32) இறந்தவர்கள் செவியேற்பார்களா?

மற்றவை: இணை கற்பித்தல் ஒரு விளக்கம்

மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக அமைகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

இறைவன் சொல்லிக் காட்டுகிறான்…

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்: 46:5)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களை மறுமை நாள் வரும் வரை அழைத்தாலும் அவர்கள் உங்களது அழைப்பை ஒருபோதும் செவியேற்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே அவர்கள் செவியேற்றாலும் திரும்பப் பதில் தர மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இதை விட ஒரு வழிகேடு வேறு எதுவும் கிடையாது. உயிருடன் உள்ள ஒருவரை அழைத்தால், அவரிடத்தில் ஏதேனும் உதவி கேட்டால் அதை அவர் செவியேற்பார். அதை நிறைவேற்றவும் செய்வார். ஆனால் இறந்து, மண்ணோடு மண்ணாகிப் போன ஒருவரிடத்திலோ, சிலை களிடமோ சென்று கேட்பது என்பது வழிகேடும் மடமைத்தனமும் ஆகும்.

மேலும், இந்த வசனத்தில் அல்லாஹ் நமக்கு 3 விஷயங்களைப் பதிய வைக்கிறான்.

முதலாவது, நீங்கள் இறந்து போனவர்களையோ, சிலைகளையோ அழைத்தால் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.

இரண்டாவது, அப்படியே அவர்கள் உங்களது அழைப்பை செவியேற் றாலும் அவர்கள் பதில் தர மாட்டார்கள்.

மூன்றாவது, நீங்கள் அவர்களை அழைப்பதை அவர்கள் அறியாதவர் களாக இருக்கின்றனர்.

இந்த மூன்று தன்மையும் பெற்றவர் எப்படிக் கடவுளாக முடியும்? கடவுள் தன்மை உடையவர் என்று சொல்ல முடியும்? அத்தனையும் அறியும் ஆற்றல் உள்ளவர் என்று சொல்ல முடியும்?

மேலும் இறைவன் கூறுகிறான்…

நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது. அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 27:80)

இறந்தோரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 30:52)

இந்த இரு வசனங்களிலும் இறந்து போனவர்களைச் செவியேற்கச் செய்யும் அதிகாரம் நபிக்கே இல்லை என்று சொல்கிறான். உயிருள்ள – செவியேற்கக் கூடிய ஒருவனிடத்தில் ஒரு செய்தியைச் சொன்னால் அது அவனுக்கு கேட்கும். விளங்கும்.

அதே நேரத்தில், காது கேட்காத ஒருவனிடத்தில் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அது அவனுக்குக் கேட்காது. விளங்கவும் செய்யாது என்பது மறுக்க முடியாது உண்மை. இவ்வாறிருக்கும் போது இறந்து போன ஒருவரிடத்தில் சென்று நாம் கேட்டால், அழைத்தால் அவர் எப்படி அதைச் செவியேற்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இறந்து போனவருக்குக் கேட்கும் திறன் இருக்காது என்பதை குர்ஆன் ஹதீஸைப் படித்துத் தான் தெரிய வேண்டுமா? நாம் சிந்தித்துப் பார்த்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் மனிதன் இறந்து விட்டால் செவியேற்கும் திறன் இல்லாமல் போய்விடும் என்பதனையும், ஒரு மனிதன் இறந்து விட்டால் எந்ததெந்த உறுப்புகள் எவ்வளவு நேரம் வரை செயல்படும்? எப்போது செயலிழக் கின்றது? என்பதையும் மருத்துவ உலகமே கணக்கிட்டுச் சொல்லி யிருக்கின்றது. இதற்கு மேலும் ஆதாரம் தேவையா?

மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதனை, படிக்காத பாமரர்களும் விளங்கக்கூடிய விதத்தில் இறைவன் ஒரு பாடம் கற்பிக்கிறான். பின்வரும் வசனத்தைப் பாருங்கள்.

குருடனும் பார்வையுள்ளவனும், இருள்களும் ஒளியும், நிழலும் வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும் இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவரை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:19-22)

நம்மில் யாராவது குருடனையும் கண்பார்வை உள்ளவனையும் சமமானவர்கள் என்று சொன்னால் நாம் ஒத்துக் கொள்வோமா? அவ்வாறு சொன்னால் அவனைப் பைத்தியக் காரன் என்று தான் உலகமே சொல்லும். குளிரும் சூடும் இரண்டுமே ஒன்றுதான் என்று சொன்னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இப்படி இருக்கையில் இறந்து போனவரும் உயிருள்ளவரும் சமம் என்றால் அதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சிந்திக்க வேண்டாமா?

அவர் இறந்து விட்டார்; அவர் கபுருக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று நமக்கு நன்றாகத் தெரிகிறது. இப்படி இருக்கும் போது அவர் இறக்கவில்லை; அவர் உயிருடன் தான் இருக்கிறார்; அவருக்கு நாம் சொல்வது கேட்கும் என்றால் எப்படி இருக்கும். பைத்தியம் என்றுதானே நினைப்பார்கள். அதுபோன்ற பைத்தியக்காரத்தனமான காரியத்தைத் தான் நாம் ஆன்மீகம், வணக்கம் என்ற பெயரில் செய்து வருகின்றோம்.

ஆக, எவ்வாறு சூடும் குளிரும் சமமாக ஆவதற்கு வாய்ப்பில்லையோ சாத்தியமற்றதோ அதே போன்று தான் இறந்தவர்களும் உயிருள்ள வர்களும் சமமாவதற்கும் வாய்ப்பே இல்லை. அது சாத்தியமற்ற செயல்.

அது போன்று மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

யார் அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்களையோ, நபிமார் களையோ, சிலைகளையோ வணங்கு கின்றார்களோ அவர்களுக்கு எதிராக மறுமை நாளில் அவர்கள் வணங்கிய இந்த அவ்லியாக்களும் சிலைகளும் நபிமார்களும் வந்து நிற்பார்கள். இறைவனிடத்தில் மக்கள் செய்த இணைவைப்புச் செயலையே மறுத்துப் பேசுவார்கள் என்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்.

தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள் களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.

