33) சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

நூல்கள்: இணை கற்பித்தல் ஓர் விளக்கம்

இறந்தவர்களின் கபுர்களின் மீது கட்டிடம் எழுப்புதல், அதன் மீது பூசுதல், விழா கொண்டாடுதல் போன்ற செயல்களை பற்றி நபிகளார் பல்வேறு எச்சரிக்கைகளை சமுதாயத்திற்குக் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கிய போது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது ‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்’ எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

(புகாரி: 436)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கினார்கள்’ என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

(புகாரி: 3454)

இந்தச் செய்தி மேலும் புகாரியில் 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்ணறை என்பது திறந்த வெளியில் தான் இருக்க வேண்டும். அதைச் சுற்றியோ அல்லது அதற்கு மேலோ எந்த ஒரு கட்டிடமும் இருக்கக் கூடாது. நிழலுக்காகக் கூட முகடாகவோ கூரையாகவோ எந்த ஒன்றையும் கட்டி விடக் கூடாது. ஏனென்றால் அது பிற்காலத்தில் வணக்குமிடங்களாக ஆகிவிடும் என்பதற்காகவே நபிகளார் இதையும் தடைசெய்திருக்கிறார்கள். இது தான் இஸ்லாம் சொல்கின்ற மண்ணறை.

உதாரணத்திற்கு, நபி வழித் திருமணம் என்று நாம் எதைச் சொல்வோம்? குறைந்த செலவில் சிக்கனமாக மஹர் கொடுத்து செய்கின்ற திருமணத்தைத் தான் நபிவழித் திருமணம் என்று சொல்வோம். அதற்கு மாற்றமாக வரதட்சணை வாங்கி, ஆடம்பரமாக, தாலி கட்டுவது, ஆரத்தி எடுப்பது, பெண் வீட்டு விருந்து இப்படி நடைபெறுகின்ற திருமணத்தை நபிவழித் திருமணம் என்று சொல்வோமா? சொல்லவே மாட்டோம். நடைபெறுவது திருமணம் என்றாலும் அது நபிவழித் திருமணம் அல்ல. இது நபிவழிக்கும் இஸ்லாத்திற்கும் மாற்றமான திருமணம் என்று சொல்வோம்.

அதுபோல் தான் மண்ணறை என்றால் அது இஸ்லாம் சொன்ன அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இவர்கள் ஜியாரத்திற்காக, சந்திப்பிற்காக செல்கின்ற மண்ணறை என்பது இஸ்லாத்திற்கு உட்பட்ட மண்ணறையாக இல்லை. அதற்கு மாற்றமாகத் தான் இருக்கிறது. அந்த கபுரைச் சுற்றி சுவர் எழுப்பியிருக்கிறார்கள். கபுரின் மீது கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. நிழலுக்காக அதன் மீது முகடு எழுப்பப்பட்டுள்ளது. இவை போதாதென்று ஆடல், பாடல் கச்சேரி, வாண வேடிக்கைகள் வேறு. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதை எப்படி மண்ணறை என்று சொல்ல முடியும்? திருவிழா நடத்தும் இடமாகத்தான் நினைப்பார்கள்.

இந்த மாதிரி தன்னுடைய கபுரையும் சுற்றி கட்டிடம் கட்டினால் நாளை நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்வார்கள் என்பதற்காகத்தான் தான் நபியவர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார்கள். எவருடைய அடக்கத்தலத்திலும் கபுரைக் கட்டுவது, பூசுவது கூடாது என்றார்கள். தன்னுடைய அடக்கதலத்தையும் விழா கொண்டாடும் (வணக்கத் தலமாக) ஆக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கபுர்களின் நிலை இவ்வாறு தான் ஆகிவிட்டது. அந்த கபுர்களை வணங்குமிடமாகவும், விழாக்கள் கொண்டாடும் இடமாகவும் ஆக்கிவிட்டார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, ‘அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கி விட்டார்கள்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத்தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். ‘தம் அடக்கத்தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ’ என்று அவர்கள் அஞ்சினார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(புகாரி: 4441)

தமது கடைசிக் காலகட்டத்தில் கூட நோய்வாய்ப்பட்டு கஷ்டங்களை, வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களிடத்தில் என்னுடைய அடக்கத்தலத்தை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வாறு ஆக்கி விடுவார்களோ என்று அஞ்சியும் இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்?

