5) வழிகேடர்களின் ஆதாரங்கள்
வழிகேடர்களின் ஆதாரங்கள்
முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29,30,31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்துத் தெளிவாக அறிய, முக்கியமான விவரத்தை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.
தொழுகையைக் குறிப்பிட ஸலாத் என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இவ்வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு ஸலாத் என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.
ஸவ்ம் என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாக நடை முறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது.
இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.
நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. நன்றாகப் பணியுதல் என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களையும் ஸஜ்தா எனக் குறிப்பிடப்பட்டது.
அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் நன்றாகப் பணியுதல் என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!
(அல்குர்ஆன்: 2:58, 4:154, 7:161) ➚
இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள ஸஜ்தாவுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.
மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று(அல்குர்ஆன்: 22:18) ➚வசனம் கூறுகிறது.
இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.
மலைகள், இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப் படி செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.
மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.
(அல்குர்ஆன்: 12:4, 13:15, 16:48) ➚,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாக அறியலாம்.
வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.
வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் ஜிப்ரீல் என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது.
ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார். அவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. எனவே, நம்மைப் போல் வானவர்களைக் கருத முடியாது. எவ்வாறு அவர்கள் பணிவை வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.
நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.
பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.
மேலும் யூஸுஃப் நபி தொடர்பான பின் வரும் வசனங்களயும் சான்றாகக் காட்டுகின்றனர்.
என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன் என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
மனிதர்களுக்கு இருப்பது போன்ற ஸஜ்தாவின் உறுப்புக்கள் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இல்லை என்பதால் இங்கே பணிவு என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே இது அவர்களுக்கு ஆதாரமாகாது.
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 12:100) ➚வசனத்தின் பொருளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 12:4 வசனத்தின் விளக்கமே இப்போது. நிறைவேறுகிறது.
நட்சத்திரங்கள் சகோதரர்களையும், சூரியன் தந்தையையும், சந்திரன் தாயையும் குறிக்கின்றது.
கனவில் கண்டது அப்படியே நிறைவேற வேண்டுமானால் அனைவரும் அவருக்கு ஸஜ்தாச் செய்தனர் என்பதில் யூசுப் நபியின் பெற்றோரும் அடங்க வேண்டும். யாருக்கு ஸஜ்தாச் செய்யப்படுகிறதோ அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தால் மற்றவர்கள் ஸஜ்தாச் செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால் யார் ஸஜ்தா செய்யப் போகிறார்களோ அவர்கள் சிம்மானத்தில் அமர வைக்கப்பட்டார்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிகிறது.
இதனால் ஸஜ்தாச் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் கனவு நிறைவில்லை என்று ஆகி விடுகிறது. ஆனால் ஸஜ்தாச் செய்தனர் என்று பொருள் கொள்ளாமல் பணிந்தனர் என்று பொருள் கொண்டால் இரண்டு வசனங்களும் ஒன்றை ஒன்று மெய்ப்பிக்கிறது. சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் யூசுப் நபியின் மன்னர் என்ற தகுதியை ஒப்புக் கொள்வதன் மூலம் பணிவைக் காட்ட முடியும். அனைவரும் பணிந்தனர் என்பது அப்படியே பொருந்திப் போகின்றது.
யூசுப் எவ்வாறு நபியாக இருந்தார்களோ அவ்வாறு அவர்களின் தந்தை யஃகூப் அவர்களும் நபியாக இருந்தனர். அத்துடன் தந்தை என்ற தகுதியும் அவர்களுக்கு இருந்தது. அவ்வாறிருக்க யஃகூப் நபி எவ்வாறு ஸஜ்தாச் செய்திருப்பார்கள்? என்பதையும் சிந்தித்தால் இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உணரலாம்.
எழுந்து நின்று மரியாதை
சந்திக்கும் மனிதர் பெரியவர் அல்லது தலைவர் அல்லது முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றால் அவருக்காக எழுந்து நிற்கும் பழக்கமும் சமுதாயத்தில் உள்ளது. ஒருவரை வரவேற்கவும் வழி அனுப்பவும் எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. மரியாதைக்காக எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
இரண்டையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது அவசியம்.
நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம். நம்மைக் கண்டவுடன் அவர் எழவில்லை என்றும். ஆனால் அவரை விட முக்கிய தலைவர் சந்திக்கச் சென்றால் எழுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம் அவர் மரியாதை செய்வதற்காகவே எழுந்துள்ளார் என்பது தெளிவாகிறது. பெரியவரோ சிறியவரோ யார் வந்தாலும் எழுந்து வரவேற்பார் என்றால் அவர் மரியாதைக்காக இவ்வாறு செய்யவில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.
மேலும் மதிப்பு மிக்க ஒருவரும் மதிப்பு குறைந்த ஒருவரும் சந்திக்கிறார்கள். இரண்டாமவர் முதலாமவருக்காக எழுகிறார். ஆனால் முதலாமவர் இரண்டாம் நபருக்காக எழுவதில்லை என்றால் இது மாரியாதை செய்வதற்காக எழுந்து நிற்பதாகக் கருதப்படும். இப்படி கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் சிலவற்றைத் தருகிறோம். அதிலிருந்து இந்த உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அரபி 50
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுவிக்க அவர்கள் பின்னே நாங்கள் தொழுதோம். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறுவதை எதிரொலித்துக் கொண்டிருந்தனர். தீடீரென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு உட்காருமாறு சைகை செய்தனர். நாங்கள் உட்கார்ந்தோம். உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம்.
ஸலாம் கொடுத்த பின்னர் நீங்கள் பாரசீக, ரோமபுரி மக்கள் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்க நின்று கொண்டிருப்பது போல் செய்யப் பார்த்தீர்களே? இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் இமாம்களை நீங்கள் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகத்துக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் கண்டால் அவர்களுக்காக எழ மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : திர்மிதி 2678,(அஹ்மத்: 11895, 12068, 13132)
தனக்காக மற்றவர்கள் எழ வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் :(அபூதாவூத்: 4552), திர்மிதி 2679,
ஸஅது பின் முஆத் (ரலி) அவர்கள் வந்த போது உங்கள் தலைவரை நோக்கி எழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 3043, 3804, 4121, 6262)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஅதுக்கு மரியாதை செலுத்துவதற்கு எழுவில்லை. வரவேற்கவே எழுந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும் போது அவரை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து செல்வார்கள்.
நூல் : அபூதாவூத், 4540, திர்மிதி 3807
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு மரியாதை செலுத்த எழவில்லை. வரவேற்கவே எழுந்தார்கள். மதிப்பில் பெரியவர்கள் சிறியவர்களுக்காக எழுவது வரவேற்பதற்காகத் தான் இருக்கும். ஆனால் மதிப்பில் சிறியவர்கள் எழுவது இரண்டு வகையாக இருக்கும்.
எனவே ஒருவரை மற்றவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதலும், முஸாஃபஹா செய்தலும் தவிர வேறு எந்த விதமான மரியாதையும் இஸ்லாத்தில் இல்லை என்பதை உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.