(அல்குர்ஆன்: 19:81), 82)

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகின்றது என்றால், ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் இறந்த பிறகு அவருக்கு உலகத்தில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது. அது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்து போன பிறகு அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. மேலும் அல்லாஹ்வையன்றி நாம் யாரைக் கடவுளாக ஆக்கி அவர்களை அழைக்கின்றோமோ அவர்களுக்கும் இந்த உலகத்தில் நடப்பது தெரியாது. அல்லாஹ்விடத்தில் மறுத்தும் விடுவார்கள். மேலும் நமக்கு எதிராகவும் நம்முடைய இணை வைப்பிற்கு எதிராகவும் வந்து நிற்பார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, இறைவன் வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிக்காட்டுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99), 100)

மேற்கண்ட வசனத்தின் இறுதியில் மனிதன் இறந்த பிறகு அவனுக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் ஓர் திரை உள்ளது என்பதை ”பர்ஸக்” என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதில் பர்ஸக் என்பதற்கு ”திரையிடுதல்” என்பது பொருள்.

இதை நாம் இன்னும் எளிதாக விளங்க வேண்டுமென்றால் திருக்குர்ஆனில் அல்லாஹ் வேறு ஒரு வசனத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

(அல்குர்ஆன்: 55:19), 20)

நாம் அந்தக் கடலைப் பார்க்கும் போது இரண்டு கடலும் ஒன்றோ டொன்று ஒட்டி, கலந்திருப்பதைப் போன்று தெரியும். ஆனால் அதற்கு மத்தியில் கண்ணுக்குத் தெரியாத, உடைக்க முடியாத ஒரு திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான்.

இதே போன்றுதான் இறந்துவிட்ட மனிதனுக்கும், உலகத்திற்கும் மத்தியில் ஒரு கடினமான திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான். அவனுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்து விட்ட மனிதர்கள் யாரும் திரும்ப இந்த உலகிற்கு வர முடியாது. அவனுக்கும் அவனுடைய உலகம் சார்ந்த செயல்பாட்டிற்கும் இடையில் ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டாலும் சரி! பூமியின் மேற்பரப்பிலேயே மரணித்தவராக இருந்தாலும் சரி! இந்த உலகத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும்.

அந்தத் தடையை மீறி யாராலும் இந்த உலகத்திற்கு வரவும் முடியாது. இந்த உலகத்தில் நடக்கும் செயல்பாட்டினை அறிந்து கொள்ளவும் முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது.

ஆனால் இன்றைய முஸ்லிம்கள், மண்ணறையில் அடக்கம் செய்யப் பட்டவர்கள் நல்லடியார்கள் என்றும், அவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களைக் கண்கானிக்கின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.

மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்படாத, பூமியின் மேற்பரப்பில் இறந்து கிடந்த, முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு நல்லடியாரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்னில் குறிப்பிடும் போது,

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக் குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகி றோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக் கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:159)

இவ்வசனத்தில் நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகளாக மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பி லேயே அவரது உடல் கிடந்தது.

ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இறந்து போன நல்லடியார்களிடம் சில முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால் இறந்தவருக்கோ இவர் பிரார்த்தனை செய்தது கூடத் தெரியாது என்பதை இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த வசனத்திலிருந்து இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே நாமாக ஒருவரை நல்லடியார் என்று சொல்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைத்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்.

ஒருவேளை அப்படியே அவர்கள் நல்லடியார்கள் தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவர்களிடத்தில் பிரார்த்திப்பது என்பது நியாயமற்ற, இறைவனால் ஏற்றுக் கொள்ள முடியாத, மன்னிக்க முடியாத செயல் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம்.

முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள்.

அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று சொல்ல முடியுமா? அதிலும் குறிப்பாக இறந்து போன, மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்களை விட உயிரோடு இருக்கின்றவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களை அறிவதற்குச் சாத்தியம் இருக்கிறது. மேலும் மண்ணறைக்குள் இருந்து உலகத்தைப் பார்ப்பதை விட வானத்தில் இருந்து பார்ப்பது தான் மிகவும் எளிதும் கூட. வானத்திலிருந்து நாம் அனைத்தையும் பார்த்து விடலாம்.

ஆனால் இறைவன் மறுமையில் நபி ஈஸா அவர்களை எழுப்பி விசாரிக்கும் போது கிறித்தவர்கள் தன்னை வணங்கியதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆனிலே நாம் பார்க்க முடிகிறது.

“மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப் பார். “நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்.) (அல்குர்ஆன் 5.116,117)

உயிரோடு இருக்கின்ற ஒரு நபியால் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாத போது, இறந்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்ட அப்துல் காதிர் ஜீலானியால் அறிய முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியால் இந்த உலகத்தில் உள்ளதை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும். வேறு எந்த நபிமார்களாலும் அறிய முடியாது என்று நாம் சொல்லும் போது, நம்மில் சிலர், ஈஸா நபி அறியாத விஷயங்களைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு அந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வார்கள்.

ஆனால், கீழ்க்கண்ட செய்தியை நாம் படிக்கும் போது நபி (ஸல்) அவர்களும் இந்த உலகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். உயிரோடு இருக்கும் போது வேண்டுமானால் அவர்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் அறிவார்கள் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லாத வகையில் பின்வரும் செய்தி அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு “இவர் கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக் குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 4625)

மேலும் இந்தச் செய்தி 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 704, 7049(முஸ்லிம்: 365, 4247, 4250, 4259, 5104)ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில், நபியவர்கள் பூமியில் உயிருடன் இருக்கும் வரைக்கும் தான் மக்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனிப்பவர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் மரணித்த பிறகு மக்கள் செய்வதைக் கண்கானிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் என்பதும் நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். பதில் தர மாட்டார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களை மேற்கோள் காட்டிச் சொல்லும் போது, இந்தக் கப்ரு வணங்கிகள், தர்ஹா வழிபாட்டு ஆதரவாளர்கள் “இறந்தவர்கள் செவியேற்பார்கள். அவர்கள் அற்புதங் கள் செய்வார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பதற்கு எங்களிடத்தில் ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். நாம் காட்டிய ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்து விட்டு, இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எங்களிடத்தில் வேறு ஆதாரங்கள் இருக்கின்றது என்று சொல்கிறார்கள்.

அப்படி அவர்கள் வைக்கக்கூடிய ஆதாரங்களையும் அதற்கு நம்முடைய விளக்கத்தையும் இனி பார்ப்போம்.

இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரு மாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார். பிறகு “(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்‘ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப் பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல் வதையே நானும் சொல்லிக் கொண் டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் “நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.”

(புகாரி: 1338)

மேலும் இந்த செய்தி(புகாரி: 1285),(முஸ்லிம்: 5116),(திர்மிதீ: 991), அபுதாவூத் 4127 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

“மக்கள் மய்யித்தை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எப்போதும் கேட்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.

அப்படி நாம் விளங்கக் கூடாது என்பதற்காகத் தான் நபியவர்கள் “திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது” என்று கூறுகிறார்கள். திரும்பிச் செல்லும் போது என்ற வார்த்தை, எப்போதும் கேட்காது, திரும்பிச் செல்லும் போது மட்டும் தான் கேட்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஒருவரை மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டு, நம்மை விட்டு எல்லோரும் திரும்பிச் செல்லும் போது, அந்த மய்யித்துக்கு நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத் தான் இறைவன் இந்த ஒரு ஏற்பாட்டை செய்கிறான்.

எனவே இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள் பல்வேறு திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் வசதியாக ஒன்றை மறைத்து விடுவார்கள்.

மக்கள் திரும்பிச் சென்றவுடன் மலக்குமார்கள் இறந்தவரிடம் வந்து விசாரணை செய்கிறார்கள். அவர் மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டால் மலக்குகள் அவரை நோக்கி “அல்லாஹ் அவரை அவருடைய படுக்கையிலிருந்து எழுப்புகின்ற வரை நெருக்கமான வர்களைத் தவிர வேறு யாரும் எழுப்ப முடியாதே அப்படிப்பட்ட புது மாப்பிள்ளை போன்று தூங்கு” என்று கூறி விடுவார்கள். தீயவராக இருந்தால் அவருக்கு கியாமத் நாள் வரை வேதனை செய்யப்படும் என்பதையும் நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். (பார்க்க: திர்மிதி 991)

இறந்தவர்களை இறைவன் கியாமத் நாளில் தான் எழுப்புவான். எனவே இறந்துவிட்ட நல்லடியார்கள் கியாமத் நாள் வரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். அதேபோன்று கெட்டவர்கள் கடுமை யான முறையில் அவர்களுடைய விலா எலும்புகள் நொருங்கி போகின்ற அளவுக்கு வேதனை செய்யப்பட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களும் நாம் செய்வதை அறிய மாட்டார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆக மேற்கண்ட ஹதீஸை வைத்து இறந்தவர்கள் செவியேற் பார்கள் என்ற கருத்து தவறான வாதமாகும்.

அதே நேரத்தில், இந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவுமில்லை. என்ன அளவுகோல் சொல்லப்பட்டிருக் கின்றதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அடக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மட்டும் தான் செருப்போசையை கேட்பார்கள். பிறகு அதுவும் முடியாமல் போய்விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் வைக்கக் கூடிய இரண்டாவது வாதம், பத்ருப் போர் முடிந்த பிறகு நடந்த சம்பவமாகும்.

அந்தப் போரில் கொல்லப்பட்ட எதிரிகள் அங்கு இருந்த பாழடைந்த கிணற்றில் போடப்பட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று வாதிடுகின்றனர். அந்தச் சம்பவம் பின்வருமாறு,..

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்த மானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தர விட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின் றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங் களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணை யாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)

நூல்: புகாரி (3976)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்களை நோக்கி பேசும் போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உயிரில்லாத உடல்களிடம் என்ன பேசுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பதிலளிக்கும் போது, “இப்போது அவர்கள் நான் அவர்களிடம் கூறுவதை கேட்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: நஸயீ 2076

இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றிருக்குமானால் நபியவர்கள், “இறந்தவர்கள் கேட்கிறார்கள்’ என்று பொதுவாகக் கூறியிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறவில்லை. “இப்போது கேட்கிறார்கள்” என்று தான் கூறுகிறார்கள்.

எனவே, அந்த நேரம் தவிர எப்போதும், வேறு யாரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள் என்பதைத் தான் நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இது பத்ருப் போரில் கொல்லப்பட்ட காஃபிர்களுக்கு மட்டும் தான் உரியதே தவிர அனைத்து இறந்தவர்களுக்கும் உரியது கிடையாது.

மேலும் இந்த ஹதீஸில் ஒரு பகுதியை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்ற இல்லாத கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய இவர்கள் நபியவர்கள் இதனைத் தொடர்ந்து “அவர்கள் கேட்டாலும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” (முஸ்லிம்: 5121) என்று கூறுகின்ற வாசகத்தை மறைத்து விடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் “அவர்கள் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” என்றும் வருகிறது. ஆனால் நபியவர்களின் இந்தக் கூற்றுக்கு மாற்றமாக இவர்கள் இறந்தவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது மாபெரும் இணைவைப்புக் காரியமாகும்.

இவை தவிர “அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது” என்று கூறும் நூற்றுக் கணக்கான வசனங்கள் திருக் குர்ஆனில் உள்ளன.

மேலும் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அருமையான விளக்கத் தையும் பாருங்கள்.

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப் படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிற தென்றால், “(குறைஷித் தலைவர் களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற் கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80), (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22) “நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

நூல்: புகாரி (3978, 3979)

மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்கின்ற இஸ்லாத்தின் அடிப்படையை மிகச் சரியாக புரிந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரில்லாத உடல் களிடம் என்ன பேசுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபிகளார் பொதுவாக இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்று கூறாமல், “இப்போது அவர்கள் கேட்கிறார்கள்” என்று வரையறுத்து கூறுவதையும், “அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்” என்ற நபிமொழியின் இறுதிப் பகுதியையும் கருத்தூன்றிப் படிப்பவர்கள், இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எதிராக அமைந்துள்ள இச்செய்தியை ஆதாரமாகக் காட்டமாட்டார்கள்.

ஒரு மனிதர் உயிரோடு வாழ்கின்ற நேரத்தில் கூட அவருடைய விருப்பத்தின் படி அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்ய முடியாது என்பதையும், நபிமார்கள் உட்பட யாராக இருந்தாலும் மரணத்திற்குப் பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான செயல்பாடும் அவர்களுக்கு கிடையாது என்பதையும் நாம் இதுவரை பார்த்து வந்தோம்.

