மரணமும் மறுமையும் – 01 (முன்னுரை)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்
இந்த தொடர் உரையில்… 

மரணமும் மறுமையும் என்ற இந்த தொடர் உரையில்

  • மரணத்தை பற்றிய சிந்தனையின் அவசியம்
  • மரண நேரத்தில் மனிதனின் நிலை
  • மரண நேரத்தில் சைத்தானின் ஊசலாட்டம்
  • மரண நேரத்தில் செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய செயல்கள்
  • அதற்குபின் கப்ரில் நடக்கும் விஷயங்கள்
  • மரணத்திற்குப் பின் நம் குடும்பம்
  • அதற்குப் பின்னர் இவ்வுலகம் அழிக்கப்பட்டு நாமெல்லாம் எழுப்பப்படும் நாளில் நடைபெறும் விசாரணை

அந்த விசாரணைக்கு பிறகு இறைவன் தரும் நரகம் அல்லது சொர்க்கம் எனும் பாக்கியம், இதற்காக நாம் செய்ய வேண்டிய அமல்கள் என பல்வேறு வகையான தகவல்களை இந்த ரமலான் தொடர் உரையிலே பார்க்க இருக்கிறோம்.

நம்முடைய இறுதி இலக்காக இருக்கிற மறுமையின் சொர்க்கத்தை அடைவதற்கு மிக முக்கியமான கட்டமாக இருப்பது நம்முடைய மரணம்.

இரண்டு விதமான மரண பயங்கள்!

பொதுவாக மனிதர்களிடம் இரண்டு விதமான மரண பயங்கள் உள்ளன.

  1. நமக்கு மரணம் வந்துவிட்டால், மறுமையில் நம்முடைய நிலை என்னவாகும் என்ற இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த நியாயமான மரண பயம்.
  2. மற்றொன்று, பஸ்ஸில் போனால் பஸ் எங்கயாவது விபத்தில் சிக்கிவிடுமோ? இந்த ஊசி போட்டால், மயக்கம் போட்டு செத்து விடுவேனோ? என்று செத்துப் பொய் விடுவேனோ என்று சாவை நினைத்த பயம்.

இந்த இரண்டாவது கூட்டம், சதாவும் சாவை நினைத்து, மரணத்தை நினைத்து பயந்து கொண்டே வாழ்க்கையை வாழும் கூட்டம்.

அறிவியலில் இதை மரண பயம் (Thanatophobia – தனடோஃபோபியா) என்கிறார்கள். நாள், குறிப்பிட்ட மணி நேரத்தில் இறந்து போவோம் என்ற பயம்.  மக்கள் கூட்டத்திலும், நெருக்கடியான இடங்களிலும் மூச்சுத் திணறி இறந்து விடுவோமோ என்ற பயம், வீதியை, சாலைகளைக் கடக்கும் போதும் பயம்.

நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும் போதே பயம். நீண்ட சுவர்கள், உயர்ந்த கட்டிடங்கள் அருகில் செல்ல மாட்டார். அவை தன்மீது விழுந்து விடுமோ என்று பயம். வீதி, சாலை, பாலங்களைக் கடக்கும் போதும் பயம். மலை உச்சியிலிருந்து அல்லது மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது, விழுந்து விடுவோமோ என பயம். அந்த பயத்தினால் சுயகட்டுப்பாடு இழந்து விழுந்தும் விடுவார்.

இதுல கொடுமை என்னான்னா! ”சொன்ன மாதிரி செத்துத்துட்டாருய்யா, பெரிய மகானாக இருப்பார்!” என்று மக்கள் நினைப்பார்கள், ஆனால், இது ஒரு நோய் என்கிறது நவீன மருத்துவம். மரண பயத்தால் இறப்பது.

ஒரு அநீதியை எதிர்த்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட களத்திற்கு அழைத்தால், பயம்.  காவல்துறை அராஜகத்தை கண்டித்து பேச அழைத்தால் பயம். மாற்றுக் கருத்து உடையவர்களிடம் பேச பயம், ஒரு நோட்டீஸ் கொடுக்க பயம், தாவாவுக்கு அழைப்பதற்கு பயம், இப்படி வாழக்கை முழுவதுமே பயம் பயம் பயம். சாவை நினைத்தும் பயம்.

