6 ) நாஸிஹ் – மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம்
நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார்.
மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம். இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) சம்பந்தப்பட்ட பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
“அல்கமா என்பவரும் அஸ்வத் என்பவரும் இப்னு மஸ்வூத்(ரலி)யிடத்தில் சென்ற போது, “உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தொழுது விட்டார்களா?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே, அவ்விருவருக்கும் மத்தியில் அவர் நின்றார்.
அவ்விருவரில் ஒருவரை தனது வலப்பக்கமும் மற்றவரை இடது பக்கமும் ஆக்கினார். பிறகு அவ்விருவரும், கைகளை முட்டுகளின் மீது வைத்து ருகூஃவு செய்தார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அவ்விருவரின் கைகளை அடித்தார்கள்.
பிறகு, தனது இரண்டு கைகளை ஒன்றினைத்து, அவ்விரண்டயும் தனது தொடைகளுக்கு மத்தியில் வைத்தார்கள். தொழுது முடித்தபோது இவ்வாறுதான் நபி(ஸல்) அவாகள் செய்தார்கள் என்றும் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுகையின் ருகூஃவில் இரண்டு முட்டுக் கால்களை கைகளால் பிடிக்காமல் தொடைகளுக்கு மத்தியில் தனது கைகளை வைப்பர்களாக இருந்தார்கள். ஆனால் இது ஆரம்பத்தில் இருந்த சட்டமாகும். பின்னர் இரண்டு முட்டுக்கால்களையும் பிடிக்க வேண்டும் என்ற சட்டம் அதை மாற்றிவிட்டது பின்வரும் ஹதீஸின் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம்.
நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூஃவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார்.
அறிவிப்பவர்: முஸ்அப் பின் சஅத் (ரலி).
எனவே, மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
நபி(ஸல்) அவர்களே ஹதீஸே அதை தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகும்.
உதாரணம்:
“கப்ருகளை சந்திப்பதை விட்டும் உங்களை தடுத்திருந்தேன. (இதற்கு பிறகு) அவற்றை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மரணத்தை நினைவுப்படுத்துகிறது” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா(ரலி).
மேற்கண்ட செய்தியில் நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கப்ரை சந்திப்பதைத் தடுத்து பின்னர் அனுமதியளிப்பதின் மூலம் ஆரம்பத்தில் கூறிய சட்டத்தை பின்னர் மாற்றிவிடுகிறார்கள்.
நபித்தோழர் விளக்கம் அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துவிடும்.
உதாரணம்:
“சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்காது” என்பது (உளூ நீங்குமா? நீங்காதா?) என்ற இரண்டு விஷயங்களில் இறுதியானதாக இருந்தது என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸில் இரண்டு விஷயங்களில் இறுதியானதை ஒரு நபித்தோழர் குறிப்பிடுவதிலிருந்து மாற்றப்பட்ட சட்டத்தை அறிய முடிகின்றது.
வரலாற்று குறிப்பு அதைத் தெளிவு படுத்திவிடும்.
உதாரணம்:
“இரத்தம் குத்தி எடுத்தவனும், எடுக்கப் பட்டவனும் நோன்பை விட்டுவிட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி).
இந்த ஹதீஸின் சட்டம் பின்வரும் ஹதீஸின்படி மாற்றப்பட்டுவிட்டது.
நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள். நோன்பு நோற்று இருக்கும் போதும் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).
இவற்றில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மக்கா வெற்றியின் போது நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயம், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது ஹஜ்ஜத்துல் வதாஃ எனும் இறுதி ஹஜ்ஜின் போதாகும். இறுதி ஹஜ் என்பது மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வாகும்.
எனவே, வரலாறைக் கவனித்தால் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி முதலில் நடந்த சம்பவம் என்றும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அதற்குப் பின்னால் நடந்தது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஷத்தாத் (ரலி)யுடைய ஹதீஸின் சட்டத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் சட்டம் மாற்றிவிட்டது.
குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முரண்பாடின்றி விளங்கிக் கொள்ள நாஸிஹ், மன்ஸூஹ் பற்றிய அறிவு மிக அவசியம் என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும் அதற்குரிய விளக்கமாகத் தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ எனும் இறைச் செய்திகளாகும்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்.
மேற்கண்ட வசனம் இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை ஓங்கி உரைக்கின்றது.
இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்ற ஒரு வழியிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் ஹதீஸ் என்ற இன்னொரு வழியிலும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு ஆதாரங்களையும் இரண்டில் ஒன்று மற்றொன்றுடன் முரண்படாத வகையிலேயே இறைவன் அருளியிருக்கின்றான்.
ஏக இறைவனான அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்ற திருமறைக்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்பது குர்ஆன் கற்றுத் தரும் பேருண்மையாகும்.
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயமாக எதனை எடுத்துச் சொன்னாலும் அது வஹீ – இறைச் செய்தியாகத் தான் இருக்கும். அவர்கள் மனோஇச்சைப்படி, தான் நினைத்தவற்றையெல்லாம் பேசவோ, மார்க்கம் என்று கற்றுத் தரவோ மாட்டார்கள் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாக உணாத்துகின்றது.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும்.
இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்
ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும். இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.
அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள், குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல. செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது இறைவேதம் என்பதற்கு அனைத்து நபித்தோழர்களும் சாட்சிகளாக உள்ளனர்.
திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.
ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.
ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.
நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி வரும் என்றால் திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நபித்தோழர்கள் அரைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம் எனறே முடிவு செய்ய வேண்டும்.
ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும்.
அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியு மானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி) மற்றும் அபூஹுமைத் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.
நபியவர்களின் பேச்சில் தவறு ஏற்படும் என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுவதாக சில வழிகேடர்கள் வாதிக்கின்றனர். இவ்வாறு கூறுவது அவர்களின் அறியாமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நபியவர்கள் மார்க்கமாகப் பேசும் விஷயங்கள் வஹி எனும் இறைச் செய்தி ஆகும். அதில் ஒரு போதும் முரண்பட்ட விஷயங்கள் வரவே வராது. நபியவர்கள் ஒரு போதும் குர்ஆனுக்கு எதிராகப் பேசமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்வதே சரியான கொள்கையாகும்.
அதே நேரத்தில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது நபியவர்கள் கூறாதவற்றையும், தவறான செய்திகளையும் நபியவர்களின் பெயரால் அறிவித்துவிடுவார்கள். நபியவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் ஒரு செய்தி நபியவர்கள் கூறியிருக்கவே முடியாது என்று நிரூபணமாகும்போது அவற்றை ஏற்றுக் கொள்ளாது மறுக்க வேண்டும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் விளக்கமாகும்.
நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்…
- அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.
- நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
- யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.
- மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.
ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது.
தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.
உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.
நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.
இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால் வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதை இப்போது பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் இரண்டு செய்திகள் ஒன்றிற்கொன்று முரணாக இருக்குமென்றால் குர்ஆனுக்கு ஒத்த செய்தியையே நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல நல்லறிஞர்கள் வழிகாட்டியுள்ளனர்.
அவர்களில் மிக முக்கியமானவர் இமாம் ஷாஃபி அவர்கள் ஆவார்கள். இமாம் ஷாஃபி அவர்கள் தமது ”அர்ரிஸாலா” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அதிகமான ஹதீஸ்களில் அவை உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை அறிவிப்பாளர் உண்மையாளரா? பொய்யரா? என்பதை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படும். ஹதீஸாகக் கருதப்படுவதற்குத் தகுதியற்ற செய்தியை அறிவிப்பாளர் அறிவித்தால் அது பொய்யானது என்றும் நம்பகத்தன்மையில் மிக உறுதியான செய்திக்கோ, அல்லது அதிகமான அறிவிப்புகளுக்கு மாற்றமாக அறிவிப்பாளர் அறிவித்தால் அந்தச் செய்தி பொய் என்றும் மிக உறுதியான அந்த அறிவிப்பு உண்மை என்றும் மிகக் குறைவான குறிபிட்ட செய்திகளில் முடிவு செய்யப்படும்.