ஒருவர் மரணித்து விட்டார் என்று சொன்னால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத பர்ஸக் எனும் ஒரு திரையைப் போட்டு விடுகிறான். அவர்களால் இந்தப் பூமிக்கு வர முடியாது. இங்குள்ள விஷயங்கள் அங்கு செல்லாது என்பதையும் நாம் பார்த்தோம்.

அதற்குச் சான்றாக நபிகளாரின் செய்தி ஆதாரமாக இருப்பதை நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், “கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 1316)

நாம் நம்முடைய தோளில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இறந்து போன ஜனாஸா மேற்கண்டாவாறு சொல்வதை நம்மால் செவியுற முடிகிறதா? அந்த ஜனாஸா பேசுவதாக அல்லாஹ்வின் தூதர் வஹீ மூலமாக அறிந்து நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அந்த ஜனாஸா நம்முடைய தோளில் இருந்தாலும் அது பேசுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை என்றால் அந்த ஜனாஸாவிற்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் ஒரு தடுப்பை ஏற்படுத்தி விட்டான். அது பேசுவதை நம்மால் அறிய முடியாது. அவர்களின் பேச்சு உயிரோடு இருக்கின்ற நமக்கு வந்து சேராது. இது நமக்குத் தேவையுள்ள விஷயமாக இருப்பதின் காரணத்தினால் அல்லாஹ்வின் தூதர் நமக்கு இதனைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.

மேலும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு மனிதன் இறந்த பிறகு மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் துண்டிக்கப்படும். 1) பயனளிக்கும் கல்வி 2) நிரந்தர தர்மம் 3) அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை.

அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)

(முஸ்லிம்: 3083)

இந்தச் செய்தி, மனிதன் இறந்து விட்டான் என்றால் அவனுக்கும் அவனுடைய செயலுக்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதையும், அவனுடைய செயலை அவனால் தொடர்ந்து செய்யவும் முடியாது என்பதையும் தெரிவிக்கிறது. மேற்கண்ட 3 காரியங்களைத் தவிர மனிதனுக்கு இந்த உலகத்தோடு இருக்கின்ற உறவு முறிந்து விடுகிறது.

ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாய மக்கள், உயிரோடு இருந்ததை விட இறந்த பிறகுதான் அவரிடமிருந்து பல செயல்கள் வெளிப்படுவதாக நம்புகிறார்கள். உயிரோடு உள்ளவர்களை வைத்து பல தெய்வ வணக்கம் எங்காவது நடக்கிறதா? கிடையாது. இறந்து போனவர்களைத்தான் சிலையாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறந்து போனவர்களைத்தான் கப்ருகளாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரோடு உள்ளவர்களைக் கடவுள்களாக வைத்து வணங்கினால் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவரும் நம்மைப் போன்று மலம் ஜலம் கழிக்கிறார், சாப்பிடுகிறார் என்பதை அவன் நேரில் பார்க்கும் போது அவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஆனால் அதே மனிதன் இறந்த பிறகு, உயிரோடு இருக்கும் போது ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதை விட சக்தி வாய்ந்த ஆற்றல் இருப்பதாக நம்புகிறான்.

அதற்குத் தான் மேற்கண்ட ஹதீஸ், ஒருவன் இறந்துவிட்டால் அவனால் எந்தச் செயலும் செய்ய முடியாது என்பதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கிறது.

மேற்கண்ட இந்த ஹதீஸைச் சுட்டிக்காட்டி நாம் இவ்வாறு தெளிவுபடுத்தும் போது, ஒரு சிலர் இதற்கு எதிர்வாதத்தை வைப்பார்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்ட தியாகிளை அல்லாஹ் அதிகமாகவே புகழ்ந்து சொல்கிறான். வேறு யாருக்கும் கொடுக்காத சிறப்பை அல்லாஹ் இந்த ஷஹீத்களுக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 2:154)

இதே கருத்தில் அமைந்த இன்னொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

(அல்குர்ஆன்: 3:169),170

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று சொல்லக்கூடாது. மாறாக அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இருக்கும் போது மனிதன் செவியேற்பதைப் போன்று அடக்கம் செய்யப்பட்டவர்களும் செவியேற்பார்கள். உயிருடன் உள்ளவர்கள் பார்ப்பதைப் போன்று இறந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களாவர். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம்: உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மேற்கண்ட இரு வசனங்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்ளுக்குத்தான் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு முகவரி இல்லாதவர்களையெல்லாம், யாரென்று தெரியாதவர்களை யெல்லாம் இறைநேசர்கள் என்று சொல்லி அவர்களை வணங்குவது அறிவற்ற வாதம்.

அப்படியே நாம் அவ்வாறு சொல்வதாக இருந்தால் நபிகளார் காலத்தில் பத்ரு மற்றும் உஹதுப் போன்ற போர்க்களங்களில் எதிரிகளுடன் போர் செய்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களைத்தான் நாம் சொல்ல வேண்டுமே தவிர இப்போது யாராவது இறந்தார்கள் என்றால் அவர்களை நாம் அப்படி சொல்லக்கூடாது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் இன்று தமிழகம் முழுவதும் அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர் அனைவரும் ஏதாவது போர்க்களத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களா? ஷஹீதானவர்களா? அவர்களில் யாராவது ஒருவரை அவ்வாறு சொல்ல முடியுமா? அவர் சாதாரணமான முறையில் இறந்தவராகத்தான் இருப்பார்.

மேலும், அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் நாம் முகம் சுளிக்கக்கூடிய அளவிற்குத்தான் அவர்களுடைய வரலாறுகள் இருக்கின்றன. பீடி குடித்து இறந்து போனவர்கள் அல்லாஹ்வின் இறைநேசராம்! கஞ்சா குடித்து இறந்து போனவர்கள் இறைநேசராம்! இவ்வாறு யாரென்று தெரியாதவர்களைத்தான் இவர்கள் இறைநேசர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும், முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

(முஸ்லிம்: 3834)

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் ‘புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!’ எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? உயிருடன் இருப்பதற்காக ஒருவரை அழைத்துப் பிரார்த்திக்க முடியுமா என்பதை அடுத்து பார்ப்போம்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அவர்கள் சொர்க்கத்தில் பச்சை நிறப் பறவை வடிவத்தில் இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்பதையும் கண்டோம்.