பஸ்ல எங்கயாவது போகலாம் என்று அழைத்தால், ஊட்டிக்கு போகலாம் வாங்க என்று அழைத்தால், “ஐயோ! பஸ் அப்படியே உருண்டு விழுந்துருச்சுன்னா..”,

அப்ப பைக்ல போலாம். “அது அதைவிட ஆபத்து, யாராவது வந்து மோதிருவான்.” நடந்தாவது போலாம் என்றால், “லாரிக்காரன் வந்து அடிச்சிடுவான்” என்பான்.  இவன் வீட்ல கூட நிம்மதியா உட்கார மாட்டான். “தலைக்கு மேல சுத்துற ஃபேன் தலையில விழுந்துடுமோ?” என்று பயந்து கொண்டே இருப்பான். இவர்களை மருத்துவர்களிடம் கூட்டிச் சென்று வைத்தியம் பார்க்க வேண்டும். இவர்களைப் பற்றி நாம் இந்த ரமளான் உரையில் பார்க்கப் போவதில்லை.

மாறாக மரணித்த பிறகு இறைவனிடத்தில் நம்முடைய நிலை எப்படி இருக்கும்? மரணித்து விட்டால் நன்மைகளை செய்ய முடியாதே, நாம் செய்த தீமைகளுக்கு பாவமன்னிப்பு தேட முடியாதே என்பதற்காக மரணத்தை நினைத்து பயம். இந்த பயம் கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்திலும் இருக்க வேண்டும். இந்த மரண பயம் தான் நம்முடைய உள்ளத்தை பக்குவப்படுத்தும்.

மரணம் என்பது தேர்வு முடியும் நேரம்

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு தேர்வுக் களம்.  ஒரு சில மணி நேரங்கள் தேர்வு எழுதிய பிறகு நமது விடைத்தாளை ஒப்படைத்து விட்டு நாம் எழுதிய தேர்வுக்கான முடிவுகளை பலன்களை பெறக்கூடிய இடம் தான் நாளை மறுமை.

இதில் மரணம் என்பது நமது தேர்வுத்தாளை ஒப்படைக்க கூடிய இறுதி நேரம்.

புத்திசாலி மாணவன்:

நன்றாக படிக்கக்கூடிய புத்திசாலியான மாணவன் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தி, பதில்களை சரியாக எழுதி, நேரம் முடிவதற்கு முன் தனது பதில்களை மீண்டும் மீண்டும் சரிபார்த்து, தவறு ஏதேனும் கண்ணில் பட்டு விட்டால் பதட்டம் அடைந்து அதனை உடனே திருத்தி, கண் கொத்தி பாம்பாக அனைத்து பதில்களையும் சரிபார்த்த பிறகு, பேப்பரில் கோடு போட்டு அதனை அழகாக்கி செதுக்கி சீராக்கி தேர்வுத் தாளை கொடுப்பான்.

முட்டாள் மாணவன்:

மற்றொரு பக்கம் தேர்விலே வெற்றி பெற விரும்பாத, ரிசல்டைப் பற்றி கவலைப் படாத மாணவன். மூன்று மணி நேரத்தில் விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டே ஒருவன் சரியான பதில்களை எழுதாமல், பேப்பரில் கிறுக்கி கொண்டிருந்தால், படம் வரைந்து விளையாடிக் கொண்டிருந்தால் அவனைப் பற்றி நாம் என்ன கூறுவோம்? ”முட்டாளாக இருக்கிறானே!” என்போம். ஆனால் இவன்  பெரிய முட்டாள் கிடையாது. இவனை விட பெரிய முட்டாள் ஒருவன் இருக்கிறான்.

பெரிய முட்டாள் யார் தெரியுமா?

