35) நெருக்கத்திற்குப் பிறகு விசாலமாக்கப்படும்
35) நெருக்கத்திற்குப் பிறகு விசாலமாக்கப்படும்
நல்லவராக இருந்தாலும், தீயவராக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோ டொன்று கோர்த்துக் கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டுவிடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதி யாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார்.
சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரை யும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கத்தி லிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதிலிருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூம் : தஹதீபும் ஆஸார்-797
உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்? என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி (நல்லவரிடம்) கேட்கப்படும். அதற்கு அவர் இறைவனின் தூதர் என்று நான் நம்பினேன். அவர் எங்களிடத்தில் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உண்மையாளர் என்று கருதி அவரை நாங்கள் பின்பற்றினோம் என்று கூறுவார்.
அதற்கு நீ உண்மையே கூறினாய். இவ்வாறே நீ வாழ்ந்து மரணித்தாய். இதே நிலையிலேயே அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவரிடம் கூறப்படும். பிறகு அவருடைய பார்வை எட்டுகின்ற அளவிற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல் : தப்ரானீ பாகம்:3, பக்கம்:105