9) மாதவிடாய்ச் சட்டங்கள்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

9) மாதவிடாய்ச் சட்டங்கள்

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் செய்யத்தக்க காரியங்களும், செய்யக் கூடாத காரியங்களும் இஸ்லாமில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

மாதவிடாயின் போது தொழக் கூடாது

நோன்பு நோற்கக் கூடாது

 

 فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي

மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 228)

மாதவிடாயின் போது விட்ட தொழுகைகளை திரும்பத் தொழ வேண்டியதில்லை. விட்ட நோன்பை நோற்க வேண்டும்.

قَالَتْ: كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ

மாதவிடாயின் போது விட்ட நோன்பை நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விட்ட தொழுகைகளைத் தொழுமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம்

மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதை புகாரீ-304, 306, 320, 325, 331 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

மாதவிடாய் நேரத்தில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை புகாரீ-1951 ஹதீஸில் காணலாம்.

மாதவிடாயின் போது கஅபா ஆலயத்தை தவாஃப் செய்யக் கூடாது

 سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: مَا لَكِ أَنُفِسْتِ؟. قُلْتُ: نَعَمْ، قَالَ: إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ

நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன்.

இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாவைத் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்து கொள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 294)

மாதவிடாய் நேரத்தில் தவாஃப் செய்யக் கூடாது என்பதை புகாரீ 294, 305, 1650, 5548, 5559 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.

மாதவிடாயின் போது பள்ளிவாசலுக்கு வரக்கூடாது

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்: 4:43)

குளிப்பு கடமையாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. ஆயினும் இந்த வசனத்தில் பள்ளிவாசலுக்குள் செல்வதைத் தான் குறிக்கும். பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்ற சொல்லப்பட்டுள்ளதில் இருந்து இதை அறியலாம்.

பள்ளிவாசல் வழியாக நுழைந்து பாதையைக் கடந்து செல்லலாம். ஆனால் அவ்வாறில்லாமல் பள்ளிக்குள் செல்லக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

குளிப்பு கடமையானவர்கள் பள்ளிவாசலில் ஒரு பொருளை எடுத்து விட்டு உடனே வெளியேறுவதாக இருந்தால் அவ்வாறு செய்யலாம். அல்லது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று உள்ளே கை நீட்டி பொருளை எடுக்கலாம்.

 عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ، قَالَتْ فَقُلْتُ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்து என்னிடம் கொடு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன். அப்போது அவர்கள் “மாதவிடாய் என்பது உனது கையில் இல்லை” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَقَالَ ” يَا عَائِشَةُ: نَاوِلِينِي الثَّوْبَ ” فَقَالَتْ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ فَنَاوَلَتْهُ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்த போது “ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!” என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மாதவிடாய் உனது கையிலில்லை” என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

(முஸ்லிம்: 504)

பிரசவத்தீட்டும் மாதவிடாய் போன்றது தான்

பெண்கள் குழந்தை பெற்ற பின் சில நாட்கள் இரத்தம் வெளிப்படும். இது அரபு மொழியில் நிஃபாஸ் எனப்படும். இந்த இரத்தப்போக்கும் மாதவிடாய் போன்றது தான்.

எவ்வளவு நாட்கள் இரத்தப் போக்கு வருகிறதோ அவ்வளவு நாட்கள் அவர்கள் மீது தொழுகை கடமை இல்லை. நோன்பும் கடமை இல்லை. இரத்தப்போக்கு நின்றவுடன் குளித்து விட்டு வழக்கம் போல் வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கங்கள்

மாதவிடாய் நேரத்தில் தொழுவது, நோன்பு நோற்பது, தவாஃப் செய்வது, பள்ளிவாசலுக்குள் வருவது ஆகியவை தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம்.

மாதவிடாய் நேரத்தில் பெருநாள் திடலுக்கு வரலாம்

பெருநாள் தினத்தில் துஆ செய்வதற்காகவும், மார்க்க உரைகளைக் கேட்பதற்காகவும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு வரலாம். ஆனால் தொழுகையின் போது மட்டும் விலகி இருக்க வேண்டும்.

 عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ: حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கண்ணிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

தொழும் இடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இக்கட்டளையை கேட்டுக்கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் எவருக்கேனும் தலையில் அணியும் முக்காடு இல்லையானால் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) முக்காட்டை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி),

(புகாரி: 351)

மாதவிடாயின் போது குர்ஆன் ஓதலாம்

மாதவிடாயின் போதும், குளிப்பு கடமையான நிலையிலும், உளூ இல்லாத நிலையிலும் திருக்குர்ஆனை ஓதலாம்; தொடலாம். மேற்கண்டவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் உள்ளவர்கள் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்: 56:79)

இந்த வாதம் முற்றிலும் தவறானதாகும்.

இவர்களின் வாதம் எவ்வாறு தவறானது என்பதைப் பார்த்துவிட்டு இதன் சரியான கருத்து என்னவென்று பார்ப்போம்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் “இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

(திருக்குர்ஆன்: 6:7)

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்று இவ்வசனமும் 2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

எழுத்து வடிவில் இல்லாமல் ஓதுதல் வடிவமாகவே குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது அதைக் கைகளால் தொட முடியாது. கைகளால் தொட முடியாத ஒன்றை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுவானா?

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொட முடியாது என்பதால் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே “இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள்” என்று கூற முடியும்.

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை. இறைவனிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தியைப் பெற்ற பிறகு எழுத்தர்களிடம் சொல்லி எழுதி வைத்துக் கொண்டதால் திருக்குர்ஆன் எழுத்து வடிவம் பெற்றது.

புத்தகமாக திருக்குர்ஆன் அருளப்பட்டு இருந்தால் அந்தப் புத்தகத்தைக் காட்டி இதைத் தொடமாட்டார்கள் என்று சொல்ல முடியும். ஒலி வடிவில் ஒன்றைச் சொல்லி விட்டு இதைத் தொடக் கூடாது என்று யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில் ஒலியைக் கையால் தொடமுடியாது. அப்படியானால் அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது?

இஸ்லாமிய நம்பிக்கைப்படி இறைவனிடம் ஒரு பதிவேடு உள்ளது. நடந்தவை, நடக்க இருப்பவை அனைத்தும் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் திருக்குர்ஆனும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வானவர்களாகிய தூய்மையானவர்கள் தான் தொட முடியுமே தவிர ஷைத்தான்களால் தொட முடியாது.

அத்தகைய பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்து தான் இந்தத் திருக்குர்ஆன் எடுத்து வரப்படுகிறது.

இதைத் தொடமாட்டார்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டைத் தான் குறிக்கிறது.

இதை நாம் சொந்த ஊகத்தில் சொல்லவில்லை. திருக்குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது. இதைத் தொடமாட்டார்கள் என்ற வசனத்தை மட்டும் பார்க்காமல் அதற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களுடன் சேர்த்துப் பார்த்தால் இதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வசனத்துக்கு முன்னர் உள்ள வசனங்களில் இருந்து பாருங்கள்!

77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க திருக்குர்ஆனாகும்.

  1. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

அதைத் தீண்ட மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அதை என்று சொல்லப்படுவது எதைக் குறிக்கிறது என்பது தான் இப்பிரச்சினையின் அடிப்படையாக அமைந்துள்ளது.

இவ்வசனத்திற்கு முன் 56:77,78 ஆகிய வசனங்களில் “இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்ற மதிப்புமிக்க திருக்குர்ஆன்” எனக் கூறப்படுகிறது.

அடுத்த வசனத்தில் “அதைத் தொட மாட்டார்கள்” என்று கூறப்படுகிறது.

எனவே “பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ள மூலப் பிரதி” என்பது தான் “அதை” என்பதன் பொருள்.

எனவே “அதைத் தொடமாட்டார்கள்” என்பது ஒலி வடிவமாக அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப் பிரதியைத்தான் குறிக்கும்.

லவ்ஹூல் மஹ்பூலில் பதிவு செய்யப்பட்ட அந்தக் குர்ஆனை தூய்மையானவர்களாகிய வானவர்கள் தான் தொட முடியும். ஷைத்தான்களால் தொட முடியாது என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது.

எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுவது தவறாகும். திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது. எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது. எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது.