இவனை விட பெரிய முட்டாள் யார் தெரியுமா? தான் எழுதுவது தேர்வு என்று தெரியும். இந்த தேர்வில் தோல்வியடைந்தால் மிகப்பெரிய இழிவும் கஷ்டமும் வேதனையும் கிடைக்கும் என்று தெரியும். தேர்விலே வெற்றி பெற்றால் கண்ணியமும் மதிப்பும் உயர்வும் கிடைக்கும் என்று தெரியும். தேர்வும் மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும் என்றும் தெரியும். அனைத்தையும் தெரிந்து கொண்டு தேர்வு அறையில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடிய மனிதன், தேர்வு முடியும் நேரத்தில் கூட தனது பதில்களை சரிபார்க்காத மனிதன் தான் மிகப்பெரிய முட்டாள். அப்படிப்பட்ட மனிதர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஒரு மாத ரமலான் உரை.

மரணத்தையே நினைவு கூறாத முதல் வகை கூட்டம்.

தேர்வு முடியும் நேரத்தை பற்றி பற்றி கவலைப்படாத, அல்லது கவனக்குறைவாக இருக்கிற ஒரு மாணவனை போன்றது தான், மரணத்தை பற்றி நினைவு கூறாத ஒரு மனிதனின் நிலை.

மரணத்தை பற்றிய சிந்தனை தான் மறுமையில் நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற இவ்வுலக வாழ்க்கையை, செம்மையாகவும், சீராகவும் மாற்றுவதற்கு உதவுகிறது.

மரண சிந்தனை இல்லாதவனுக்கு மறுமை பற்றிய சிந்தனை இருக்காது. ஒருவன் மரணத்தையே மறந்து வாழ்ந்திருக்கும் போது, மறுமையில் வெற்றி பெறுவது தோல்வி அடைவது பற்றி யோசிக்கவே மாட்டான்.

மரண சிந்தனையே மறுமை சிந்தனையின் அடிப்படை

மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் போடப்பட்டு நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கை. இது தான் இஸ்லாம் நமக்கு சொல்லும் செய்திகளிலேயே மிகவும் முக்கியமானது, முதன்மையானது. அந்த மறுமை வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமெனில், இவ்வுலகில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், மரண சிந்தனையோடு நிறைவேற்ற மார்க்கம் வலியுறுத்துகிறது.

மரணத்தை மறந்த மனிதனின் செயல்பாடுகள்

மறுமையின் அடிப்படையாக இருக்கிற மரணத்தை மறந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய பேச்சு, சிந்தனை, செயல்பாடுகள் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் சரியான முறையிலே இருக்காது. மரண, மறுமை சிந்தனையோடு செய்கிற வியாபாரத்திற்கும் மறுமை சிந்தனை இல்லாமல் செய்கிற வியாபாரத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.

உதாரணத்திற்கு ஒருவர் வியாபாரம் செய்கிறார். மறுமை சிந்தனை உள்ளவர் ஒரு பொருளை விற்கும் போது, ஒரு மருந்தை விற்கும் போது, அந்த மருந்து காலாவதியாகாமல் இருக்கிறதா? தரமான மருந்தா? என்று பார்த்த பிறகு, சரியாக இருந்தால் மட்டுமே விற்பனை செய்வார்.

மரண, மறுமை சிந்தனை இல்லாமல் விற்பனை செய்பவர் காலாவதியான மருந்தாக இருந்தால் அந்த தேதியை அழித்துவிட்டு, பணம் கிடைத்தால் போதும் என்ற ஒற்றை இலக்கோடு, எதைப்பற்றியும் கவலைப் படாமல், அதை விற்பனை செய்வார். இதுவெல்லாம் நடப்பதில்லையா? ஏன், இதை விட அநியாயங்களைக் கூட, சர்வ சாதாரணமாக செய்வார்.

மாத்திரை என்று விற்கப்படும் சுண்ணாம்புகட்டி

சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த ஒரு செய்தி, போலியாக மாத்திரைகளை தயாரித்து பிரபல நிறுவனங்களின் பெயர்களிலே அவற்றை போலி அட்டைப்பெட்டிகளில் போட்டு பல மருந்து கடைகளுக்கு விற்ற சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னால் நாட்டையே அதிர வைத்தது.  போலியான மாத்திரை என்றால் தரம் குறைந்த மாத்திரை அல்ல முழுவதுமாக போலி வெறும் சுண்ணாம்புக்கட்டிகள்!

