45) இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை
45) இறந்தவருக்காக உயிருள்ளவர்கள்
செய்ய வேண்டியவை?
இறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எதுஎதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது.
இறந்தவருக்காக உயிருடன் இருப்பவர்கள் தர்மம் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”என் தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந் தால் நல்லறம் (தான தர்மம்) செய்திப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
சஅத் பின் அபாதா அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், “ஆம் (பயனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், “நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)