32) மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை.

மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். இவ்வாறு மாற்றி மாற்றி, பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்வதை ஊக்குவித்தனர்.

இதற்கு இன்றைய நடைமுறையில் சில வட்டாரங்களில் குண்டுமாத்து சம்பந்தம், சிலரது வழக்கில் கொண்டான் கொடுத்தான் என்றும் சொல்லாடல் இருக்கிறது. அதாவது எந்த வீட்டில் திருமணம் முடிப்பதற்குப் பெண் எடுக்கிறோமோ அந்த வீட்டிலுள்ள ஆணுக்கு நம்வீட்டிலுள்ள பெண்ணைக் கொடுப்பது என்ற வழக்கம். இந்தச் செயலையும் நபியவர்கள் தடைசெய்தார்கள்.

நம் காலத்தில் நடக்கும் கொடுமையுடன் ஒப்பிட்டால் இதுவெல்லாம் பெண்ணுக்குப் பெரிய கொடுமையல்ல என்றே சொல்லலாம். ஆயினும் நபியவர்கள் சிறிய வகையில் பெண் கொடுமை என்றாலும் அதையும் தடுத்தேயிருந்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றொருவரிடம் “நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்‘’ என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

நூல்: (புகாரி: 5112, 6960)

மஹ்ரின்றி, பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (முஸ்லிம்: 2770, 2769, 2768, 2767, 2766)

மஹர் என்பதே பெண்ணுக்குரிய ஜீவனாம்சத் தொகைதான். ஆனால் மஹர் வழங்காமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் திருமணத்தில் என்ன மோசடி நடக்கிறதெனில், பெண்ணுக்குச் சேர வேண்டிய மஹரை பெண்ணின் உடன் பிறந்த சகோதரன் அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆக மஹர் கொடுப்பதை இடம் மாற்றி, அதாவது பெண்ணுக்குக் கொடுக்காமல் பெண்ணுடன் பிறந்தவனுக்குக் கொடுப்பதினால் தான் நபியவர்கள் இதுபோன்ற பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் திருமணத்தைத் தடைசெய்தார்கள்.

மஹரை மாற்றிக் கொடுப்பதையே உன்னிப்பாகக் கவனித்து நபியவர்கள் தடுத்துள்ளார்கள் எனில், நம் சமூகத்தின் தீமையாக இருக்கிற வரதட்சணை தவறு என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா? ஆனால் பெண்ணுக்குக் கொடுக்காமல் அவளிடம் கேட்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

பெரியோர் முன்னிலையில் ஆலிம்கள் முன்னிலையில் சபையோர் முன்னிலையில் நாங்கள் திருமணப் பதிவுப் புத்தகத்தில் 1001 மஹருக்கு என்று எழுதுகிறோமே அது பெண்ணுக்குக் கொடுப்பது தானே என்று சிலர் பிதற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்ணிடம் வரதட்சணையாகப் பிடுங்கிய தொகையோ பல இலட்சங்கள். அதை எவரும் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்வதில்லை. அதிலும் சிலபேர் அந்த 1000 ரூபாயையும் கடன் மஹர் என்று எழுதுவார்கள். இது எப்படியிருக்கிறதெனில், பிச்சை எடுக்க வந்தவனிடம், ஒரு ரூபாயை பிச்சையாகப் போட்டுவிட்டு, அவனது தட்டிலிருந்து 100 ரூபாயை எடுத்ததற்குச் சமம். இவன் பிச்சை போடுபவன் கிடையாது. அயோக்கியன். அதுபோன்ற நிலையில் 1000 ரூபாய் மஹரைப் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு வரதட்சணையாக பல இலட்சங்களையும், வீடு, கார் பங்களா என்று வாங்குவதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

இதில் இன்னொன்றையும் புரிய வேண்டும். கொடு என்றாலேயே நாம் தான் கொடுக்க வேண்டும் எனவும், அவர்களிடம் நாம் எதையும் வாங்கக் கூடாது என்ற கருத்தும் அந்த வசனத்திலேயே உள்ளடங்கித்தான் இருக்கிறது. அதேபோன்று வலிமா விருந்து உட்பட திருமணச் செலவு அத்துணையும் ஆண்மகனையே சாரும். பெண்ணுக்குத் திருமணத்தில் எந்த வகையிலும் செலவே இருக்கக் கூடாது என்பதே இஸ்லாத்தின் கொள்கை. இப்படியெல்லாம் சொல்லப்பட்ட மார்க்கத்தில் வரதட்சணை வாங்குபவன் திருவோட்டில் திருடியவனாகவே பார்க்கப்படுகிறான்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்:

அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள்!…

(அல்குர்ஆன்: 4:25)

நியாயம் என்றால் அவனது பொருளாதாரம், அவனது தகுதி ஆகிய எல்லாவற்றையும் கவனித்து பெண்களுக்கு வழங்குதல் என்று பொருள். இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு பவுன் நகை கூட வாங்க முடியாது. அதில் ஒரு மூக்குத்தி கூட வாங்க முடியாது. எனவே காலத்திற்குத் தகுந்தாற்போல் நியாயமான முறையில் இறைவன் பெண்களுக்கு மஹர் தொகையை வழங்கச் சொல்கிறான்.

