31) ஆற்றங்கரையில் ஓர் அபார போர்
சங்கிலிப் போரில் தோற்றோடிய பாரசீகர்களை முஸ்லிம்கள் பெரும் பாலம் வரை துரத்தியடித்தனர். அந்தப் பாலம் இன்றைய பஸராவில் ஃபுராத் நதியில் அமைந்துள்ளது.
தளபதி காலித் பின் வலீத் அத்துடன் பாரசீகர்களை விட்டு விடவில்லை. அதற்கப்பாலும் முஸன்னா பின் ஹாரிஸா தலைமையில் ஒரு படையை அனுப்பி பாரசீகர்களைப் பின்தொடரச் செய்தார்.
காலிதின் அடுத்த இலக்கு மதாயின் நகரம்! அந்த மதாயினை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களைத் தப்ப விட்டு விடக் கூடாது என்பது காலிதின் நோக்கம்.
மதாயின் நகரத்தை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களை இன்னும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பது அவரது கணக்கு! அதற்காகத் தான் முஸன்னா பின் ஹாரிஸாவின் துரத்தல் பணி தொடர்ந்தது.
இந்தத் துரத்தல் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பாரசீக அரசியின் கோட்டையை முஸன்னா காண்கிறார். பாரசீகத்தின் கொம்பன் ஹுர்முஸ் களையெடுக்கப் பட்டு விட்டான்; இவளுக்கு என்ன இங்கு ஆதிக்கம்? “பெண் கோட்டை’ என்று பெயர் பெற்ற அந்தக் கோட்டையை முஸன்னா முற்றுகையிடாமல், தன்னுடைய சகோதரர் முஅன்னாவை அனுப்பி வைத்தார். அவளது கணவனின் கோட்டையை முஸன்னா முற்றுகையிட்டார்.
முஸன்னாவிடம் மோதிய அவளது கணவர் மரணத்தைத் தழுவுகின்றார். கணவனுக்கு நேர்ந்த கதி தான் தனக்கும் நேரும் என்று எண்ணிய பாரசீக அரசி, முஅன்னாவிடம் பணிகின்றாள். இஸ்லாத்தில் மட்டுமல்ல! முஅன்னாவின் இல்லற வாழ்விலும் இணைந்து விடுகின்றாள்.
அது போன்று சங்கிலிப் போருக்குப் பின்னால் பாரசீகத்தின் குட்டிக் குட்டி சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றும் படி காலித் தமது படைகளைப் பல முனைகளிலும் அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே இராக்கில் உள்ள விவசாயிகள் யாரையும் காலித் கைது செய்யவில்லை. ஆனால் பாரசீகப் போராளிகளையும் அவர்களுக்கு உதவி செய்த விவசாயிகளையும் போர்க் கைதிகளாகப் பிடித்தார். இராக்கிய விவசாயிகளை இஸ்லாமிய ஆட்சிக்குத் திறை செலுத்துமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர்கள் திறை செலுத்தலாயினர்.
காலிதின் படைகள் இவ்வாறு வெற்றிக் கனிகளைப் பறித்து முடிப்பதற்குள்ளாக அந்த மாவீரரை மற்றொரு போர்க்களம் அழைக்கிறது. அது தான் மதார் என்ற போர்க்களமாகும்.
பாரசீகர்களை முஸன்னா ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மதாயினை நோக்கி பாரசீகத்தின் பெரும் படை ஒன்று முஸ்லிம்களிடம் போர் புரிவதற்குப் புறப்பட்டு வருவதாகக் காலிதுக்குத் தகவல் கிடைக்கின்றது.
இராக்கை நோக்கிப் படையெடுத்து வருவதற்கு முன்னால் பாரசீக ஆளுநர் ஹுர்முஸுக்குக் காலித் கடிதம் எழுதியிருந்தார். அதில் இஸ்லாத்திற்கு வந்து விடு; அல்லது வரி செலுத்து என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்காமல் காலிதை எதிர்ப்பது என்று முடிவெடுத்த ஹுர்முஸ் தனக்கு உதவி செய்ய படை அனுப்பி வைக்குமாறு பாரசீகப் பேரரசர்களான ஷீரா பின் கிஸ்ரா, அர்தஷீர் பின் ஷீராவுக்குக் கடிதம் எழுதியிருந்தான்.
