49) இறந்தவர் விட்டுச் சென்ற கடனை நிறைவேற்றுதல்
49) இறந்தவர் விட்டுச் சென்ற
கடனை நிறைவேற்றுதல்
ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்து விட்டால் கடன் கொடுத்தவர் மறுமைநாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவரின் நல்லறங்கள் அவருக்கே செல்ல வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அவர்பட்ட கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
என் தந்தை உஹதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம்பழம் பரிக்கும் காலம் வந்தபோது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உஹதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும், தம் மீது கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாறு நான் விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ போய் ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம்பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் வற்புறுத்தலாயினர்.
அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, “உன் கடன்காரர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர் களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! “ஒரேஒரு பேரீச்சம்பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகளிடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.) அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்” என்று நான் இருந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சி விட்டன. குறையாமல் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந் திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதிலிருந்து ஒரேஒரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று. “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீதானே நிறைவேற்றுவாய்?” எனக் கேட்டார்கள்.
அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மேலுற்ற விஷயங்களை இறந்தவருக்காக அவரது உறவினர்கள் செய்வதால் இறந்தவருக்கு சிறந்த மண்ணறை வாழ்வு அமையலாம்.