மரணமும் மறுமையும் – 02
இம்மை மறுமைக்கே இந்த உலகம்
இவ்வுலகம் மறுமைக்கு மட்டும் உரியதா?
மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக இந்த உலகில் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று போதிக்கும் இஸ்லாம் மார்க்கம், அதற்காக 24 மணிநேரமும் மறுமைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடவில்லை.
மார்க்கம் கடமையாக்கிய செயல்களை செய்து முடித்த பிறகு ஒருவர் தனது நேரத்தை மார்க்கம் தடுக்காத எந்த வகையிலும் செலவழிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. நாள் முழுவதும் மறுமை சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் எந்த நிபந்தனையும் இல்லை. செய்ய வேண்டிய அமல்களை, கடமைகளை முடித்த பிறகு, இவ்வுலகத்தின் அருளைத் தேடலாம். இன்பங்களை அனுபவிக்கலாம்.
ஜோக் அடிப்பதால் மறுமையில் என்ன பயன்?
சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
பிறரை பார்க்கும் போது புன்முகத்தோடு பார்ப்பது தர்மம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். அது வேறு. தனியாக இருவரோ, நால்வரோ அமர்ந்து ஜோக் அடித்து சிரித்துப் பேசுவது மறுமை சம்பந்தப்பட்டதா? அதனால் கப்ர் வாழ்க்கைக்கு என்ன பயன்? மறுமையில் என்ன நன்மை? எனினும், மார்க்கம் அதை தடுக்கவில்லை.
வலி நிவாரணி: நன்றாக சிரிக்கும் போது என்டோர்ஃபின்கள் (Endorphins) எனப்படும் ஒரு வித வலி நிவாரணியை சுறந்து, மூளையில் உள்ள (opiate receptors) ஒரு வித ஏற்பிகளை தொடர்பு கொண்டு, வலியை குறைக்கும் படி கோரிக்கை வைக்கிறது, மூளையும் இதை ஏற்று, வலியை குறைத்துக் காண்பிக்கறதாம்! இன்னும் ஏராளமான நன்மைகளை இந்த சிரிப்பு நமக்கு தருகிறது.
நமது கேள்வி என்னவென்றால், இவ்வாறு சிரித்துப் பேசுவது மறுமை சம்பந்தப்பட்டதா? அதனால் கப்ர் வாழ்க்கைக்கு என்ன பயன்? மறுமையில் என்ன நன்மை? எனினும், மார்க்கம் அதை தடுக்கவில்லை.
அலங்காரம், நல்ல உணவுகளால் மறுமையில் என்ன பயன்?
விரும்பிய அலங்காரம் செய்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் வாட்சு, ஷூ, அழகழகான ஆடைகள், கூலிங் கிளாஸ், வட்டி, வாகனம் என எதையும் பயன்படுத்தலாம். மார்க்கத்தில் தடை இல்லை.
பெண்களாக இருந்தால், சொல்லவே வேண்டாம், தலை, நெற்றி, கண், மூக்கு, காது, கழுத்து என நூற்றுக்கணக்கான அலங்காரப் பொருட்கள், வரிசை கட்டி நிற்கின்றன. அதில் எதுவும் தடை செய்யப்படவில்லை. காதுல குத்தாம, மூக்குல குத்தாம எதையும் போட்டுக் கொள்ளலாம்.
அது போல உணவுகளில், என்னவெல்லாம் புதுவகையான உணவு உள்ளதோ, அனைத்தையும் சாப்பிடலாம், தவறில்லை. ஹாங்காங் நூடல்ஸ், தைவான் புரோட்டா, மலேசியா அத்தோ, அமெரிக்கன் பர்கர், ஆப்ரிகன் ஹாட்-டாக் வேணுமா? ஹலாலான அனைத்தையும் சாப்பிடுங்கள்.
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் – நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
சுவையாக சாப்பிடக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடா?
சுவையாக சாப்பிடக்கூடாது, அதிகமாக சாப்பிடக்கூடாது என்று மார்க்கம் எங்குமே சொல்லவில்லை. இதுவெல்லாம் தப்லீக் தஃலீம் போன்ற புத்தகங்கள் காட்டிய தவறான வழிகாட்டுதல்கள்.
தப்லீக் தஃலீம் போன்ற புத்தகத்தில், புனித ரமலானின் சிறப்பைக் கூறப் புகுந்த ஸகரிய்யா சாஹிப் எழுதியுள்ள தவறான வழிகாட்டலைப் பாருங்கள்.