இந்தப் பேரரசர்கள் தங்கள் ஆளுநரின் கோரிக்கையை ஏற்று “காரின்’ என்பவனின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை ஹுர்முஸுக்கு உதவுவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் குபாத், அனூஷஜான் ஆகிய இருவரையும் சந்திக்கின்றது. அந்த இருவரும் ஹுர்முஸுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் நின்று போரிட்டவர்கள். காலிதின் வாள் வீச்சிற்கு அஞ்சி ஓட்டமெடுத்தவர்கள். அவர்களைத் தான் “காரின்’ எதிரில் கண்டான். தோல்வி முகம் கண்ட அவ்விருவரின் படையினரையும் ஒரு வகையாகப் பேசி இழுத்து, தன் படையினருடன் சேர்த்துக் கொண்டான்.
எந்த ஹுர்முஸுக்கு உதவி செய்ய வந்தார்களோ அந்த ஹுர்முஸ், தனக்கு உதவ வந்த படையைக் காணாமலேயே காலிதின் கைகளால் கொல்லப்பட்டு விட்டான் என்ற விபரம் அப்போது தான் காரினுக்குத் தெரிய வந்தது. ஹுர்முஸ் போனால் என்ன? காலிதை நாம் ஒரு கை பார்ப்போம் என்று எண்ணி குபாத், அனூஷஜான் ஆகியோருடன் காலிதை எதிர்த்துக் களம் காண காரின் முடிவெடுக்கின்றான்.
அதன்படி மதார் என்ற நகரில் திஜ்லா நதியின் கிளையான ஒரு வாய்க்கால் கரையில் தன்னுடைய படையை காரின் நிறுத்துகிறான். பாரசீகப் படையைப் பின் தொடர்ந்து வரும் முஸன்னா இப்படியொரு புதுப் படையைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைகிறார். தான் மட்டும் இந்தப் படையை எதிர் கொண்டால் அது தோல்வியில் போய் முடிந்து விடும் என்று உறுதியாக நம்பினார். அவரும் அந்தப் படை தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து தனது படையுடன் தங்கினார். இது பற்றி காலிதுக்கு விரிவாக ஒரு கடிதத்தை முஸன்னா எழுதினார்.
மதாயினை நோக்கி பாரசீகப் படை வருகின்றது என்று காலிதுக்கு வந்த தகவல் இது தான். முஸன்னாவின் கடிதம் தான் காலிதுக்கு விரிவான விளக்கத்தைக் கொடுத்தது.
முதலில் காரின், முஸன்னாவை எதிர்த்துப் போரிடப் போகிறான் என்ற செய்தி வந்ததும் காலித் பயந்தார். முஸன்னா மட்டும் போரை எதிர் கொண்டால் தோல்வியில் முடிந்து விடும் என்று அஞ்சினார். அதனால் கடிதம் வந்த மாத்திரத்தில் காலித், மதாருக்குப் புறப்பட்டு வந்து விட்டார்.
ஏதேனும் ஒரு வகையில் இஸ்லாமியப் படைக்கு ஒரு தோல்வியைக் கொடுத்தாக வேண்டும் என்பதில் பாரசீகப் படையினர் வெறியாக இருந்தனர். முஸன்னாவைத் தோற்கடித்து விட்டால், இஸ்லாமியப் படையை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என்று பாரசீக மக்களிடத்தில் சொல்லி, இதுவரை தங்களுக்கு ஏற்பட்ட இழிவுக்கு இதை ஈடாக்கலாம் அல்லவா?