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தத் திருக்குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும். “நீங்கள் தூய்மையாக இல்லை; நீங்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது” என்று கூறினால், எந்த நோக்கத்திற்காக திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு, திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்புக் கொடுத்துள்ளனர்.

(பார்க்க: புகாரீ-7, 2941, 4553)

அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பியிருக்கும் போது, திருக்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொட வேண்டும் என்று கூறுவது தவறாகும். இவ்வாறு கூறுவது திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி விடும்.

திருக்குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த வகையிலும் சான்றாக இவ்வசனம் அமைந்திருக்கவில்லை.

எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் திருக்குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம்; வாசிக்கலாம் என்பது தான் திருக்குர்ஆனிலிருந்து பெறப்படுகின்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகின்ற முடிவாகும்.

உளூ இல்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் சில நபிமொழிகளும் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

எனவே தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்குச் சான்றாக ஒரு செய்தியும் இல்லை. முஸ்லிமல்லாதவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் திருக்குர்ஆனைத் தொடலாம். ஓதலாம் என்பதே சரியான கருத்தாகும்.

மதவிடாய் நேரத்தில் திருக்குர்ஆனை ஓதலாம் என்பதிலிருந்து மற்ற திக்ருகள், தஸ்பீஹ்கள் ஓதலாம் என்பதை அறியலாம்.

மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளக் கூடாது

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!

(திருக்குர்ஆன்: 2:222)

 عَنْ أَنَسٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا، وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} البقرة: 222 إِلَى آخِرِ الْآيَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபித்தோழர்கள், (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள்.

அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்கு நேரத்தில் பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 507)

 

மாதவிடாய் நேரத்தில் உடலுறவைத் தவிர்த்து

கணவனுடன் நெருக்கமாக இருக்கலாம்

 

 أَنَّ أُمَّ سَلَمَةَ، قَالَتْ: حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمِيلَةِ، فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنُفِسْتِ قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَأَدْخَلَنِي مَعَهُ فِي الخَمِيلَةِ قَالَتْ: وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الجَنَابَةِ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக போர்வைக்குள்ளிருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்து கொண்டேன்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து பெருந்துடக்கின் (கடமையான) குளியலை நிறைவேற்றுவோம்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) ,

(புகாரி: 322)

 وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

(புகாரி: 300)

 أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ القُرْآنَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

அறிவிப்பர்: ஆயிஷா (ரலி),

(புகாரி: 297)

 عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ، فَيَشْرَبُ، وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ

மாதவிடாயின் போது நான் பருகிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் வாய் வைத்து அவர்களும் அருந்துவார்கள். மாதவிடாய் நேரத்தில் எலும்பைக கடித்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்களும் எலும்பைக் கடிப்பார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 300)

عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّكِئُ فِي حِجْرِي وَأَنَا حَائِضٌ، فَيَقْرَأُ الْقُرْآنَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 301)

 عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 295)

மாதவிடாய் இரத்தம்

ஆடையில் மாதவிடாய் பட்டு அது காய்ந்து இருந்தால் சுரண்டி விட்டு தண்ணீர் தெளித்து விட்டு அந்த ஆடையில் தொழலாம். ஈரமாக இருந்தால் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டு அதே ஆடையில் தொழலாம்.

 عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهَا قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الحَيْضَةِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ

ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி),

நூல்: புகாரீ-307

மனைவியின் மாதவிடாய் இரத்தம் கணவனின் ஆடையில் பட்டாலும் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டு தொழலாம்.

سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو الْقَاسِمِ ” يَكُونُ مَعِي فِي الشِّعَارِ الْوَاحِدِ وَأَنَا حَائِضٌ طَامِثٌ: إِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ، غَسَلَ مَا أَصَابَهُ، لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ، وَصَلَّى فِيهِ ثُمَّ يَعُودُ، وَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ، فَعَلَ مِثْلَ ذَلِكَ: غَسَلَ مَكَانَهُ لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ، وَصَلَّى فِيهِ ”

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்) ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: தாரமீ

மாதவிடாய் நின்றதும் குளிக்க வேண்டும்
فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي –

மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!” என்றார்கள்.’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 228)