”நோன்பு திறக்கும் பொழுது ஹலாலான உணவாக இருந்தாலும், அதை வயிறு புடைக்க அதிகமாகச் சாப்பிடாமலிருக்க வேண்டும். ஏனெனில், இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகின்றது. நோன்பு வைப்பதன் நோக்கம் மனோ இச்சைகளையும் மனிதனில் உண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும், மலக்குகளின் தன்மைகளையும் வளர்த்துக் கொள்வதாகும். பதினொரு மாதங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக்கொண்டால் உயிரா போய் விடப்போகிறது? (பக்கம் 62)
தவறி விட்ட உணவையும் சேர்த்துச் சாப்பிட்டு மனிதன் நோன்பு திறந்தால் நோன்பின் நோக்கமாகிய இப்லீஸை அடக்குதல், நப்ஸின் இச்சையை முறியடித்தல் ஆகியவை எவ்வாறு சாத்தியமாகும்? என்பதற்காக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதுகிறார்கள். (பக்கம் 62)
சுகவாசிகளின் வழக்கத்தைப் போன்று ஸஹர் நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது நோன்பின் நோக்கத்தைத் தவறச்செய்து விடுகின்றது என்று மராகில் பலாஹ் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள். (பக்கம் 64)”
அதிகமாகவோ, சுவையாகவோ சாப்பிடுவது சுகவாசிகளின் வழக்கமா? அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள்:
தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது” எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.
தூய்மையான உணவுகளைப் பற்றி பேசும் போது, அது இவ்வுலகில் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உரிய உணவாக இருந்தாலும் நாளை மறுமையில் ஈமான் கொண்ட மக்களுக்கு மட்டுமே உரிய உணவு என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் ஒரிடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் என்று கூறுகிறான்.
வகைவகையான உணவுகளாக இருந்தாலும், சுவையான உணவுகளாக இருந்தாலும், வேண்டியதை, அதுவும் இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! என்கிறான். ”பசி அடங்கிவிட்டால், போதும் எழுந்துவிடு” என்று அல்லாஹ் கூறவில்லை.
உலகம் மறுமைக்கான ஒரு சோதனைக் களம் தான், அதே நேரம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் அல்லாஹ் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை.
சுவையான உணவுகளை உண்பது மறுமை சம்பந்தப்பட்டதா? மறுமையில் அதற்கு நன்மை, தீமை உண்டா? நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை பற்றி அல்லாஹ் விசாரிப்பான் என்பதைத் தவிர, இதுவெல்லாம் இபாதத்தும் அல்ல, செய்யக்கூடாததும் அல்ல. நாம் விரும்பிய படி, உலகத்திற்காக செய்யும் செயல்கள். இதிலிருந்து, இவ்வுலகம் முழுமையாக மறுமைக்கானது மட்டும் அல்ல, இறைவன் அனுமதித்த வகையில் இந்த உலக இன்பத்தையும் அனுபவிக்கலாம் என்று விளங்குகிறது.
வியாபாரம் செய்தல்
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
உலகில் வாழ்வதற்கும், உணவு உண்பதற்கும் பொருளாதாரம் தேவை. அதை சம்பாதிக்க மார்க்கம் தடை செய்யவில்லை என்பது சரி. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒருவனிடத்தில் 30 வருடத்திற்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு காசு, பணம் இருந்தாலும் அவன் மீண்டும் பொருளாதாரத்தை திரட்டுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. யாரிடத்திலெல்லாம் ஒரு கோடி ரூபாய் இருக்கிறதோ, அவர்கள் அதோடு வியாபாரத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, பள்ளியில் வந்து கிடக்க வேண்டும் என்று குர்ஆனும் கூறவில்லை, நபியவர்கள் கூறவில்லை.
நீ விரும்பினால், இன்னும் சம்பாதிக்கலாம், எந்த தவறும் இல்லை. இவ்வாறு சம்பாதிப்பது மறுமை நன்மை சம்பந்தப்பட்டதா? தேவைக்கு போக, அதிகமாக சம்பாதித்தாலோ, சம்பாதிக்காவிட்டாலோ மறுமையில் குற்றமா?
வழிப்போக்கனை போல் வாழ்!
ஆனால் பொதுவாக மக்களுக்கு மத்தியிலே ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த உலகத்தில் நாம் வழிப்போக்கனைப் போல வாழ வேண்டும் என்று நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள்; எனவே நாம் இவ்வுலகத்தில் எந்த ஆசாபாசமும் இல்லாமல் ஒரு பஞ்சப்பராதியைப் போன்று போல வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்நியனைப் போன்று, பிரயாணியைப் போன்று வாழவேண்டும் என்பதற்கு எந்த ஆசாபாசமும் இல்லாமல் வாழ வேண்டும் என்று பொருள் அல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 6416) .
அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போல வாழ வேண்டும். அதற்குரிய விளக்கத்தை காண்போம். அதே நேரத்தில் நாம் விரும்பிய விளையாட்டுகளை விளையாடலாம். விரும்பிய உணவுகளை விரும்பிய ஹோட்டலில் சென்று சாப்பிடலாம். விரும்பிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். விரும்பி ஆடைகளை வாங்கி அணியலாம்.
