்வை புரிந்து கொள்வதில் செயல்படுத்துவதில் மக்கள் ஏராளமான பிரிவுகளாக பிளவுகளாக இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இன்று இருந்திருந்தால், எண்ணற்ற பிரச்சனைகளில் மக்கள் பிளவுபட்டிருக்க மாட்டார்களே! அது இறைவனது நாட்டமல்ல…
நபியவர்களின் வழிகாட்டுதல்கள் தெள்ளத்தெளிவாக இருக்கும் போதும், சஹாபாக்களின் வழிகாட்டுதல், வழிமுறைகள் தேவை என்று ஸலஃபுகள் என்று மிகப்பெரிய ஒரு கூட்டம் வழிகேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதே!
சூனியம் என்ற பெயரில் மக்கள் இரு வேறு கருத்துடையவர்களாக இருக்கிறர்களே!
தொப்பி போடனுமா? வேண்டாமா? பாத்தியா ஓதனுமா? கூடாதா? தவ்ஹீத் சரியா? தப்பா? அனைத்திற்கும் இஸ்லாத்தில் குர்ஆனில் ஹதீஸில் தெளிவான பதில் உண்டு.
நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இன்று இருந்திருந்தால், இதுபோன்ற ஏராளமான விஷயங்களில், நபியவர்கள் இருந்திருந்தால், ”யா ரஸுலுல்லாஹ், தொப்பி போடனுமா? கூடாதா? பாத்தியா ஓதலாமா? ஜாக் சரியா? தமுமுக சரியா? அல்பானி சொல்கிற இந்த கருத்து சரியா?” என்று நேரடியாக கேட்டு தெளிவு பெற்றிருப்போமே! மிகப் பெரிய ஆய்வு தேவை இல்லையே! ஆய்வின் காரணமாக இரண்டு விதமான கூட்டங்களாக பிரிய மாட்டோமே! இதுவல்ல இறைவனது நாட்டம்…
ஒட்டுமொத்த உலகமும் பல நூற்றாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் தீண்டாமைக்கு, இனவாதத்திற்கு இறைவனிடமிருந்து தீர்வுகளை பெற்று, நமக்கு சொன்ன தூதரல்லவா நம் தூதர்!!
4:1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
தொழுகையில் நிற்கும் போது இடைவெளி விட்டு நிற்கக்கூடாது. ஷைத்தான் ஆட்டுக்குட்டிகள் நுழைவது போன்று நுழைந்துவிடுவான். என்று அன்று சொன்ன ஒரு வார்த்தை இன்றைக்கு வரைக்கும் நம்மையெல்லாம் இணைத்துக் கட்டிப் போட்டுள்ளதே!
இவர் உயிரோடு இருந்தால், நம்மில் இவ்வளவு பிரிவுகள், ஜமாஅத்கள், கொள்கைகள் இருக்குமா? அதுவல்ல, இறைவனது நாட்டம். பிறந்தவர் யாராக இருந்தாலும், படைக்கப்பட்டது எதுவுவாக இருந்தால் அதற்கு முடிவு உண்டு, இறப்பு உண்டு. இதுவே இறைவனது நியதி. எனவே, நபியாக இருந்தாலும், நபிமார்களின் முத்திரையாக இருக்கும் நபி(ஸல்) அவர்களாக இருந்தாலும், மரணிக்கக் கூடியவரே! பிறகு, நாமெல்லாம் எம்மாத்திரம்?
எங்கு மரணிப்போம் என்பதை அறிய முடியாது!
நாம் அனைவரும் மரணிக்கத் தான் போகிறோம். அல்லாஹ் அந்த நாளை நமக்கு மறைத்து வைத்துள்ளான். மட்டுமின்றி, எந்த இடத்தில் மரணிப்போம் என்பதைக் கூட அல்லாஹ் எந்த மனிதருக்கும் வெளிப்படுத்த வில்லை. எனினும் நபிமார்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கானவர்கள், எனினும் இறுதி நேரத்தில் அவர்களுக்கு சில தங்களின் மரணத்தை குறித்து சொல்லப்படும் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர் கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (4:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள்.
ஆகவே, “இவ்வுலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது’ என்று நான் எண்ணிக்கொண்டேன்.478
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரை’ அல்லது “(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாதவரை’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை என்று சொல்லிவந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்துவிட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது.
பிறகு அவர்கள், “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், “இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்துகொண்டேன்.
நாங்கள் அதைப் பற்றி (ஃபாத்திமா (ரலி) அவர்களிடம்) விசாரித்தோம். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்தபோது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறந்துவிடப்போவதாக இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அழுதேன்.
பிறகு (இரண்டாம் முறையில்), “அவர்களுடைய குடும்பத்தாரிலேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்லவிருப்பவள்’ என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, நான் சிரித்தேன்” என்று சொன்னார்கள்.
மற்ற எவரும் இதை அறிய முடியாது
31:34. யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
ஆந்திராவில் நான் மரணிப்பேன் என்று அல்லாஹ் எழுதியிருந்தால், மரணிக்கும் நாளுக்கு முன், எதாவது ஒரு வேலையை ஏற்படுத்தி, ஆந்திரா செல்ல வைத்து, அங்கு மலக்குல் மவத் என் உயிரை கைப்பற்றுவார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது.
நபிமார்கள் உட்பட, யாராலும் அறியமுடியாத இரகசியங்களில் ஒன்றாக அல்லாஹ் ஒவ்வொரு உயிருக்கும் இதை ஆக்கியிருக்கிறான். இன்னும் மரணம் குறித்த ஏராளமான செய்திகளை இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது, நம் ஈமானை அதிகப்படுத்த, மறுமை வாழ்க்கையை சீராக்க. இன்ஷா அல்லாஹ், இனி வரும் நாட்களில் இது குறித்து விபரமாக பார்ப்போம்.