08) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

 

08) காற்றுள்ள போதே தூற்றிக்

கொள்ள வேண்டும் 

 

மலக்குகள் உயிரை வாங்கும்போது நாம் நல்லவனாக வாழ்ந் திருக்கக்கூடாதா? என்ற எண்ணம் கெட்டவனுக்கு ஏற்படுகிறது. அப்போது தான் ஒவ்வொரு பாவியும் தான் செய்த பாவங்களை நினைத்து வருத்தப்படுவான். நன்மையை செய்வதற்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுவான். ஆனால் அவனுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காது.

எனவே மரணம் சம்பவிப்பதற்கு முன்பே மறுமை வாழ்வுக்குத் தேவையான நற்காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறந்த பிறகு இறைவனிடம் மன்றாட வேண்டிவரும். அப்போது எவ்வளவு மன்றாடினாலும் அதற்கு எந்தப் பயனும் இல்லை.

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம்வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 63:10)

لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:100)