விரும்பிய வாகனங்களை வாங்கி ஓட்டலாம். இதுவெல்லாம் “பிரயாணியாக இரு, அந்நியனாக இரு!” என்பதற்கு எதிரான செயல்கள் அல்ல. பிரயாணியாக இரு என்று கூறிய அதே நபியவர்கள் தான் விளையாட்டுகளை விளையாடி இருக்கிறார்கள். மறுமை சம்பந்தப்பட்ட செயல்களை மாத்திரம் நபியவர்கள் செய்யவில்லை. உலகம் சம்பந்தப்பட்ட விளையாட்டையும் விளையாடியுள்ளார்கள்.
ஒட்டப்பந்தயம் மறுமை சம்பந்தப்பட்டதா?
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா ரலி அவர்களுடன் ஓட்டப்பந்தயம் விளையாடி உள்ளார்கள். இது மறுமை சம்பந்தப்பட்ட நிகழ்வா?
“நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள். பிறகு என்னிடத் தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர் களை முந்தினேன்.
அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது. நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப் பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென் றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே ”அதற்கு பதிலாக இது” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல்: (அஹ்மத்: 26277)
உங்களது மகன் உங்களை கிரிக்கெட், கேரம் போர்டு, செஸ் விளையாடலாம் என்று அழைத்தால், தாராளமாக போங்க! என்ன தவறு இருக்கிறது?
”எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன இருக்கிறது? நான் ஒரு வழிப்போக்கன். வழிப்போக்கன் கிரிக்கெட் விளையாடுவானா?” என்று தத்துவம் பேசினால், விளையாட கூட அனுமதிக்காத இந்த மார்க்கம் ஒரு மார்க்கமா! என்று இஸ்லாத்தின் மீதே அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டு விடும்.
பள்ளிக்கூடத்தில் ஒரு போட்டி வைக்கிறார்களா? அதில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். இதற்கெல்லாம் மார்க்கம் குறுக்கே வருவதில்லை. இது மறுமை சம்பந்தப்பட்ட செயலும் அல்ல.
தனது மனைவி ஆயிஷா ரவி பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இது மறுமை சம்பந்தப்பட்ட நிகழ்வா? ”ஆயிவே, நீ ஒரு வழிப்போக்கன், இதெல்லாம் விளையாடலாமா?” என்று கேட்டார்களா? நாள் முழுவதும் குர்ஆனை ஓது, நாள் முழுவதும் தொழு! என்று உபதேசம் செய்தார்களா? அல்லது ஆயிஷா(ரலி) அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த குதிரை பொம்மையைப் பார்த்து, சிரிந்தார்களா?
நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடைய விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன? ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.
அவைகளில் தோலாலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள். இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விப் பட்டதில்லையா? என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.
அறி: ஆயிஷா (ரலி),
நூல்: (அபூதாவூத்: 4932)
தனது மனைவி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், ”நபியின் மனைவிக்கு என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது? போய் தொழு, நோன்பு வை, தாவா பன்னு” என்றார்களா? அல்லது அதை அங்கீகரித்து சிரித்தார்களா? இது தான் உலகம். இதை அனுபவிப்பதை மார்க்கம் தடுக்கவில்லை.
எப்போதுமே மறுமை சிந்தனைகள் இருக்க வேண்டும். விளையாட கூடாது ஓய்வெடுக்க கூடாது, நிம்மதியாக தூங்கக் கூடாது, நன்றாக சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் இஸ்லாம் கூறும் அறிவுரையா? அல்லது உங்களுடைய மனோ இச்சையா?
கொஞ்சம் இப்படி, கொஞ்சம் அப்படி!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள்.
அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5305))
சாப்பிடு, விளையாடு, தூங்கு, இவ்வுலகத்தை அனுபவி. வெறும் மறுமைக்கு மாத்திரம் அல்ல, இவ்வுலக இன்பத்தை அனுபவிக்கவும் சேர்த்து தான், இந்த துன்யாவின் வாழ்க்கை. நான் உலகத்தை அனுபவிக்கவே மாட்டேன் என்று யோரேனும் சொன்னால் அது போலியான பேச்சு. நபியவர்களே அப்படி இருந்ததில்லையே! நபியை மிஞ்சிய ஒரு தக்வாதாரி யாரும் இல்லை.
மறுமையில் அதிகமாக நன்மைகளை பெற விரும்புவோர் அதிகமான அமல்களை செய்யட்டும் என்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. ஆனால் அதற்காக, உலகத்தை அனுபவிக்கக் கூடாது என்று சொல்வது இஸ்லாம் காட்டும் அறிவுரை அல்ல.