30) ஜன் சேவா எனும் வட்டிக் கடை

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஜன் சேவா எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானது தானா? அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா? அதில் கடன் பெறுவது கூடுமா? எனப் பலர் நம்மைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர்.

இவர்கள் வட்டி இல்லா வங்கி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் நமக்கு அனுப்பித் தந்த வங்கியின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை நாம் ஆய்வு செய்தோம்.

அது போன்று இந்த வங்கியின் நிர்வாகிகளாக உள்ளவர்களின் விளக்கமும் நம்முடைய கவனத்திற்கு வந்தது.

அவர்கள் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து இஸ்லாமிய அடிப்படையில் மிகப்பெரும் பாவமான வட்டியை இவர்கள் வட்டி என்று சொல்லாமல் வேறு பெயர்களில் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

விபச்சாரத்தை திருமணம் என்று சொல்வதினாலோ, கள்ளை பால் என்று பெயர் சூட்டிக் குடிப்பதினாலோ அது ஹலாலாகி விடாது.

அது போன்று இந்த ஜன்சேவா சங்கத்தினர் கடனாகக் கொடுத்துவிட்டு வட்டியை இலாபம் என்ற பெயரில் பெறுகின்றனர்.

இவர்கள் வட்டியில்லா வங்கி என்ற பெயரில் தங்களை நம்பி வரும் இஸ்லாமியர்களை எவ்வாறு மிகப்பெரும் பாவத்தில் தள்ளுகின்றனர் என்பதையும், மோசடியாக மக்களின் பணத்தை எப்படிச் சுரண்டுகிறார்கள் என்பதையும் விரிவாகக் காண்போம்.

கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கும் ஜன் சேவா கடன் சங்கம்

கடனாகக் கொடுத்தால் கடன் தொகையை மட்டும் தான் திரும்பப் பெற வேண்டும். அதிகமான தொகையைப் பெற்றால் அது ஹராமான வட்டியாகும்.

ஆனால் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தினர் அவர்களுடைய வங்கியில் கடன் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கும் கடன் அளவிற்கு தங்க நகைகளையோ, அல்லது வாகனத்தையோ, அடைமானமாகப் பெற்றுக் கொண்டு தான் கடன் வழங்குகின்றனர்.

கடனாகக் கொடுத்து விட்டு, கொடுத்த கடனிற்கு முதலீடு எனப் பெயர் சூட்டிவிடுகின்றர். கடன் வாங்கியர் அசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் கிடைத்த இலாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தையும் இந்த வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

கடனாகக் கொடுத்து விட்டு அசலையும் கட்ட வேண்டும். லாபம் என்ற பெயரிலும் கட்ட வேண்டும் என்கின்றனர். அசலையும் பெற்றுக் கொண்டு லாபம் என்ற பெயரில் பெறக்கூடிய தொகை தெளிவான வட்டியாகும்.

ஜன்சேவா சங்கத்தினர் கடன் தொகையை விட அதிகப் பெறுமானமுள்ள அடைமானத்தைப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்துவிட்டு அதனை முதலீடு என்கின்றனர்.

கொடுத்த கடனிற்கு வட்டியாகப் பெறும் தொகையை இலாபம் என்கின்றனர்.

இவர்கள் கடன் தொகைக்கு முதலீடு என்று பெயரிட்டு இஸ்லாமிய மக்களை ஏமாற்றும் மிகப் பெரும் மோசடியைச் செய்கின்றனர்.

காயல்பட்டிணத்தில் இந்த ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள வாசகத்தை அப்படியே தருகின்றோம்.

முதலீடு கடன் வழங்கும் முறை

சிறு தொழில் / வியாபாரம் ஆகியற்றுக்கு மட்டுமே முதலீடு கடன்கள் வழங்கப்படுகிறது.

லாப நஷ்ட வியாபார முறையில் மட்டும்தான் கடன்கள் கொடுக்கப்படும்.

கடன் வாங்குபவரின் தகுதி முழு ஆய்வு செய்யப்பட்டு, லாப நஷ்ட பங்கீடு முறை, முதலீடு கடன் அடைக்கும் கால அவகாசம், இரு தரப்பினராலும் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வியாபாரம் அமுலாக்கப்படுகிறது.

முழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடைமானமாகப் பெற்ற பின்னரே கடன் வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் முதலீடு மற்றும் லாபத் தொகையை திரும்பச் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் பழு குறைக்கப்பட்டு எளிதில் முழுத் தொகையையும் பலர் அடைத்து விட்டனர்.

முழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.

மேற்கண்ட வாசகங்கள் காயல்பட்டிணத்தில் ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரத்தில் உள்ள வாசகங்களாகும்.

இவர்கள் வட்டியில்லா ஹலால் வங்கி என்ற பெயரில் எப்படி அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்றுகின்றனர் என்பதை அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தில் இருந்தே விளங்கிக் கொள்ளலாம்.

கடன் கொடுத்தவர் தன்னை முதலீட்டாளர் என்று சொல்லிக் கொள்ளலாமா?

ஒரே தொகை கடனாகவும், அதே நேரத்தில் முதலீடாகவும் எப்படி ஆகும்.?

கடன் என்று சொன்னால் கடனுக்கான இலக்கணப்படி இருக்க வேண்டும்.

முதலீடு என்றால் முதலீட்டுக்கான இலக்கணப்படி இருக்க வேண்டும்.