ஒரு வாதத்திற்கு கப்ரு வணங்கிகள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே இன்று வரை உயிருடன்தான் உள்ளார். இதைத் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியாகும்? ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காக போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் தாமதிக்காமல் உடனடியாக சொர்க்கத்திற்குதான் முதலில் செல்வார்கள். அவர்களின் உடல் மட்டும்தான் மண்ணறைக்குள் இருக்கும். உயிர் (ஆத்மா) சுவனத்தில் இருக்கும் என்று மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதாவது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்பதற்கு யாசீன் என்ற அத்தியாயத்தில் வரக்கூடிய வசனங்களும் சான்றாக அமைந்திருக்கின்றன. (பார்க்க: யாசீன் அத்தியாயத்தில் 13-வது வசனம் முதல் 26 வரை)

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். ஞ்ஞ்நாங்கள் உங்களை கெட்ட சகுனமாகவே கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையென்றால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும் என்று (அவ்வூரார்) கூறினர்.

…சொர்க்கத்திற்கு செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 36:13-26)

இவ்வசனத்தில் ஒரு நல்ல மனிதர் இறைத்தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென சொர்க்கத்திற்குச் செல் எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.

அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொல்லப்பட்டவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்ற கருத்தையும் இவ்வசனம் தருகிறது.

கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.

இதில் இவரைப் போன்ற அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சாகாமல் நம்மைப்போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்குப் பொருள் செய்தால் அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று இவர்களிடம் கேட்டால் செய்யலாம் என்று தான் பதிலளிக்கிறார்கள்.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

மேற்கண்ட வசனங்களை வைத்து இறந்தவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று சொல்வது தவறான வாதமாகும்.

அடுத்ததாக, நபியவர்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரத்தையும் காட்டுவார்கள்..

அதாவது நாம் நபியவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். அதே போன்று அவர்கள் மீது சலாமும் சொல்ல வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறான். அந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, ‘நாம் நபியவர்கள் மீது சொல்லக்கூடிய சலாமை அவர்கள் செவியேற்று நமக்கு பதில் சலாம் சொல்வார்கள். எனவே அவர்கள் உயிருடன் தான் உள்ளார்கள். அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் தொடர்பு உள்ளது. பர்ஸக் எனும் தடையிலிருந்து அவர்கள் விதிவிலக்கு பெற்றவர்கள்’ என்ற ஒரு வாதத்தை வைக்கின்றனர்.

(குறிப்பு. சலவாத் என்பது நபியவர்களுக்காக நாம் அல்லாஹ்விடத்தில் செய்யக்கூடிய பிரார்த்தனை (துஆ) ஆகும். தொழுகையில் அத்தஹிய்யாத்தின் போது ”அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்” என நாம் ஓதக்கூடிய துஆ. சலாம் என்பது அவர்களுக்கு நேரிடையாக துஆ செய்வது ஆகும். அதுவும் அத்தஹிய்யாத்தின் போது ஆரம்பத்தில் வருகிறது.)

இவ்வாறு அவர்கள் வைக்கும் வாதம் எந்தெந்த வகையில் தவறானது என்பதை நாம் பார்ப்போம்.

அவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனம் இதுதான்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கைக் கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள். சலாமும் கூறுங்கள்.

(அல்குர்ஆன்: 33:56)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டுதான் கபுர் வணங்கிகள், நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் உயிருடன் இருப்பதால்தான் அல்லாஹ்வும் அவர் மீது சலாம் சொல்லச் சொல்கிறான். இறந்துபோன, செவியேற்காதவர்களுக்கு அல்லாஹ் சலாம் சொல்லச் சொல்வானா? அவ்வாறு சொல்ல மாட்டான்.

மாறாக உயிருடன் இருக்கின்ற, நாம் சொல்வதைச் செவியேற்கின்ற, புரிகின்ற தன்மையுள்ள, நாம் சொல்வதற்கு பதிலளிக்கின்றவர்களுக்குத்தான் சலாம் சொல்லச் சொல்வான். அந்த அடிப்படையில் நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். எனவே நாம் அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும். பதிலுக்கு நபியவர்களும் நம் மீது பதில் சலாம் சொல்வார்கள் என்று கூறுகின்றனர்.

மேலும், அத்தஹிய்யாத் இருப்பில் நாம் நேரிடையாக நபியைக் கூப்பிட்டு ”அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்று ஓதுகின்றோமே! இதற்கு என்ன அர்த்தம்?

நபியே! உங்கள் மீது சலாமும், அருளும், அபிவிருத்தியும் உண்டாகட்டுமாக என்று சொல்கின்றோம் என்றால் உயிருடன் இல்லாத ஒருவரை இவ்வாறு கூப்பிடுவோமா! நாம் சலாம் சொல்வதாக இருந்தால் உயிருடன் உள்ள ஒருவரைத்தான் நாம் கூப்பிட்டு சலாம் சொல்வோம் என்றும் கூறுகின்றனர்.

இந்த வாதம் அடிப்படை அறிவற்ற வாதம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது அவர்கள் பதில் சலாம் சொல்வார்கள் என்றால், உயிருடன் இருக்கும் போது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ’’ என்று நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள். அப்படியானால் அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?

அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதால் நபியவர்கள் உயிரோடு இருந்து அதைச் செவியுறுகிறார்கள் என்று பரேலவிகள் முன்வைக்கும் வாதத்திற்கான பதிலைக் கண்டோம்.

நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது பதிலுக்கு அவர்கள் இப்போதும் (இறந்த பிறகும்) நம் மீது சலாம் சொல்வார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்ற துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள். அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?

அது மட்டுமல்லாமல் ஹிஜ்ரி 10-களிலெல்லாம் இஸ்லாம் மக்கா மதினா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியிருந்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். அத்தனை இலட்ச மக்களும் தங்களுடைய தொழுகையில் மேற்கண்ட அத்தஹிய்யாத் துஆவை ஓதும் போது நபிகளார் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?

தொழுகை நேரம் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். உலகம் முழுவதும் 24 மணி நேரமும் கடமையான, சுன்னத்தான தொழுகைகள் என்று நடந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் அனைவரும் தொழுகையில் சலாம் கூற நபியவர்கள் பதில் சலாம் சொன்னார்களா?

