41) நற்காரியங்கள் செய்ய வேண்டும்
இறந்த பின் நாம் சம்பாதித்த செல்வமோ, பெற்றெடுத்த குழந்தைகளோ, நமக்கு துணையாக வரமாட்டார்கள். மாறாக இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்கள் அதிகமாக செய்ய வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)
குறிப்பாக இறந்த பிறகு நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)