தெலங்கானா மாவட்டத்தில், மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் நடைப்பெற்ற சோதனையில் சுமார் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. பரிசோதனையில் அத்தனையும் சாக்பீஸ் பவுடரும், ஸ்டார்ச் மாவும் நிரப்பப்பட்ட மருந்துகள் என்பது வெளியாகி அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

https://kamadenu.hindutamil.in/national/fake-medicines-worth-3335-laksh-seized-in-telugana

  • கடுமையான வயிற்று வலி, கிட்னியில் கல் (சிறுநீரகக் கல்), வலி தாங்க முடியவில்லை என்று அழுது கொண்டிருக்க கூடியவன் இந்த மருந்தை வாங்கி சாப்பிட்டால் என்னவாகும்?
  • கண் பார்வை மங்கலாக இருக்கிறது. காது சரியாக கேட்கவில்லை. என்று டாக்டரிடம் போய், மருந்து கேட்டு, மெடிக்கலில் இந்த சுண்ணாம்பை, மாத்திரை என்று வாங்கி சாப்பிட்டால் நோய் எப்படி சரியாகும்? வயதாகிவிட்டது மாத்திரை கொடுத்தும் சரியாகவில்லை என்று மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள்.
  • வயிற்றில் கேஸ் ட்ரபுள், கடுமையான நெஞ்செரிச்சல், தூங்க முடியவில்லை என்று ஓடோடி சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறான். கொடுமை! அதே நெஞ்செரிச்சலை அதிகமாக தூண்டக்கூடிய சுண்ணாம்பை சாப்பிட்டால் அந்த மனிதனுடைய நிலை எவ்வளவு மோசமாக ஆகும்?

இதுவே ஒரு குழந்தைக்கு நடந்தால், மூச்சு விட என் குழந்தை சிரமப்படுகிறது, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது ஏதாவது ஒரு மாத்திரையை கொடுங்கள் என்று வாங்க கூடிய தாய் தனது பிள்ளைக்கு வரும் சுண்ணாம்பு கட்டி கட்டியைத்தான் கொடுத்து இருக்கிறாள் என்றால் இது எவ்வளவு பெரிய அநியாயம்? இருக்கும் நோய் இன்னும் அதிகம் ஆகிவிடுமேடா, பாவிகளா! இதை விற்பனை செய்யக் கூடியவன் தனக்கு இவ்வாறு ஒருவர் செய்தால் அதை ஒத்துக் கொள்வானா?

இது போன்ற போலி மருந்துகளை சாப்பிடும் போது, உடலில் நஞ்சுத்தன்மை அதிகரித்தல், உடலில் கெமிக்கல் சீர்தன்மையின்மை, ஜீரண கோளாறு பல் வீணாகுதல் ஊட்டச்சத்து குறைபாடு என ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குமாம். உன்னை நம்பி காசு கொடுத்து மருந்து வாங்கி சாப்பிட்ட எனக்கு எதற்கடா இவ்வளவு பெரிய தண்டனை?

இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. சமீபத்தில் டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை சாப்பிட்ட 68 குழந்தைகள் அந்த நாட்டில் இறந்துள்ளனர். அதற்கு பிறகு உரிமம் ரத்து, கைது.. போன உயிர் திரும்பி வருமா?

அல்லாஹ் கூறுகிறான்:

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்.

(அல்குர்ஆன்: 5:32)

வியாபாரத்தில் ஏமாற்றுதல், கொடுக்கல் வாங்கலில் நேர்மையின்மை, பிறருக்கு அநீதி இழைத்தல், என‌ மரண, மறுமை நம்பிக்கை இல்லாதவன் உடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.

மனசாட்சிக் கூட்டம்

இன்னும் சிலர் பிறருக்கு அநீது இழைப்பது தவறு என்று மனசாட்சிப்படி நடப்பவர்கள்.

உலகத்தில் எதை செய்தாலும் அதில் கிடைக்கும் இலாபத்தை கணக்கிட்டு அந்த செயலை செய்யும் மனிதன் மனசாட்சி படி நடந்தால் அதனால் என்ன லாபம் கிடைக்கிறது? ஒரு லாபமும் இல்லை. மனசாட்சி படி நேர்மையாக லஞ்சம் வாங்காமல் இருந்தால் அவனுக்கு லாபமா நஷ்டமா? மனசாட்சிப்படி பொய் சொல்லாமல் இருந்தால் அது லாபமா நஷ்டமா?

