5) நாஸிஹ், மன்ஸூஹ்

நூல்கள்: ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு

நாஸிஹ், மன்ஸூஹ் ; புதிய சட்டம் – பழைய சட்டம்

இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்து பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(அல்குர்ஆன்: 2:106)

அனைத்தையும் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பிறகு அதை ஏன் மாற்ற வேண்டும்?  பொதுவாக ஒரு மனிதன் 25 வயதை அடைந்த தனது மகனுக்கு அறிவுரை சொல்லும் போது மனைவியுடன நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்வான்.

அதேவேளை அவன் ஐந்து வயதில் இருந்த போது வேறு விதமாக அறிவுரை செய்திருப்பார். ஐந்து வயதில் கூறிய உபதேசத்தை 25 வயதில் கூறினால் அதில் எந்தப் பலனும் இருக்காது. மனிதன் என்பவன் அனைத்து விஷயத்தையும் பிறந்த உடனே அறிந்து கொள்வதில்லை. மாறாக, கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்கிறான்.

மனிதனுடைய மூளையையும் உள்ளத்தையும் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை இறைவன் ஒரே சீராக ஆக்கவில்லை. எனவே, அவனது மூளை எதை எப்போது ஏற்றுக் கொள்ளுமோ அதை அப்போது கூற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இறைவன் மனிதர்களுக்கு திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சட்டங்களை அளிக்கின்றான்.

எனவே தான் படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக சட்டங்களைக் கூறும் போது, ஆரம்பத்தில் இலகுவாக இருந்த சட்டம் பின்னர் கடினமாக்கப்படலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்த சட்டம் பின்னர் இலகுவாக்கப்படலாம்.

எனவே, ஆரம்பத்தில் தொழுகையில் மட்டும் மதுவைத் தடை செய்கிறான். பின்னர் அவர்கள் ஒரு பக்குவத்தை அடைந்ததும் முழுவதுமாகத் தடை செய்து விடுகிறான். இது போன்ற நிலையில் முன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்படலாம்.

நாஸிஹ், மன்ஸூஹ் என்பது ஆரம்பத்தில் ஒரு சட்டம் கூறப்பட்டு, பின்னர் மற்றொரு சட்டத்தின் மூலம் முந்தைய சட்டம் மாற்றப்படுவதாகும். இதில் முந்தைய சட்டத்திற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும், புதிய சட்டத்திற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் பெயர் கூறப்படும்.  இதற்கு திருமறைக்குர்ஆனிலிருந்தே அழகிய எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்.

படிப்படியாக மது தடைசெய்யப்படுதல்

திருமறைக் குர்ஆனிலும் இது போன்ற மாற்றப்பட்ட வசனங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மது தொழுகையில் மாத்திரம் தடை செய்யப்பட்டது. பின்னர் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டது என்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

(அல்குர்ஆன்: 16:67)

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.

இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.

இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:219)

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்.

போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 4:43)

இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார்.

(போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(அபூதாவூத்: 3186)

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 5:90)

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.

சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.

நாஸிஹ் மன்ஸுஹ் குர்ஆனில் உள்ளது போன்று ஹதீஸிலும் உள்ளது. அதற்குரிய எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம்.

ஆஷுரா நோன்பு கடமை என்ற சட்டம் மாற்றப்படுதல்

முதலில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கூறப்பட்டதற்கு உதாரணமாக ஆஷுரா நோன்பு தொடர்பான சட்டத்தைக் கூறலாம்.

ஆரம்பத்தில் ஆஷூரா நோன்புதான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு ஆஷுரா நோன்பு விருப்பத்திற்குரியதாக மாற்றப்பட்டது. இதில் ஆஷுரா நோன்பிற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும் ரமலான் நோன்பிற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் சொல்லப்படும்.

அதாவது ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டு ரமலான் நோன்பு கட்டாயக் கடமை என்ற புதிய சட்டம் விதிக்கப்பட்டது.

“ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹாரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்கு புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது.

அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷுராவுடைய) நோன்பை நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

(புகாரி: 1592)