மரணமும் மறுமையும் – 04 (மவுத்தை மறந்த மனிதன்)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்
மவுத்தை உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கும் மனிதன்

உலகில் எந்த விசயத்திலும் கருத்து வேறுபாடுகள், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் மரணம் நிகழும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை.

மரணத்தை நம் உள்ளத்தால் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் நம் செயல்பாடுகள் மரணம் இருக்கிறது என்று எண்ணக்கூடியவருடைய செயல்பாடுகள் போன்று இல்லை.

உலகத்தைப் பற்றிய மோகமும் ஆசையும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது நம்முடைய மறுமையை, நமக்கு மரணம் வரும் என்ற எண்ணத்தையே மறக்கடிக்க செய்யும் அளவுக்கு இருந்தால் அது ஆபத்து தானே!

  • ஒரு காட்டில் சிங்கம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதற்குள் ஒருவன் கவலைப்படாமல் உள்ளே நுழைவானா?
  • இந்த உணவில் விஷம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு ஒருவன் சாப்பிடுவானா?

ஆனால் மரணம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டே, நன்மைகள் செய்யாமலும் தீமைகள் அதிகமாகவும் ஒரு மனிதன் செய்தால் அவனை என்னவென்று சொல்வது? உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கிறான். அவனுடைய எல்லா செயல்களையும் பாருங்கள்.

வணக்க வழிபாடுகளில் நாம் எப்படி?

தொழுகையில் நாம் எப்படி? நபிலான தொழுகையின் மூலமாக இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்மிடத்தில் எவ்வளவு இருக்கின்றன?

நஃபிலை விடுங்கள் சுன்னத்து தொழுகை: ஒவ்வொரு தொழுகைக்குப் முன்பும் பின்பும் சுன்னத்தான தொழுகைகள் இருக்கின்றது. அவற்றை தொழுதால் மறுமையில் சொர்க்கத்தில் வீடு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது எத்தனை பேர் அதில் கவனம் செலுத்துகிறோம்?

சுன்னத்தையும் விடுங்கள் பர்ளுத் தொழுகை: பர்ளான தொழுகைகளில் 5 வேளை தொழுகைகளை சரியாக நிறைவேற்றக்கூடிய நபர்கள் எத்தனை பேர்?

கின்னஸ் தொழுகை:  இன்னும் சிலர், அல்லாஹ்வின் வேத வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைகளை துச்சமாக ஆக்கி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்த தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

7 நிமிடத்தில் 23 ரக் அத்கள் தொழுது ஒரு நாட்டிலுள்ள பள்ளிவாசலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்களாம். அந்த வீடியோக்களெல்லாம் வாட்ஸ் அப்பில் பரவுவதை நாம் காண்கின்றோம்.

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

107:4 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ، يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ، قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا، لَا يَذْكُرُ اللهَ فِيهَا إِلَّا قَلِيلًا»

அலாஉ பின் அப்திர் ரஹ்மான் அவர்கள் கூறியதாவது:

நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹர் தொழுதுவிட்டுச் சென்றேன். -அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது- நாங்கள் அவர்களிடம் சென்றபோது நீங்கள் அஸர் தொழுதுவிட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், (இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம் என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், அவ்வாறாயின் நீங்கள் அஸர் தொழுங்கள் என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே வரும்போது அவன் நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவு கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.

நூல்: முஸ்லிம்

தர்மத்தில் நாம் எப்படி?

பள்ளிகட்டுவதற்கு, விரிவாக்கம் செய்வதற்கு உங்கள் பொருளாதாரத்தை கொடுங்கள் என்று சொன்னால் வாரி வழங்கக்கூடிய மக்கள் எத்தனை பேர்? தனது வீட்டிற்கு காம்பவுண்ட் சுவர் அமைக்கக்கூடிய தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட பள்ளிவாசலுக்கு கொடுக்க மாட்டார். கக்கூசுக்கு டைல்ஸ் போடக்கூடிய தொகையில் 10 ஒரு பங்கு கூட பள்ளிக்கு கொடுக்க மாட்டார்.

உன் தகுதிக்கு நீ கொடு: பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க கூடியவர், 2000 ரூபாய் வேண்டாம்.‌ வெறும் 200 ரூபாய் தர்மம் செய்யக்கூடாதா? “நான் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பாதிக்கிறேன்; அவரை பாருங்கள் 20,000 சம்பாதிக்கிறார் இவரை பாருங்கள் 50,000 சம்பாதிக்கிறார்” என்று நம் மீது உள்ள பொறுப்பை தட்டி கழிக்கிறோமா? இல்லையா? இதையே தான் அவர்களும் (50,000 சம்பாதிப்பவர்களும்) சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலரை பார்த்திருக்கிறீர்களா? “அல்லாஹ் இன்னும் எனக்கு நிறைய செல்வத்தை வழங்கினால் அப்போது தர்மம் செய்வேன்” என்பார்கள். இந்த கஞ்சபிசினாரிகள் எவ்வளவு செல்வம் கிடைத்தாலும் தர்மம் செய்ய மாட்டார்கள்.

இவர்களை அல்லாஹ் படம் பிடித்து காட்டுகிறான் திருமறை குர்ஆனில்.