இந்த மனசாட்சி கூட்டத்துல இருக்கிறவன் பலபேர் தொழுக வரமாட்டான், அல்லாஹ் அன்பானவன், தொழுகாவிட்டால் நரகத்தில் போட்டுவிடுவானா? நம்ம மனசாட்சிக்கு நல்லவனாக நடந்தாலே, இறைவன் நமக்கு சொர்க்கத்தை தருவான், என்பான். அதாவது, தன் மனசுக்கு எது நல்லது என்று படுகிறதோ, அதை செய்பவன். தன் மனசுக்கு எது தீயது என்று படுகிறதோ, அதை ஓரளவு செய்யாமல், அதில் மன அமைதி அடைகிறவன்.

மனசாட்சி படி நல்லவனாக நடந்து கிடைக்கும் மன அமைதி எனும் லாபத்தை விட, மனோ இச்சைப்படி, சுயவிருப்பத்தின் படி, நல்லது என்று நாமாக முடிவு செய்து ஒரு செயலை செய்தால், மறுமையில் நாம் நஷ்டவாளிகளாகத் தான் இருப்போம், என்று திருமறைக் குர்ஆன் எச்சரிக்கிறது.

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏

(நபியே!) எவன் தன்னுடைய (மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

(அல்குர்ஆன்: 45:23)

قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ؕ‏

“செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 18:103)

اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 18:104)

ஆழமான மறுமை நம்பிக்கை இல்லாத ஒரு கூட்டம்.

மற்றொன்று, ஆழமான மறுமை நம்பிக்யை இல்லாத ஒரு கூட்டம்.  “மறுமை பற்றிய ஆழமான நம்பிக்கை இல்லாமல், “மறுமை இருக்கும், இருக்கலாம்!” என்று அரைகுறையாக நம்பும் ஒரு கூட்டம். மனசாட்சி படி நடப்பது, அரைகுறையாக அல்லாஹ்வை நம்பி நன்மை செய்வது போன்ற காரியங்களால், மறுமையில் எந்த பயனும் இல்லை. அரைகுறையாக அல்லாஹ்வை நம்புவனைப் பற்றி  திருமறை குர்ஆன் கூறுகிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்.

(அல்குர்ஆன்: 22:11)

சிந்தித்தால் உறுதியான இறைநம்பிக்கை ஏற்படும்

அரை குறை ஈமானுக்கு என்ன காரணம்? இறைவனைப் பற்றி, அவன் படைப்புகளைப் பற்றி, சிந்தித்தால் உறுதியான இறைநம்பிக்கை ஏற்படும். நாம் தான் சிந்தித்துப் பார்ப்பதில்லையே! சிந்தித்து ஈமான் கொள்வதில்லையே! ஒரு வீடு கட்டுவதற்கு பல மாதங்கள் சிந்திக்கிறோம், திட்டமிடுகிறோம். ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு மாதக்கணக்கில் சிந்தித்து, ”கண்ணு நல்லா இருக்கா? மூக்கு நல்லா இருக்கா, பல் எல்லாம் வரிசையாக இருக்கா”? என்று பார்த்துப் பார்த்து முடிவெடுக்கிறோம்.

ஒரு பல் கோணலாக இருந்தால் அதற்கு பல மணி ஆலோசனை வீட்டில் நடக்கும். பல் கோணலா இருக்கே, இந்த பொண்ணை எடுக்கலாமா? வேண்டாமா? என்று.

சிவப்பு புடவைல கருப்பு கோடு இருக்கனும், பச்சை புள்ளி இருக்கனும், புள்ளி பெருசாகவும் இருக்கக் கூடாது, சிறுசாகவும் இருக்கக் கூடாது என்று ஒரு புடவையோ நகையோ வாங்குவதற்கு கூட பல மணி நேரங்கள் சிந்திக்கிறோம்.  ஆனால் இறைவனைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லையே! சிந்தித்தால் அவனுடைய வல்லமை பற்றிய ஆற்றல், நம் உள்ளத்திலே ஆழப்பதியும்! நம்முடைய ஈமான் உறுதியாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் ஓரிடத்தில் கூறுகிறான்:

وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌ ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

(அல்குர்ஆன்: 16:8)

நாம் கண்ணில் பார்க்கும், குதிரை, கழுதை மட்டுமல்ல, வெறும் கண்ணால் பார்க்க முடியாதவற்றையும் படைக்கிறான். நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

சும்மா உட்கார்ந்து சிந்தித்திருக்கிறோமா?

