37) அழகான மாளிகை

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

37) அழகான மாளிகை

மண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கின்றோம்.

கடலில் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள்; தீயில் கருகி சாம்பலானவர்கள்; மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக் கெல்லாம் சுப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப் பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாக சந்திப்பார்கள்.

இறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.

பிறகு அவ்விருவரும் அம்மரத்தில் என்னை ஏற்றுக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார் கள். நான் இதுவரை இப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததே யில்லை. அதில் சில ஆண்களும், வயோதிகர்களும், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர்.

அது மிகவும் அழகானதும், சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும், இளைஞர்களும் இருந்தனர், பிறகு நான் இருவரிடமும், “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன்.

அதற்கு இருவரும், ‘ஆம்! நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்” என்று கூறிவிட்டு, “அப்போது உமது தலையை உயர்த்தும்!” என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது.

அப்போது இருவரும் “இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்’ என்றதும் நான், “எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்” என்றேன். அதற்கு இருவரும், ‘உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்’ என்றனர்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி)

(புகாரி: 1386)