நபியவர்கள் பதில் சலாம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அதுதான் 24 மணி நேர வேலையாக இருந்திருக்கும். வேறு எந்த வேலையும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் உயிருடன் உலகில் வாழும் போது தொழுகையில் ஸலாம் கூறிய பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கும் பதில் சலாம் கூறவில்லை என்று இருக்கும் போது இப்போது எப்படி நாம் சலாம் சொன்னால் பதில் சொல்வார்கள்?

ஆக, திருக்குர்ஆனின் 33:56 வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் தவறானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்திற்கான விளக்கத்தை நபியவர்கள் அன்றே சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே நாம் குழம்ப வேண்டியதில்லை.

நாம் சலாம் சொன்னால் நபிகளார் பதில் சலாம் கூறுவார்கள் என்று ஆரம்பித்து கடைசியில் நபிகளார் மட்டுமல்ல அனைத்து நல்லடியார்களும், கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நாம் சலாம் சொல்வதைச் செவியுறுவார்கள். பதில் சலாம் சொல்வார்கள் என்ற அளவிற்குச் சென்று விட்டனர்.

இதற்கும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகின்றனர்.

மண்ணறைகளைச் சந்திக்கும் போது ஓத வேண்டிய கீழ்க்காணும் துஆவை நபிகளார் கற்றுத் தருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1773)

இந்த ஹதீஸைக் கொண்டு இறந்து போன அனைவரும் நாம் பேசுவதையும், சலாம் கூறுவதையும் கேட்கிறார்கள் என்று வாதிடுகின்றனர். “அடக்கம் செய்யப்பட்டவர்களே என்று அழைத்து நாம் சலாம் சொல்வதிலிருந்தே அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றதா இல்லையா?” என்று கூறுகின்றனர்.

ஆனால் நாம் இந்த ஹதீஸை சற்று சிந்தித்துப் பார்க்கும் போது இந்த துஆவை நபியவர்கள் ஏன் செய்தார்கள்? எதற்காக நம்மையும் செய்யச் சொன்னார்கள் என்பது விளங்கும். வேறொரு ஹதீஸை நாம் பார்க்கும் போது இதற்கான விளக்கம் தெரியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

(திர்மிதீ: 974)

நபியவர்கள் மண்ணறைகளைச் சந்திக்கச் சொன்னது இறந்தவர்களிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காவோ அவர்களிடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மறுமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் தான் மண்ணறைகளுக்குச் சென்று வர வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்.

நபியவர்கள் அனுமதித்த கப்ர் ஜியாரத் என்பது இறந்தவர்கள் அனைவரும் அடக்கம் செய்யப்பட்ட பொது மையவாடிக்கு செல்வதுதான். ஆனால் இந்த கப்ரு வணங்கிகள் பொது மையவாடிக்குச் செல்வதில்லை. மாறாக ஸியாரத் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரை நல்லடியார் என்று இவர்களாகக் கற்பனை செய்து கொண்டு அவரது கப்ரில் மார்க்கம் தடை செய்த பல காரியங்களை செய்து வருகின்றனர்.

அங்கு போய் இறந்து போன மனிதர்களிடத்தில் பிரார்த்தனையும் செய்து இறைவனுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலையும் செய்து வருகின்றனர். ஆனால் நபியவர்களோ இறந்து விட்ட நல்லடியார்களது கப்ருகளுக்கு நாம் சென்றால் நாம் தான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

உயிரோடு இருப்பவர்கள்தான் இறந்து விட்டவர்களுக்காக ஏதேனும் உதவி செய்ய முடியுமே தவிர, இறந்து விட்டவர்களால் உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை நபியவர்களின் இந்தக் கட்டளையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபிகளார் மட்டுமல்ல எந்த மனிதருக்கும் நாம் பேசுவதும் சலாம் சொல்வதும் கேட்காது என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

நபிகளார் மீது சலாம் சொல்வதை அவர்கள் நேரடியாகக் கேட்க முடியாது என்றாலும் மலக்குமார்கள் நம்முடைய சலாமை நபியவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று ஹதீஸ்களில் வருகின்றது. உலகத்தின் எந்த இடத்திலிருந்து யார் நபியின் மீது ஸலவாத் சொன்னாலும் அதை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள்.

அல்லாஹ் சில மலக்குமார்களை நியமித்து வைத்திருக்கிறான். நீங்கள் என்மீது சொல்கின்ற சலாமை அவர்கள் எனக்கு எடுத்துக் காட்டுவார்கள் என்று நபியவர்கள் கூறியதாக வரும் செய்தி நஸாயியில் 1265வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியில் நபியவர்கள் நாம் சலாம் சொன்னால் நேரடியாக கேட்பார்கள் என்றால் அல்லாஹ் ஏன் மலக்குமார்களை நியமிக்க வேண்டும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதன் இறந்து விட்ட பிறகு அவனுக்கு இந்த உலகத்துடன் உள்ள எல்லாத் தொடர்புகளுமே நிறுத்தப்படுகின்றன; துண்டிக்கப்பட்டு விடுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம்.

அதனுடைய தொடர்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது சம்பந்தப்பட்ட செய்தியில், ஸலாமை என்னிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்திருக்கிறான். அவர்கள் வழியாகத்தான் அது என்னிடத்தில் வந்து சேரும் என்று சொன்னதிலிருந்து பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

முதலாவது, இந்த உலகத்திலுள்ள எல்லா விஷயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்கு அது தேவையுமில்லை. அவர்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறான். அந்த விஷயங்களைக் கூட நபியவர்களை நேரடியாகக் கேட்கச் செய்யாமல் மலக்குமார்களின் வழியாக அந்தச் செய்திகள் போய்ச் சேருகின்றது என்பதைப் பார்க்கிறோம்.

‘‘உங்களுடைய நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன நிலையில் நாங்கள் சொல்கின்ற சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும்?’’ என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ‘‘இறைவன் நபிமார்களுடைய உடல்களை (சாப்பிடுவதை விட்டும்) பூமிக்குத் தடை செய்து விட்டான்’’ என்றார்கள்.