நூல்: அர்ரிஸாலா, பாகம்: 1, பக்கம்: 398
இரண்டு செய்திகள் முரண்பட்டால் மிக உறுதியான ஆதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் மிக உறுதியான ஆதாரத்திற்கு முரணான செய்தியை பொய் என்றே முடிவு செய்ய வெண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட அவருடைய கூற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தியை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இமாம் ஷாஃபி அவர்கள் தம்முடைய ”அல்உம்மு” என்ற நூலிலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஒரு நம்பகமான அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு செய்தியை அறிவித்தால் அது நபியவர்களிடமிருந்து வரும் உறுதியான அறிவிப்பாகும்.
ஒன்றுக்கொன்று முரண்பட்டு வரும் அறிவிப்புகளைத் தவிர நபியவர்கள் கூறிய எந்த ஒரு ஹதீஸையும் நாம் ஒரு போதும் விட்டுவிட மாட்டோம். நபியவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ்கள் முரண்பட்டால் அந்த முரண்பாடு இரண்டு வகைகளில் இருக்கும்.
: இரண்டு செய்திகளில் ஒன்று ”நாஸிஹ்” – புதிய சட்டமாகவும், மற்றொன்று ”மன்ஸுஹ்” – மாற்றப்பட்ட சட்டமாகவும் இருக்கும். இப்போது நாம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவோம். மாற்றப்பட்ட சட்டத்தை விட்டுவிடுவோம்.
: இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படும். இரண்டில் எது புதிய சட்டம் என்பதற்கு எந்தச் சான்றும் இருக்காது. இப்போது இரண்டு அறிவிப்புகளில் எது உறுதியானதோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டும் (உறுதித் தன்மையில்) சமமானதாக இருந்தால் இரண்டில் எது இறைவேதத்திற்கும், நபி வழிக்கும் ஒத்ததாக உள்ளதோ அதன் பக்கம் நான் சென்று விடுவேன்.
நூல்: அல்உம்மு, பாகம் 7, பக்கம் 201
நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும் ஒத்ததாக உள்ளதை ஏற்று மற்றொன்றை மறுத்து விட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறையாகும். அறிவிப்பாளர்களின் குறைகளை வைத்து மறுக்கப்படுவதைப் போன்று, கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்கள் மறுக்கப்படும் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் ஒரு பெண், அல்லது நாய், அல்லது கழுதை கடந்து சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ”ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார்” (அல்குர்ஆன்: 35:18) ➚ என்ற குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதினாலும்,
நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஆயிஷா (ரலி) குறுக்கே படுத்திருப்பார்கள் என்ற ஹதீஸிற்கு முரணாக இருப்பதினாலும் இதனை இமாம் ஷாஃபி மறுத்துள்ளார்கள். இதன் விபரம் இமாம் ஷாஃபி அவர்களுக்குரிய இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம்: 8, பக்கம் 623ல் இடம் பெற்றுள்ளது.
மேலும் இறந்தவரின் குடும்பத்தினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியையும் இமாம் ஷாஃபி அவர்கள் மறுத்துள்ளார்கள்.
இந்தச் செய்தியின் கருத்து ”ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்” (அல்குர்ஆன்: 6:164) ➚ “மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” (அல்குர்ஆன்: 53:39) ➚, ”அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்” (அல்குர்ஆன்: 99:7) ➚, 8), ”ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப் படுவார்கள்” (அல்குர்ஆன்: 20:15) ➚,
ஆகிய இறை வசனங்கள் எந்த அடிப்படையைப் போதிக்கிறதோ அதற்கு எதிராக உள்ளது. இதனை மறுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியே குர்ஆனுடைய கருத்திற்கு ஒத்ததாக உள்ளது. என இமாம் ஷாஃபி அவர்கள் தம்மடைய ”இஹ்திலாஃபுல் ஹதீஸ்” என்ற நூலில் பாகம்:8, பக்கம் 648ல் விரிவாக விவரித்துள்ளார்கள்.
இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வுடைய வேதத்தின் வெளிப்படையான கருத்திற்கு ஒத்திருக்கும் ஹதீஸ்களே (நபியவர்கள் கூறினார்கள் என்று) உறுதிப்படுத்துவதற்கு தகுதியானவை ஆகும்.
(நூல் : இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம் 8, பக்கம் 661)
குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால்தான் ஒரு ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.
ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.
நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
இவ்வாறு குர்ஆன் என்ற மிகப்பெரும் ஆதாரத்திற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அது மறுக்கப்பட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறை என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்ததாக, “மிக உறுதியான ஆதாரமான குர்ஆனிற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வது கூடாது’ என்பதுதான் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையாகும்.
ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ”முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல்முஆஃபிரீ” அவர்கள் ”அந்நஸ்ஸுல் காமில்” என்ற தனது நூலில் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மார்க்கத்தின் அடிப்படையான (குர்ஆனிற்கு) முரண்படும் போது தனி நபர் செய்திகளை (இமாம்களில்) ஒரு கூட்டமே மறுத்துள்ளது. அவர்களில் ஒருவர்தான் இமாம் மாலிக் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
நூல்: அந்நஸ்ஸுல் காமில், பக்கம் 231
தெளிவான சுன்னாவை விட குர்ஆனுடைய வெளிப்படையான கருத்தே மாலிக் இமாமிடம் முற்படுத்தப்பட்டதாகும். மார்க்க மஸாயில்களில் தீர்வு சொல்லும் போதும் இவ்வாறுதான்.
நூல்: அல்ஃபிக்ருஸ் ஸாமி, பாகம் 1, பக்கம் 455
வது ஹதீஸ் குர்ஆனின் கருத்திற்கு முரணாக இருப்பதால் இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுடைய கருத்திற்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.
குர்துபீ கூறுகிறார்: கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70
இமாம் அவ்ஸாயீ அவர்களும் இதே வழிமுறையில்தான் சென்றுள்ளார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக் கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள்.
முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகமில்லாதவர்களிட மிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.
நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)
கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்களை மறுக்கின்ற வழிமுறைகளை இமாம்கள் பின்பற்றியுள்ளார்கள் என்பதற்கு ஒரு சில சான்றுகளை மட்டுமே இங்கே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி, தெளிவான நடைமுறை உண்மைகளுக்கு மாற்றமாக இருக்கும் போதும், அதை விட உறுதியான ஆதாரங்களுக்கு முரண்படும் போதும் மறுக்கப்படும் என்பதே மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.
கருத்தைக் கவனித்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடு மட்டுமல்ல என்பதும் மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெளிவாகிவிட்டது.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் பல செய்திகளை மறுத்துள்ளார்கள். இதனை நம்முடைய பல நூற்களில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதன் அடிப்படையில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்ற செய்தியையும், இப்ராஹீம் நபிக்கு எதிராகப் பல்லி நெருப்பை ஊதியது, குரங்கு விபச்சாரம் செய்து அதற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட்டது,
நபிகள் நாயகம் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள், மூஸா நபி மலக்குல் மவ்த்தை அடித்து மலக்கின் விழி பிதுங்கியது, நபியவர்கள் அந்நியப் பெண்ணை ஸாலிமிற்குப் பாலூட்டுமாறு கூறினார்கள் என்ற செய்தி, சுலைமான் நபிக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் என்று மறைவான விஷயத்தை அவர் முன்கூட்டியெ அறிவித்ததாக வரும் செய்தி போன்றவற்றையும் இவையல்லாத இன்னும் சில செய்திகளையும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மறுத்துள்ளனர்.
ஒரு செய்தி குர்ஆனுக்கு, அல்லது நிரூபிக்கப்பட்ட உலக உண்மைக்கு மாற்றமாக வந்தால் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை நாம் விரிவாகக் கண்டோம்.