இவர்கள் மாதம் மாதம் வட்டியை லாபம் என்ற பெயரில் பெறும் போது அதற்கு முதலீடு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கடன் வாங்கியவர் தொழிலில் திவாலாகி விட்டால் சரிபாதியாக பொறுப்பு ஏற்காமல் அவரது அடைமானப் பொருளில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது மட்டும் கடன் என்று வாதிடுகிறார்கள்.

இதைப் பின்வரும் வாசகங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

முழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.

அதாவது அடைமானம் பெறுவதால் வங்கியின் பங்குதாரர்களுக்கு நட்டம் ஏற்படாது என்று குறிப்பிடுகின்றனர். நட்டம் ஏற்பட்டால் முதலீடு என்பதில் இருந்து நழுவி கடன் எனக் கூறி அடைமானப் பொருளை எடுத்துக் கொள்வோம் என்பதுதான் இதன் பொருள்.

யூதர்கள் இப்படித்தான் தமக்குச் சாதகமாக மார்க்கத்தை வளைத்தனர். லாபமான பாதியை ஏற்று மீதியை மறுத்தனர்.

பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 2:85)

வட்டி வாங்கும் போது மட்டும் முதலீடு எனப் பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

நட்டம் ஏற்படும் போது கடன் எனப் பெயர் சூட்டி கடன் வாங்கியவன் தலையில் கட்டி விடுகின்றனர்.

இது அப்படியே யூதர்கள் கடைப்பிடித்த வழிமுறையாகவே உள்ளது.

கடன் கொடுத்தால் அடைமானம் பெற்றுக் கொள்வது நியாயமானது. ஆனால் முதலீட்டிற்கு அடமானம் பெற்றுக் கொள்ளலாமா?

முதலீடு என்றால் கொடுத்தவரும், வாங்கியவரும் முதலீட்டாளர்கள் ஆகிறார்கள். அப்படியானால் ஒருவரிடம் மட்டும் மற்றவர் அடைமானம் பெறுவது என்ன நியாயம்?

ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தில் ஒருவர் 50 சதவிகிதம் தன்னுடைய பணத்தை முதலீடு செய்கிறார். மீதி 50 சதவிகிதம் ஜன்சேவா வங்கியில் கடனாகப் பெற்று முதலீடு செய்கிறார். இப்போது ஜன் சேவா வங்கி தன்னுடைய முதலீட்டுக் கடனிற்கு அவரிடமிருந்து அதற்கு நிகரான நகையையோ, வாகனத்தையோ அடமானமாகப் பெற்றுக் கொள்கிறது.

அது போன்று கடன் வாங்கியவர் தன்னுடைய முதலீட்டிற்கு ஜன் சேவா வங்கியிடமிருந்து அடைமானத்தைக் கேட்டால் கொடுப்பார்களா?

கடன் தொகைக்கு லாப நஷ்டம் என்பது உண்டா?

கடன் கொடுத்த தொகைக்கு இலாபம் பெறுவது தெளிவான வட்டியல்லவா?

கடன் பெற்றவர் திவாலாகி விட்டால் அவருடைய அடைமானத்திலிருந்து தன்னுடைய முழுத் தொகையையும் ஜன் சேவா வங்கி எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும் போது அதனை முதலீடு என்று எப்படிச் சொல்ல முடியும்?

திவாலாகும் போது கடன் வாங்கியவர் மட்டும் அதற்கு பொறுப்பு; கடன் கொடுத்த ஜன்சேவா வங்கி பொறுப்பு அல்ல. அவர்களுக்கு நட்டத்தில் பங்கு இல்லை என்பது பச்சை வட்டியாகும்.

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து எழுகின்றன.

ஜன்சேவா என்பது வட்டியில்லா ஹலால் வங்கி என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அது மிகப் பயங்கரமான வட்டிக் கம்பெனி என்பதே குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மையாகும்.

ஒருவருக்கு நாம் கடன் கொடுத்தால் அந்தப் பணத்தை அவருக்கு முழு உரிமையாக்க வேண்டும். கடன் கொடுத்தவருக்கு அதில் உரிமை இருக்கக் கூடாது. உரிமை கொண்டாடினால் கடன் கொடுக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.

கடனாகக் கொடுத்த காசை விட அதிகப் படியான பணத்தை கடன் பெற்றவரிடமிருந்து எதிர்பார்த்தால் அது இஸ்லாம் தடுத்த ஹராமான வட்டிக் காசாகும்.

صحيح مسلم

4173 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِى عُمَرَ – وَاللَّفْظُ لِعَمْرٍو – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى يَزِيدَ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ أَخْبَرَنِى أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّمَا الرِّبَا فِى النَّسِيئَةِ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வட்டி என்பதே கடனில்தான்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

(முஸ்லிம்: 4173)

கடனாகக் கொடுத்துவிட்டு கடனைத் திருப்பிக் கேட்கும் போது கொடுத்ததை விட அதிகப்படியாகக் கேட்டுப் பெற்றால் அது மிகத் தெளிவான வட்டியாகும்.

இந்த வங்கியில் கடனாகப் பெற்று இலாபம் என்ற பெயரில் வாங்கிய கடனிற்கு அதிகப்படியான தொகையைச் செலுத்துபவர்கள் வட்டித் தொகையையே செலுத்துகின்றனர்.

எனவே இது போன்ற பாவமான காரியங்களிலிருந்து இறையச்சமுடையவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

(அல்குர்ஆன்: 2:278-279)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:275)

صحيح مسلم
4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 4177)