8) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
8) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத் தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர் களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்,
நூல்: ஹாகிம், தப்ரானி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி இறந்தவரின் குடும்பத்தினர் ஜனாஸா தொழுகை தொழுதுள்ளனர். அதுவும் இறந்தவரின் வீட்டில் வைத்து தொழுதுள்ளனர். அதில் ஒரு பெண்ணும் கலந்து கொண்டுள்ளார் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது.
இதில் இருந்து பெண்களும் ஜனாஸா தொழுகையில் பங்கு பெறலாம் என்பதை அறிந்து கொள்கிறோம். ஊர் மக்கள் தொழுவதற்கு முன்னர் குடும்பத்தார் மட்டும் தொழுதுள்ளனர் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
‘ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் ‘தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்?
பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),
நூல்: முஸ்லிம்
பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை. தந்தைக்காக மகளோ, கணவனுக்காக மனைவியோ கூட ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற நிலை உள்ளது. பெற்ற மகளை விட வேறு யார் தந்தைக்கு சிறப்பாக துஆ செய்ய முடியும்?
தனது தந்தைக்காக நடக்கும் ஜனாஸா தொழுகையில் அவரது மகள் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டால் வீட்டிலேயே ஜனாஸாவுக்காக தொழுகை நடத்தும் உரிமையை யாரும் பறிக்க முடியாது.
ஒப்பாரி வைக்கக் கூடாது
கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.
இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?
இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தைப் பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை திறந்திருந்தார்கள் என்பதை பல ஹதீஸ்களில் காணுகிறோம்.
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அம்முறையில் இறந்தவரைப் பார்ப்பதில் குற்றமில்லை. உயிருடன் இருக்கும் போது எந்த எண்ணத்தில் மற்றவர்களைப் பார்க்கக் கூடாதோ அவ்வெண்ணத்தில் இறந்தவர்களையும் பார்க்கக் கூடாது.