31) இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?

நூல்கள்: இணை கற்பித்தல் ஓர் விளக்கம்

அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம்.

நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அற்புதத்தைச் செய்கின்ற ஆற்றலை இறைவன் நபிமார்களுக்குத் தான் வழங்கி யிருக்கிறான். அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை.

மற்றபடி நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உலக வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கும். ஆனால் அந்த அதிசயங்களை அவர்கள் சொல்லி வைத்து செய்வது கிடையாது. அவர்கள் அறியாமலேயே அது நடக்கும். இவ்வாறு நடக்கப் போகின்றது என அவர்களுக்கே தெரியாது. இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இந்த அற்புதங்களெல்லாம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் நிகழும்.

அற்புதங்களை நபிமார்கள் செய்வதாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு அவர்களிட மிருந்தே அவர்கள் அறியாமலே அல்லாஹ் வெளிப்படுத்துவதுகின்ற அற்புதங்களாக இருந்தாலும் சரி! இவை அனைத்துமே அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் செய்ய முடியும். அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது.

ஆனால் நம் சமுதாய மக்கள், அவ்லியாக்கள் உயிருடன் இருக்கும் போதும், மரணித்த பிறகும் அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, அவர்கள் உயிருடன் இருக்கும் போது செய்த அற்புதங்களை விட இறந்த பின்னர் தான் அவர்களுக்கு அதிகமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் பெற்றதாக நினைக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது நாம் செய்வதை அறியாத அவ்லியாக்கள் இறந்த பிறகு நாம் செய்வதை மட்டுமல்ல, உலகில் எங்கு எது நடந்தாலும் அனைத்தையும் அறிகிறார் என்று நம்புகின்றனர்.

உயிருடன் இருக்கும் போது நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. அதே நேரத்தில் நபிமார்களாக இருந்தாலும் எந்தவொரு மனிதர்களாக இருந்தாலும் இறந்த பிறகு அற்புதங்கள் செய்ய முடியுமா? அல்லது அவர்களிட மிருந்து அற்புதங்கள் நிகழுமா என்றால் நிகழாது. அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிமார்களாக இருந்தாலும் இறந்த பிறகு உலகத்தில் நடக்கக்கூடிய எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆனில் உள்ள பல வசனங்கள் சான்றாக அமைகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்.

(அல்குர்ஆன் 7.194)

அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தங்களுடைய கோரிக்கையை வைத்தாலும் அவன் அத்தனை தேவைகளையும் ஒரு வினாடியில் நிறைவேற்றக் கூடியவன். அனைவரையும் அல்லாஹ் தான் படைத்தான். அவ்லியாக்கள் என்று இவர்கள் நினைக்கும் அவர்களையும் அல்லாஹ் தான் படைத்தான். அனைவரும் அவனது அடிமைகளே!

அவனல்லாத மற்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவது இரண்டாவது விஷயம். முதலில் நாம் அவர்களை அழைத்தால் அதைச் செவியேற்க கூட அவர்களுக்கு சக்தி இல்லை. அப்படியே செவியேற்றாலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது என்று சொல்லிக் காட்டுகிறான்.

நாம் இவர்களிடத்தில் கேட்பது என்னவென்றால், தர்ஹாக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு சக்தி, ஆற்றல் இருக்கிறது என்று நீங்கள் வாதிப்பது உண்மையானால் அல்லாஹ் விடக்கூடிய இந்த அறைகூவலை ஏற்கத் தயாரா?

அவர்கள் செவியேற்பார்கள் என்றால் தர்காவிற்குச் சென்று அவர்களை அழையுங்கள்? அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கின்றார்களா என்று பார்ப்போம். நீங்கள் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை அவர்களிடத்தில் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு கப்ரில் இருந்து கொண்டே உங்களுடைய கையில் நீங்கள் கேட்ட பொருளை கொண்டு வந்து தரட்டும். இந்த மாதிரி உலகத்தில் எங்காவது யாருக்காவது நடந்திருக்கிறதா? என்று ஒரு செய்தியை நீங்கள் காட்ட முடியுமா?

இவ்வாறு செய்து காட்டி, நீங்கள் உண்மையாளர்கள், உங்களுடைய கடவுள்களும் உண்மையானது என்று நிருபிக்கத் தயாரா?

