இறுதி நபித்துவம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

இறுதி நபித்துவம்

”எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டி விட்டு ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்ட ஒரு மனிதனைப் போன்று. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ”அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3535)

இன்னும் நபியவர்கள் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் விதமாகக் கூறியுள்ள செய்திகள் ஏராளம் உள்ளன.

எனக்கு பின் எந்த நபியும், ரஸூலும் இல்லை

”தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்று விட்டது. எனக்குப் பின்னால் எந்த நபியும், ரஸூலும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாக்நூ (ரலி),(திர்மிதீ: 2198)

நபியவர்களுக்குரிய தனிப் பெயர்

”எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என் மூலம் இறை மறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்” என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம் (ரலி),(புகாரி: 4896) ,(முஸ்லிம்: 4342)

நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச் சிறப்பு

நபியவர்கள் கூறினார்கள்: பிற நபிமார்களை விட ஆறு விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.

 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பட்டுள்ளேன்.
 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டது.
 3. போர் பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 4. எனக்குப் பூமி முழுவதும் தூய்மையானதாகவும், பள்ளிவாயில்களாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
 5. நான் மனித இனம் முழுவதுக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
 6. என்னுடன் நபிமார்கள் முற்றுப் பெற்று விட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 907)

கலீஃபாக்கள் வருவார்கள்

”நபிமார்கள் பனூ இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இருந்தனர். ஒரு நபி மரணிக்கும் போது அவருக்குப் பின்னால் மற்றொரு நபி வருவார். எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லை! கலீஃபாக்கள் அதிகமாக வருவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3455)

மேலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று திருக்குர்ஆனும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.
(அல்குர்ஆன்: 4:79)➚

”மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்”
(அல்குர்ஆன்: 7:158)➚

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்: 6:19)➚

பொய்யர்களின் வருகை

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் முஸைலமா என்ற பொய்யனும், இன்றைய காலத்தில் மிர்ஸா குலாம், ரஷாத் கலீபா போன்ற போகளும் தங்களை நபியென்று வாதிட்டனர். இவர்களைப் பற்றி:
”என்னுடைய சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் வந்து, அவர்கள் அனைவரும் தன்னை நபியென்று வாதிடுகின்ற வரையும் மறுமை நாள் ஏற்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸவ்பான் (ரலி),(திர்மிதீ: 3145)

நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். இதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழிதவற மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இர்பால் பின் ஸாரியா (ரலி),(இப்னு மாஜா: 43)