அதேபோன்று மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து நிறையப் பேர் மதினாவிற்கு வந்தார்கள். இதில் ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். இப்படி பெண்கள் ஹிஜ்ரத் செய்து வந்தால் மக்காவில் அவர்களது கணவன்மார்கள் காஃபிராக இருந்திருப்பார்கள். மார்க்கத்திற்காகக் கணவனையும் துறந்துதான் ஹிஜ்ரத்தை நபித்தோழியர்கள் செய்தனர். அப்படிப்பட்ட ஹிஜ்ரத் செய்த பெண்களை மணமுடிப்பது சம்பந்தமாக இறைவன் பேசும் வசனத்திலும் கூட, மஹர் கொடுத்துதான் திருமணம் முடிக்க வேண்டும் என்கிறான்.

அதாவது கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று மற்றவர் மறுத்தால் இஸ்லாமிய மார்க்கத்தில் தனியாக தலாக் அல்லது குலா என்ற விவாகரத்து சட்டம் தேவையில்லை. இஸ்லாத்தை ஏற்பதே தங்களது துணையிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்துவிடும் விவாகரத்தாக ஆகிவிடும். இந்த நிலையில் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பெண்மணிகளைப் பற்றித்தான் இவ்வசனத்தில் இறைவன் பேசுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களை தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 60:10)

ஆக, காஃபிர்களுக்கு மனைவியாக இருந்து இஸ்லாத்திற்கு வருகிற பெண்களைத் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு என்ற சட்டத்தைச் சொல்லும் போதே மஹர் கொடுத்தால் தான் திருமணம் செல்லுபடியாகும் என்கிறான்.

இன்னும் சொல்வதாக இருப்பின், பெண்ணுக்கு ஆண் தான் மஹர் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் என்பதற்கு நபியவர்கள் காலத்திற்கும் முன்னால் வாழ்ந்த மூஸா நபியின் வரலாற்றில் ஆதாரம் காணக் கிடைக்கிறது.

மூஸா நபியவர்கள் உள்ளூரில் இருக்கும் போது, இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் மூஸா நபியவர்கள் தன் சார்பான ஆளுக்கு ஏற்றுக் கொண்டு பேசுகிற போது, எதிரியின் சமூகத்தைச் சார்ந்தவருக்கு மூக்கில் குத்து விட்டுவிடுவார்கள். எதேச்சையாக நபி மூஸா அவர்கள் அடித்த போது அந்த நபர் இறந்துவிடுகிறார்.

இந்தச் செயல் தவறானது என்றும், இது ஷைத்தானின் வேலை என்றும் மனம் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் இறைவன் மன்னித்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

(பார்க்க:(அல்குர்ஆன்: 28:15),16,17)

இந்நிலையில் அந்தச் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், மூஸாவைக் கொல்ல வேண்டும் என்று கூறியதும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூஸா நபியவர்கள் மத்யன் என்ற ஊருக்குச் சென்று அங்கே ஒரு பெரியவரிடம் அடைக்கலம் தேடுகிறார். அந்தப் பெரியவர், தனது மகளை மூஸா நபிக்குத் திருமணம் முடித்துத் தருவதாகச் சொல்கிறார். மூஸா நபியும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அப்போது அந்தப் பெரியவர், தனது மகளைக் கல்யாணம் முடிப்பதாக இருந்தால், என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை பார்த்து அந்த உழைப்பை மஹராகத் தரவேண்டும் என்று கேட்கிறார். எட்டு ஆண்டுகள் மூஸா நபியவர்கள் வேலை செய்து, மஹரைக் கொடுத்து, பின்னர் அந்தப் பெண்மணியைத் திருமணம் முடித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

எட்டு வருட உழைப்பு என்பது மிகப்பெரிய மஹர். இன்றைய கணக்குப்படி சராசரியாக ஒரு நாள் உழைப்புக்கு 300 ரூபாய் என்று கணக்கிட்டால் மாதம் 9000 ரூபாய். வருடத்திற்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆகும். எட்டு ஆண்டுகள் எனில் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆகிறது. நபி மூஸா அவர்கள் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்கு சுமார் எட்டு இலட்சத்திற்கும் மேல் மஹர் கொடுத்துள்ளார்கள் எனில் இது மிகப்பெரிய தொகைதான்.

இந்த மொத்த சம்பவமும் இடம் பெறும் திருக்குர்ஆனின் வசனங்கள், 28வது அத்தியாயம் 15 முதல் 28 வரையிலான வசனங்களில் காணலாம்.

“எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 28:27)

இந்த வசனத்திலும் கூட மூஸா நபிக்குப் பெண் கொடுத்தவர் எட்டு ஆண்டுகள் உடல் உழைப்பை மஹராகக் கேட்கிறார். பத்து ஆண்டுகள் உழைத்தால் அது உங்கள் விருப்பம் என்றும் கூறுகிறார். அப்படியெனில் எட்டு ஆண்டுகள் என்பது அவர்களது பார்வையில் குறைந்த மஹராகத்தான் தெரிகிறது. அத்துடன் மூஸா நபிக்கு சிரமத்தை நாடவில்லை என்றும் கூறுகிறார்.

அப்படியெனில் அந்தச் சமூகம் எப்படியெல்லாம் பெண்ணுரிமையைப் பேணியிருக்கிறார்கள் என்று பாருங்கள். எனவே இந்தச் செய்தியும் பெண்ணுக்கு ஆண் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.