இதை நீங்கள் ஒருபோதும் செய்து காட்ட முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.

மேலும், இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 5:109)

அல்லாஹ் ஒவ்வாரு சமுதாயத் திற்கும் அந்தந்த சமுதாயத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இறைச் செய்தியை எடுத்துச் சொல்லக் கூடிய தூதராக அனுப்புகிறான். அவ்வாறு அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் யார் யார் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள்? யார் யார் ஏற்றுக் கொள்ளவில்லை? கொள்கையை ஏற்றுக் கொண்ட மாதிரி நடித்தவர்கள் (முனாஃபிக்குள்) யார்? என்னென்ன துன்பங்கள் ஏற்பட்டது? அந்த துன்பங்களின் போது உறுதியாக இருந்தவர்கள் யார்? விரண்டோடி யவர்கள் யார்? இந்தக் கொள்கையை எதிர்த்த எதிரிகள் யார்? என்பதை தங்களது சக்திக்கு உட்பட்டு நபிமார்கள் அறிந்து வைத்திருந்தனர். சிலவற்றை அல்லாஹ்வே அறிவித்துக் கொடுத்தான்.

ஆனால் அந்த நபிமார்கள் இறந்த பிறகு இவற்றில் எந்த ஒன்றையும் அறிந்து வைத்திருக்கவில்லை. அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. அல்லாஹ் மறுமை நாளில் அனைத்து நபிமார்களிடத்திலும் கேட்பது, நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய சமுதாய மக்களின் நிலை என்ன? என்பதுதான். அதற்கு அவர்கள், இறைவா! அதைப் பற்றிய அறிவு எங்களுக்கு கிடையாது. நாங்கள் எதையும் அறிந்திருக்க வில்லை. யார் யார் கொள்கையில் இருந்தார்கள்? யார் கொள்கையை விட்டு வெளியேறினார்கள்? அல்லாஹ்வை மட்டும் வணங்கிய வர்கள் யார்? சிலைகளை வணங்கியவர்கள் யார்? என்பதை நாங்கள் உயிருடன் இருக்கும் போது தான் அறிந்து வைத்திருந்தோம். இறந்த பிறகு அதை அறியக்கூடிய ஆற்றல் உனக்கு தான் இருக்கின்றது என்று சொல்லி விடுவார்கள்.

ஆக, நபிமார்களாகவே இருந்தாலும் அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதைத் தான் மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:14)

அவ்லியாக்கள் என்ற பெயரில் சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு அத்தனையும் அறியக் கூடிய ஆற்றல், கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்றால், எதற்காக மறுமையில் இறைவனிடத்தில் அவர்கள் மறுக்க வேண்டும்?

நீங்கள் அவ்லியாக்களை (?) அழைத்ததை, அவர்களிடத்தில் பிரார்த்தித்ததை, கோரிக்கைகளை முன் வைத்ததை ஏன் மறுக்க வேண்டும்? அவர்களுக்கு ஆற்றல் உண்டு என்றால் அல்லாஹ்விடத்தில், “எனக்கும் உன்னைப் போன்ற ஆற்றல், வல்லமை இருக்கிறது. உன்னிடத்தில் அவர்கள் கேட்பதை நீ கொடுப்பது போன்று என்னாலும் கொடுக்க முடியும்’ என்று சொல்லியிருக்க வேண்டியது தானே!

ஆனால், மேற்கண்ட வசனத்தில் “நான் யாரையும் என்னை வணங்கு மாறு சொல்லவில்லை. என்னை அழைக்குமாறு, என்னிடத்தில் கோரிக்கைகளை முன் வைக்குமாறு சொல்லவில்லை. நாங்கள் அதனை மறுத்து விடுகின்றோம்’ என்று அந்த அவ்லியாக்கள் சொல்லி விடுவதாக இறைவன் கூறிக் காட்டுகின்றான்.

அவர்கள் இறந்த பிறகு இந்த உலகத்தில் நடந்தது எதுவும் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்த மக்கள் செய்த இணைவைப்புக் காரியங்களை அல்லாஹ்விடம் மறுத்து விடுகின்றார்கள்.