9:75   وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ‏

9:75. “அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்” என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர்.

9:76   فَلَمَّاۤ اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏

9:76. அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.

9:77   فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏

9:77. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள்1 வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.

9:78   اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ‌ ۚ‏

. அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.

(அல்குர்ஆன்: 9:75-78)

அதிலும் விளம்பர மோகம்

உண்ண உணவில்லை, படிக்க வசதி இல்லை என்று அண்டை வீட்டுக்காரர்கள் வறுமையில் வாடுவதை கண்டவுடன் உதவிக்கரம் நீட்டக் கூடிய மக்கள் எத்தனை பேர்?

அப்படியே கொடுத்துவிட்டாலும், 10 ரூபாய் கொடுத்துவிட்டு, அதை 20 தடவை சொல்லிக்காட்டுவது. “அன்னைக்கு பஸ்ஸுக்கு காசு இல்லைனு கேட்டாரு, நான் தான் கொடுத்தேன். அன்னைக்கு ரேஷன் கடையில, 5 ரூபாய் சில்லறை இல்லை என்று கேட்டார், நான் தான் கொடுத்தேன். நல்ல மனுஷன் தான், ஆனா அப்பப்ப காசு கேட்பார்.”

– قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ، فَدَنَوْتُ مِنْهُ، فَسَمِعْتُهُ يَقُولُ: – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 6499)

மறுமையை மறந்து உலக இன்பத்தை அனுபவித்தவர்களின் நிலை

உலக இன்பத்தை அனுபவிக்கலாம். ஆனால் தடை செய்யப்பட்டவைகளைச் செய்து, உலக இன்பங்களை அனுபவிக்கும் கூட்டம் மறுமையில் படும் பாட்டை இறைவன் தன் திருமறையிலே சொல்லிக் காட்டுகிறான்.

وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ‌ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ

(ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்” (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 46:20)

தன் மகிழ்சிக்காக பிறருக்கு அநீதி இழைப்பது

ஒரு காலத்தில் நாணயமான முஸ்லிம்களின் சந்தை என்று அறியப்பட்ட பர்மா பஜாருக்கு இப்பொது சென்றால், பொய், பொய், பொய், செல்போன், டிவி, கேட்ஜெட்ஸ் என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் பொய்யே மூலதனம். பொய்யைத் தவிர வேறொன்றமில்லை. ”வியாபாரம் என்றாலே பொய் தானே!” என்று பழமொழியை உருவாக்கும் அளவிற்கு, உலக பொருளாதாரத்தின் மீது மோகம், மரணத்தை மறந்த மோகம்.

உலகத்தின் மீதான மோகம், நம் சமுதாத்தில் உள்ள சில முஸ்லிம் பெயர் தாங்கிகளை எங்கோ கொண்டு போய் விட்டது.

சென்னை தி.மு.க. ஜாஃபர் சாதிக் (Jaffar Sadik) போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம்.

சென்னையை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவில் சென்னை மேற்க மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது போதைப்பொருள் தயாரிக்கும் பொருளான சூடோபெட்ரின் கடத்தலில் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமைறைவானர். அவரை தேடி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை வந்தனர். அவரது வீட்டில் ரெய்டு நடத்தி சீல் வைத்தனர். ஜாபர் சாதிக்கிற்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே தான் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

மக்களின் மதியை மயக்கி, நாசமாக்கும் போதை பொருளாக இருந்தாலும் பரவாயில்லை என்று, எதையும் விற்கத் தயார்.

மறுமை நாளில் பல இருள்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.” இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

((முஸ்லிம்: 5034))

 அநீதி இழைக்க மாட்டான், ஏமாற்ற மாட்டான்

”…..ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு சகோதரனாய் இருக்கிறான்; அவன், அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அவனை இழிவுபடுத்தவும் மாட்டான்” இறையச்சம் இங்கே இருக்கிறது என (கூறி) தம் நெஞ்சை மும்முறை சுட்டிக் காண்பித்து, “மனிதன் தன் சகோதரனை இழிவாகக் கருதுவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமின் இரத்தமும், அவனுடைய சொத்தும், மேலும் அவனுடைய தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(முஸ்லிம்: 1539)

நபியின் இந்த போதனைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், அநீதிக்கு மேல் அநீதி, பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருந்தால், இறுதியில் மரணம் வரத்தானே போகிறது!

(அல்குர்ஆன்: 33:16)

தீடீரென வரும் மரணம்!

இவ்வாறு நன்மைகளிலும், கவனமில்லாமல் அறைகுறையாகச் செய்து, தீமைகளைப் பற்றியும் கவலையில்லாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டே இருந்து, இறுதியில் மரணத்தை எதிர்பாராமல் சந்தித்தால் அவரின் நிலை என்னவாகும்?

اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ‌ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ‌ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ‌ ؕ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا‏

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!” (அல்குர்ஆன்: 4:78)

இனி வரும் நாட்களில், மரணம் எப்படியெல்லாம் வருகிறது? மரணத்திற்கு அப்பாற்பட்டவர் யார்? நபியின் மரண நேரம் போன்ற செய்திகளை வரிசையாக காண்போம்.

(அல்குர்ஆன்: 39:30)