48) இறந்தவர் சார்பில் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
48) இறந்தவர் சார்பில் கடமையான
ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம். அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீதிருந்த ஹஜ் கடமை நீங்கி விடுகிறது.
‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜை கடமை யாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்!” என்றார்கள். இது ‘விடைபெறும்’ ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”உன் சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீதானே நிறைவேற்றுவாய்?” எனக் கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல் ) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)