(அபூதாவூத்: 1049)

நபிமார்களின் உடலை மண் சாப்பிடாது என்பதை அல்லாஹ் இந்த உலகத்திலேயே காட்டுகிறான். நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணிக்கிறார்கள். புதன்கிழமை அன்று அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த 3 நாட்களில் சாதாரண மனிதர்களின் உடல் அழுகி துர்நாற்றம் அடித்துவிடும். ஆனால் நபியவர்களின் உடல் 3 நாட்களாகியும் அழுகாமல் துர்நாற்றம் அடிக்காமல் இருந்திருக்கின்றது.

அதனால் தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த பிறகு, நீங்கள் உயிருடன் இருக்கும் போதும் மணம் கமழுகிறீர்கள். இறந்த பிறகும் மணம் கமழுகிறீர்கள் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அல்லாஹ் அவர்களின் உடல்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறான். இது நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பு.

ஆக மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் சலவாத்தும் சலாமும் மட்டும்தான் அவர்களுக்கு மலக்குமார்களால் எடுத்துச் சொல்லப்படுமே தவிர வேறு எந்தச் செய்தியும் எடுத்துச் சொல்லப்படாது. அவர்கள் அதை நேரடியாக அறியவும் மாட்டார்கள். அது அவர்களுக்குத் தேவையுமில்லை என்பது விளங்குகிறது.

நாம் சலவாத்தும் சலாமும் சொல்வது, கப்ரு ஜியாரத் செய்யும் போது நாம் ஓதுகின்ற துஆ இவற்றை வைத்துக் கொண்டு, இறந்து போனவர்களும் நபியவர்களும் யாருடைய உதவியின்றி செவியேற்பார்கள் என சிலர் வாதிடுகின்றனர்.

அனஸ் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்‘ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்‘ என்றார்கள்.

நூல்: புஹாரி 1303

இந்தச் செய்தியில், நபியவர்கள் தன்னுடைய மகன் இப்ராஹீமைப் பார்த்து, நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகம் கவலைப்படுகிறோம் என்று சொன்னது, தனது பாசத்தை மக்களுக்கு விளக்குவதற்குத்தான். தான் சொன்னதை தனது மகன் செவியேற்பார் என்பதற்காக அல்ல!

இதுபோல் பேசுவது எல்லா மக்களிடத்திலும் உள்ளது தான். இன்று நாம் இறந்தவர் வீடுகளில் சென்று பார்த்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். இறந்து போனவர் அருகில் அமர்ந்து கொண்டு இறந்து போனவரை நோக்கி, ‘நீ என்னை தனியாக விட்டுப் போய் விட்டாயே! நானும் உன்னுடனே வந்து விடுகிறேன்’ என்று சொல்வார்கள்.

அல்லது யாரேனும் அரசியல் தலைவர்கள் இறந்து விட்டால் அவரை நோக்கி, ‘தலைவரே! கட்சியை அனாதையாக்கி விட்டு விட்டுப் போய் விட்டீர்களே! இனிமேல் இந்தக் கட்சியை கட்டிக் காக்க யார் இருக்கிறார்?’ என்று சொல்வதையும் பார்க்கிறோம்.

நாம் சொல்வதை அவர்கள் விளங்குவார்கள் என்று அவரைக் கூப்பிடுபவரும் நினைக்க மாட்டார். மக்களும் நினைக்க மாட்டார்கள்.

இந்த வார்த்தையை இவர்கள் சொல்வதற்குக் காரணம் அவர் செவியேற்பார். நாம் சொல்வதை விளங்கிக் கொள்வார் என்பதற்காக அல்ல. அவரை நோக்கிச் சொல்கின்ற தோரணையில் ஒரு செய்தியை மக்களுக்கு விளங்க வைப்பதற்காகத்தான்.

இறந்தவர்களை நேரடியாகக் கூப்பிட்டுச் சொல்வதால் அவருக்குக் கேட்கும் என்று விளங்கி விடக்கூடாது. விளங்கக் கூடிய நிலையில் உள்ளவற்றை நோக்கிப் பேசுவதும், எதையும் விளங்காத நிலையில் உள்ளவற்றை நோக்கிப் பேசுவதும் அனைத்து மக்களிடத்திலும் சாதாரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். இலக்கியங்களில் இவ்வாறு பேசக் கூடிய வழமையும் உள்ளது.

நாகூர் ஹனீபா ‘‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு” என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதை வைத்து அவர் தென்றால் காற்றைக் கூப்பிட்டு அதை நிற்கச் சொல்கிறார். எனவே தென்றல் காற்றுக்கு நாம் சொல்வது விளங்கும் என்று சொல்வோமா!

இது மிகைப்படுத்தி, உவமைப்படுத்தி சொல்லக்கூடிய வார்த்தைகள் தானே தவிர, நாம் சொன்னதால் காற்று அதை விளங்கவும் செய்யாது. அது நம்முடைய கட்டளையின்படி நிற்கவும் செய்யாது.

இறந்தவர்களிடம் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். உயிருடன் இருக்கின்ற அதுவும் பிறந்து ஒரு நாள் ஆன குழந்தைக்கு நாம் சொல்வது கேட்குமா? ஆனால் தாய் அந்தக் குழந்தையை நோக்கி, கண்ணே, கண்மணியே, செல்லமே என்று கூப்பிட்டுக் கொஞ்சுவாள். இதை வைத்துக் கொண்டு அந்தக் குழந்தை தாய் சொல்வதைக் கேட்கும் என்று சொல்ல முடியுமா?

இறந்தவர்களை நோக்கிப் பேசினாலும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு நபிகளாருடைய காலத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் ஆதாரமாக இருக்கின்றது,

நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) ‘அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.’

(புகாரி: 1243)

இந்தச் சம்பவத்தில் உம்முல் அஃலா என்ற பெண், இறந்த கிடந்த உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி, ‘அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று சொன்னார்களே! இந்த வார்த்தையை அவர்கள் செவியேற்பார்கள் என்பதற்காகச் சொன்ன வார்த்தை இல்லை. அவ்வாறு எந்த நபித்தோழர்களும் புரிந்து வைத்திருக்கவில்லை. மாறாக அந்தப் பெண்மணி, அவர்களுடைய தியாகத்தை நினைவு கூரும் விதமாகச் சொன்ன வார்த்தைகள். அதை மற்ற மனிதர்களுக்கும் விளங்க வைக்க வேண்டும் என்பதற்காகச் சொன்ன வார்த்தைகளாகும்.