ஒவ்வொரு நபிமார்களும் தமது சமுதாயத்திடம் வாழ்ந்து பிரச்சாரம் செய்து இறந்த பிறகு அவர்களையே கடவுள்களாக ஆக்கிவிட்டார்கள் என்றால் நாளை நம்முடைய கபுரையும் இவ்வாறு ஆக்கிவிடுவார்கள் என்பதனால் தான். இதற்குப் பல சம்பவங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு, கஅபாவைச் சுற்றியும் கஅபாவிற்கு உள்ளளேயும் இருந்த 360 சிலைகளை உடைத்தெறிகிறார்கள். அதில் பல சிலைகள் நபிமார்களுடைய சிலைகளாக இருந்தன. இப்படி அந்த நபிமார்கள் இறந்த பிறகு அவர்கள் மீது உள்ள நேசத்தினால், அளவு கடந்த பாசத்தினால் அவர்களையே கடவுளர்களாக ஆக்கி இணைவைப்புக் கொள்கைக்கே திரும்பச் சென்று விட்டார்கள். கொள்கையில் உறுதிமிக்க, தந்தையையும், தன் சமுதாயத்தையும் எதிர்த்து நின்ற ஏகத்துவத்தின் தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களை இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டி இணை வைப்பை வேரறுக்க வந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கே சிலை வைத்து கடவுளாக வணங்கினார்கள்.

இதை விடக் கொடுமை என்னவென்றால், நபி மூஸா (அலை) அவர்களுடைய காலத்தில் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே ஏகத்துவத்தில் உறுதியாக இருந்த அம்மக்கள் மீண்டும் இணை வைப்பிற்கே செல்ல இருந்ததை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மூஸா நபியவர்களையும் அவரை ஏற்றுக் கொண்ட மக்களையும் அழிப்பதற்காக வந்த ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரை இறைவன் கடலில் மூழ்கடிக்கச் செய்தான். பிறகு மூஸாவும் அவருடைய கூட்டத்தாரையும் இறைவன் காப்பாற்றிய பிறகு அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தாரை காண்கின்றனர்.

அதை பார்த்த மூஸா நபியின் கூட்டத்தார் ‘மூஸாவே! அவர்களுக்கு நிறைய கடவுள்கள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் நிறைய கடவுள்களை ஆக்குங்களேன்!’ என்று கேட்டனர். அதற்கு மூஸா நபியவர்கள் எந்த வழிகெட்ட கொள்கையிலிருந்து உங்களை மீட்டெடுக்க பாடுபட்டேனோ அதே வழிக்கே திரும்பி செல்ல ஆசைப்படுகிறீர்களே! நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாக இருக்கின்றீர்களே என்றார்.

(பார்க்க:(அல்குர்ஆன்: 7:138)

மேற்கண்ட சம்பவத்தில், பல அற்புதங்களை பார்த்து, ஃபிர்அவ்னின் கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்ட மூஸா நபியின் சமுதாயத்தார், மூஸா நபி உயிருடன் இருக்கும் போதே இவ்வாறு கூறுகின்றார்கள்.

இறைவனைப் பற்றியும், இணைவைப்பைப் பற்றியும் அவர்களுக்கு மூஸா நபி அவ்வப்போது பிரச்சாரம் செய்து வந்த நிலையிலும் ‘காஃபிர்களைப் போன்று எங்களுக்கும் பல கடவுள்களை உருவாக்கித் தாருங்கள்’ என்று சொல்கிறார்கள் என்றால் நபிமார்கள் உயிருடன் இல்லாத இந்தக் காலத்தில் அவர்களுக்குச் சிலை வைப்பது, அவர்களது மண்ணறைகளை வணங்குமிடமாக ஆக்குவது என்பது ஆச்சரியமான விஷயமல்ல.