இப்படி ஒரு வாய்ப்பு பாரசீகர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று முஸன்னா பயந்தார். அவரது பயத்தில் உண்மையில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் இந்தப் பயத்தையெல்லாம் களைகின்ற வகையில் காலித் வாய்க்கால் கரைக்கு வந்து விட்டார். இது பாரசீகப் படைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது; ஆட்டத்தைக் கொடுத்தது.
இருப்பினும் குபாதும், அனூஷஜானும் தங்களுக்கு ஹுபைர் என்ற இடத்தில் நடந்த போரில் ஏற்பட்ட இழிவை, காலிதிடமிருந்து சிந்துகின்ற இரத்தத்தில் கழுவ நினைத்தனர். காலிதின் படையைத் தோற்கடித்து பாரசீகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், இழந்த கவுரவத்தை மீட்கவும் உறுதி பூண்டனர்.
தனிப் படையாக நின்று தங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ? என்று கவலையில் ஆழ்ந்து போயிருந்த முஸன்னாவுக்குக் காலிதின் வரவு அல்லாஹ்வின் கருணையாகவும் அவனது தனிப் பெரும் அற்புதமாகவும் தெரிந்தது. இப்போது முஸன்னாவின் படையினர் ஆட்டத்திலிருந்து அமைதிக்கு, அலைக்கழிப்பிலிருந்து நிலைப்பாட்டிற்குத் திரும்பினர்.
இங்கு காலிதின் கூரிய வாள்களை விட, “மரணத்தை நேசிக்கும் ஒரு படையை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன்’ என்று காலித் கூறிய வீர வரிகள் உண்மையாயின. முஸ்லிம்களின் வீர வாட்கள் மின்னல் வேகத்தில் விளையாட ஆரம்பித்தன.
ஒற்றைக்கு ஒற்றை என்று காலிதை நோக்கிக் கூப்பாடு போட்ட காரினுக்கு, துணைத் தளபதிகளில் ஒருவரான மஃகில் பின் அல்அஃஷா என்பார் சரியான சாப்பாடு போட்டு சமாதியாக்கினார்.
குபாதை, அதீ பின் ஹாதம் தீர்த்துக் கட்டினார். அனூஷஜானின் கதையை ஆஸிம் முடித்தார். இப்படி முப்பதாயிரம் பேர் முஸ்லிம்களின் கைகளால் உயிரிழந்தனர். அதிகமான பேர் அருகிலுள்ள ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
இவ்வாறாக அல்லாஹ்வின் உதவி காலிதின் அணிக்கு அமைந்து பாரசீகத்திடமிருந்த மதார் முஸ்லிம்களின் கைகளில் வந்தது. போரின் வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி விட்டு எஞ்சியவற்றைப் போராளிகளுக்குப் பங்கிட்டு அளித்தார்.
திறை செலுத்துகிறோம் என்று ஒப்புக் கொண்ட விவசாயிகளைத் தவிர மற்றவர்களை இஸ்லாமியப் படையினர் சிறை பிடித்து, போர்க் கைதிகளாக்கினர்.
கிறித்தவ மதத்தைச் சார்ந்த அபுல் ஹஸன் அல்பஸரீ, உஸ்மான் (ரலி)யின் அடிமை மாஃபளா, முகீரா பின் ஷுஃபாவுடைய அடிமை அபூஸியாத் ஆகியோரும் இந்தக் கைதிகளில் அடங்குவர்.
இதன் பின்னர் படையின் பொறுப்பைக் கவனிப்பதற்கு ஸயீத் பின் நுஃமான் என்பாரையும், வரி வசூல் செய்வதற்கு ஸுவைத் பின் முக்ரின் என்பாரையும் காலித் நியமனம் செய்கின்றார். ஹுபைரின் பொருளைத் திரட்டுவதற்காக ஹுபைரிலேயே தங்குமாறு ஸுவைதுக்கு உத்தரவிடுகின்றார்.
வெற்றிப் பொருட்களை ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய பின் பாரசீகர்களின் அடுத்த நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் காலித் இறங்கினார். இப்போர் நடைபெற்றது ஹிஜ்ரி 12ம் ஆண்டாகும்.