என்றைக்காவது ஒரு பச்சைப்பட்டாணியை, கத்தரிக்காயை, கடலைப்பருப்பை கையில் எடுத்து அதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறோமா? சிந்தித்து இருக்கிறோமா? சிந்திப்பவனைக் கூட, வேறு மாதிரி பார்க்கும் நிலையில் நம் சமுதாயம் இருக்கிறது.

”இட்லி, சாம்பாரை கொடுத்தா, தின்னுட்டு வேற வேலையைப் பார்ப்பியா? என்டா ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க? நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்தான்.” என்று கேட்கிறோமா? இல்லையா?

அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படுகிற மருந்துகளுக்கான தேசிய நூலக இணையதளம் பயிர் வகைகளை பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரசித்த பெற்ற பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை இந்த இணையதளம் எழுதுகிறது. ஏராளமான முஸ்லிம் ஆய்வாளர்களும் அதில் இருக்கிறார்கள். போய் பாருங்கள். இதற்கெல்லாம் வாழ்வில் நாம் நேரம் ஒதுக்குவதே இல்லை!

(அவரை போன்ற) பயிறு வகைகள், பருப்பு வகைகள் அவை பயிரிடப்படும் மண்ணில் ஒரு விசித்திரமான வேலையைச் செய்கிறதாம்.

மண்ணில் உள்ள பாக்டீரியாக்களுடன் ஒரு சிறப்பு கூட்டுவாழ்வு உறவைக் கொண்டுள்ளன. அதாவது, இந்த பயிர்கள் மண்ணில் உள்ள பாக்டீரியாவும் இணைந்து கைகோர்த்துக் கொண்டு, நண்பர்களாக மாறுகிறது.

இந்த இரு நண்பர்களும் கைகோர்த்துக் கொண்டு, மிகப்பெரிய தொழிற்சாலை செய்யும், நைட்ரஜன் தயாரிக்கும் வேலையை சிறப்பாக, எந்த கலப்படமும் இல்லாமல் செய்து முடிக்கிறது. காற்றில் இருந்து நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் மண்ணில் உற்பத்தி செய்கிறது.

இரசாயன உரங்கள் தேவையில்லாமல் இயற்கையாகவே மண்ணின் வளத்தை அதிகரிக்க விவசாயிகள் மற்ற பயிர்களுடன் சுழற்சி முறையில் பயறு வகைகளை மூடு பயிராக பயன்படுத்துகின்றனர். தீங்கு விளைவிக்கும் செயற்கை நைட்ரஜன் உரங்களின் தேவையை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான சூழலுக்கு பங்களிக்கிறது. இது எப்படி என்று சற்று விரிவாக பாருங்கள்.

நம்பமுடியாத அதிசய செயல்பாடு!

பயிர்கள் ஃபிளாவானாய்டுகள் (FLAVONOIDS) எனப்படும் ஒரு நொதியை மண்ணில் உற்பத்தி செய்கிறது. இதைப் பார்த்து RHIZOBIUM எனப்படும் பாக்டீரியாக்கள் ஓடோடி வருகின்றன. அவைக்களுக்காக Nodules எனப்டும் சிறிய சிறிய பல லட்சம் வீடுகளை இந்த பயிர்கள் கட்டித்தருகிறது. அந்த வீடுகளுக்குள் சென்று, தனக்காக உருவாக்கப்பட்ட உணவை சாப்பிட்டு,  இந்த பாக்டீரியாக்கள் உயிர் வாழ்கிறது.