இதுபோன்று தான் அத்தனை விஷயங்களையும் இடம், பொருள் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும். அதல்லாமல் எல்லா விஷயங்களுக்கும் நேரடி அர்த்தம் கொடுத்தோம் என்றால் அத்தனையும் தவறாக ஆகிவிடும்.

நபியவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கப்ரு வணங்கிகள், நபியவர்களே ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள், ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள்! நபியவர்கள் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் உயிரில்லாத ஒருவரையா சந்திக்கச் சொல்வார்கள்? உயிருடன் உள்ளவர்களைத்தானே சந்திக்க சொல்வார்கள்? எனவே கப்ரைச் சந்தியுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்தே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நாம் சொல்வதைச் செவியேற்பார்கள். நமக்கு உதவியும் செய்வார்கள் என்று பைத்தியக்காரத்தனமான ஒரு வாதத்தை வைக்கின்றார்கள்.

ஜியாரத் என்ற சொல்லுக்கு மனிதரைச் சந்திப்பது என்ற குறுகிய அர்த்தம் கிடையாது. அதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி, எக்மோர் சந்திப்பு என்று சொல்கிறோம். இதிலும் சந்திப்பு என்று வந்திருக்கிறது. அதனால் இரயிலை போய் சந்தித்து விட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கொள்வோமா! ஆனால் இந்தச் சந்திப்புக்கும் அரபியில் ஜியாரத் என்று சொல்லப்படும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் நடந்தும் குபாவை சந்திக்கச் செல்வார்கள்.

(முஸ்லிம்: 2705)

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் (கஅபாவை) தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

(புகாரி: 1732)

மேற்கண்ட ஹதீஸ்களில் நபியவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று குபாவைச் சந்திக்கச் செல்வார்கள் என்றும், மினாவில் தங்கும் நாட்களில் கஅபாவை ஸியாரத் செய்தார்கள் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு இவர்கள் கொடுக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் நபியவர்கள் குபாவிற்கோ, அல்லது கஅபாவிற்கோ சென்று அங்குள்ள பள்ளிவாசலிடம் உரையாடுவதற்குச் சென்றார்கள். அதனிடம் துஆச் செய்தார்கள் என்று அர்த்தம் கொடுப்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விட்டது. துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு நேரடியாகக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கபுருக்குச் சென்று நாம் சலாம் சொல்வது அவர்களுக்குக் கேட்கும். நபியவர்கள் கப்ரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். நமது கோரிக்கையை வைக்கலாம் என்று குருட்டுத் தனமான வாதங்களை வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

யாரேனும் ஒருவர் என் மீது சலாம் சொல்வாரேயானால், அவருடைய ஸலாமுக்கு நான் பதில் சலாம் சொல்வதற்காக வேண்டி அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை (உயிரை) திருப்பித் தருகிறான்.

(அபூதாவூத்: 2043)

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இது சரியான ஹதீஸா என்பது ஒருபுறமிருக்க. இதை சரி என வாதிடக்கூடியவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு உரையாற்றும் போது கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸில் ஆழமாகச் சென்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார்கள்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையின் பிரகாரம் நபியவர்கள் மரணிக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வருகின்றது.

நாம் சலாம் சொல்லும் போது மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறான் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் நபியவர்கள் பதில் சலாம் சொன்னவுடன் மீண்டும் அல்லாஹ் அவர்களுடைய உயிரைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

இதில் அவர்கள் பாதியை மறைத்துக் கொண்டு அரையும் குறையுமாக மக்களுக்குச் சொல்வார்கள். பார்த்தீர்களா! நபியவர்கள் உலகில் உள்ள எல்லா மக்களுடைய சலாமிற்கும் பதில் சலாம் சொல்வார்கள். எனவே நபியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக நம்முடைய நிலைபாடு என்னவென்றால், மேற்கண்ட ஹதீஸ் பல நம்பகமான சரியான ஹதீசுக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அதாவது வேறு ஹதீஸ்களில், நபியவர்களுக்குச் சொல்லப்படும் சலாமையும் சலவாத்தையும் மலக்குமார்கள் எடுத்துக் காட்டுவார்கள் என்று வருகின்றது. ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்படும் அனைத்து சலாமிற்கும் இறைவனால் உயிர் கொடுக்கப்பட்டு பதில் சலாம் சொல்வார்கள் என்று வருகின்றது. அப்படியானால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மீது சலாமும், சலவாத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபியவர்கள் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் என்றால் அவர்கள் மரணிக்காமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

அப்படி இருந்தால் நபியவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் நிலையே ஏற்படாது. எப்போதும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு உயிருடன் தான் இருந்திருப்பார்கள். எனவே இந்த ஹதீஸ் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஸலாமுக்குப் பதில் சொல்வதற்காக உயிரைத் திருப்பித் தருகிறான் என்று சொல்வதிலிருந்தே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உறுதியாகி விடுகின்றது.

இவர்கள் கூறும் அர்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நபிகளார் மரணிக்கவில்லை. மரணிக்கவும் மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி மரணிக்காத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதக நிலை ஏற்பட்டு விடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும வணங்கக் கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும் மறைவான ஞானம் இல்லை. அற்புதம் செய்யும் ஆற்றலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவன் மரணிக்காதவன். நித்திய ஜீவன். அவனைத்த தவிர மற்ற அனைவரும் மரணிப்பவர்களே. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருந்தாலும் சரியே! இறைநேசர்களாக இருந்தாலும் சரியே! அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விட்டது என்பதைப் பல்வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம்.

இறுதியாக, இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். நபியவர்கள் பொது மண்ணறைகளைச் சென்று சந்தியுங்கள் என்றார்கள். ஆனால் இவர்கள் இன்று ஒருவரை மகான் என்று தாங்களாகவே சொல்லிக் கொண்டு அவருடைய மண்ணறையைச் சுற்றி ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.

நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களுக்கே இல்லாத ஒரு கட்டடத்தை யாரென்று தெரியாத மனிதர்களுக்குக் கட்டி வைத்திருக்கின்றார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இழிசெயலைத் தான் நபியவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். எந்த அளவிற்கென்றால் தான் மரணிக்கப் போகின்ற கடைசிக் கால கட்டத்தில் கூட இதை (இணை வைப்பை) பற்றித்தான் அதிகமாக எச்சரித்தார்கள்.