அந்த பாக்டீரியாக்கள் தனக்கு கொடுக்கப்பட்ட விருந்தை சாப்பிட்டு முடித்த பிறகு, அவை Ammoniam எனப்படும் அம்மோனியாவை காற்றிலிருந்து உருவாக்குகிறது. அதாவது, விருந்து சாப்பிட்டு விட்டு, விருந்தளித்தவருக்கு ஒவ்வொரு பாக்டீரியாவும் ஒரு கிஃப்ட் கொடுத்து விட்டுச் செல்கிறது.

பாக்டீரியாக்களுக்கு விருந்தளித்த பயிர் தாவரங்கள் இந்த அம்மோனியாவைப் பயன்படுத்தி, மற்ற தாவரங்கள் பயன்படுத்த தகுதியான நைட்சஜனை எந்த கலப்படமும் இல்லாமல் உற்பத்தி செய்கிறது. அதைக் கொண்டு தான் பிற செடி, கொடிகள், அவை வளர்வதற்குத் தேவையான புரோட்டீன், நியூக்லிக் அமிலம் மற்றும் பல அமிலங்களை உற்பத்தி செய்கிறதாம். என்னே ஒரு அதிசய நிகழ்வு! இதை திட்டமிட்டவன் யார்? இதை படைத்தவன் யார்?  அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்:
وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌ ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏

16:8. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

(அல்குர்ஆன்: 16:8)

இதையெல்லாம் சிந்திக்கும் போது இறைவனைப் பற்றிய, மறுமையைப் பற்றி நம்பிக்கை நம் உள்ளத்திலேயே ஆழமாக பதியுமா? இல்லையா?

மறுமை உறுதியாக நம்பும் ஒரு சாரார்.

இறுதியாக ஒரு சாரார், மரணத்தை எதிர்பாா்த்து மறுமையை உறுதியாக நம்பி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, இறைவன் வழங்கும் பரிசான சொர்க்கத்தை, இறைவனது திருப்தியைப் பெறும் ஒரு சாரார். இவர்களாக இருப்பது, இந்த சாராராக மாறுவது தான் இந்த ஒரு மாத ரமளான் உரையின் நோக்கம்.

மறக்க முடியாத காசாவின் காட்சி:

மரணத்திற்கு முன்பு, இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்ல, தன் மரண நேரத்திலும், தான் நேசிக்கக் கூடிய உறவுகளின் மரண நேரத்திலும் கூட இறைவன் மீது ஆழமான நம்பிக்கை பல மக்கள் நம் கண் முன்னால் நிற்கிறார்கள்! காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஒரு மிகப்பெரிய கட்டிடம் விழுந்து நொறுங்கி அதன் அடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கும் போது அவனிடம் அவனது தாய் சொல்கிற வார்த்தை ” லா இலாஹ இல்லல்லாஹ்,  என்று எனது அருமை மகனை கூறு” என்று சொல்லும் அந்த தாயின், அந்த பிள்ளையின் மறுமையை நினைத்த மன உறுதி, ஆழமான நம்பிக்கை, நம் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும். அதற்காகவே இந்த உரை.

இறைவனது திருப்தியைப் பெறும் சுவர்க்கவாசிகள்:

إِنَّ اللهَ يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى؟ يَا رَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ أَلَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُونَ يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, “சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அதற்கு அவர்கள், “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ், “இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?” என்பான். அவர்கள், “அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்கள்மீது என் பொருத்தத்தை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபப் படமாட்டேன்” என்று கூறுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்: (முஸ்லிம்: 5444))

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلً

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

(அல்குர்ஆன்: 4:122)

ஆகவே, நாம் ஒருபோதும் மரணத்தை கண்டு நடுங்கும் கூட்டமாக இருக்கக் கூடாது.

மவுத்தை மறந்த கூட்டமாகவும் இருக்கக்கூடாது.

மனசாட்சி கூட்டமாக இருந்து விடக்கூடாது.

அரைகுறை ஈமான்தாரிகளாகவும் நாம் மரணித்து விடக்கூடாது.

மாறாக, மரணத்தை எதிர்பார்த்து, அற்குரிய தயாரிப்புகளை செய்து, இறைவனை சந்திக்கும் நாளில், இறைவனின் அன்பைப் பெற்று சுவனத்தை பெறும் மக்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் உள்ளத்தில் உறுதி கொள்வோம்.