3) பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள்

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

3) பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள்

பித்அத்கள் இந்த சமுதாயத்தில் தோன்றும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டுதான் சென்றார்கள். அதுப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் நபிகள் நாயகத்திற்கு முந்தைய நிலையைப் பற்றி அறிந்துக் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால் பல நபிமார்கள் இந்த உலகில் இறைத்தூதர்களாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள்.

ஒவ்வொருவரும் மரணித்த பிறகு அடுத்த ஒவ்வொரு சமுதயாத்திற்கும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் என்று அடுத்தடுத்து தூதர்கள் கால இடைவெளிவிட்டு வந்துக் கொண்டேயிருந்தனர்.

ஒவ்வொரு இறைத்தூதருக்கும் இடைப்பட்ட காலத்தில் அதற்கு முன்பு இருந்த நபியின் வழிமுறை அவருக்கு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு பல புதுமைகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். அடுத்த தூதர் வந்ததும் அதிலிருந்து மக்களை வென்றெடுப்பார்.

அவர் சென்றதும் மக்கள் மீண்டும் அந்த வழிமுறையை மாற்றிவிடுவார்கள். புதுமைகளை புகுத்திவிடுவார்கள். அதன்பின் ஒரு இறைத்தூதர் வந்து மக்களிடமிருந்து அவைகளை களைந்து அவர்களை வழிநடத்துவார். இவ்வாறு தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்தது. இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு:

இப்ராஹிம் நபி

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த மக்கத்து மக்கள் தங்களை இப்ராஹிம் நபியின் வழிதோன்றல்கள் என்றே கூறினர். அவர்களின் வழியில் வந்தவர்கள் ஏக இறைவனை வணங்குவதற்காக அவர்களால் கட்டப்பட்ட கஅபா ஆலயத்தில் 300க்கும் மேற்ப்பட்ட சிலைகளை வடிவமித்து வழிபட்டார்கள்.

இப்படி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் நபிமார்களின் வழிமுறைகளை அவர்களுக்கு பின்னால் மக்களால் மாற்றப்பட்டு பித்அத்கள் அரங்கேற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட்ட காரணத்தினால் தான் அடுத்து ஒரு தூதர் வந்து அவற்றை சரிசெய்ய வேண்டியிருந்தது.

இதுபோலவே நபி(ஸல்) அவர்கள் தனது காலத்திற்கு பிறகும் இந்த மார்கத்தின் பெயரால் பல பித்அத்கள் தோன்றும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.

அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்:

‘அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போன்று நமக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று அவர்கள் கேட்டனர். (அதற்கு மூஸா நபி) நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்’

அறிவிப்பவர். அபுவாகித் அல்லைஸி (ரலி)

நூல்.(திர்மிதீ: 2180)

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 2697)

“நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 3541)

(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்தான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)

(அஹ்மத்: 17184)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

அத்தகைய நிலையில் மறுமை வெற்றியை எதிர்ப்பார்ப்பவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்றும் மறுமையில் அழியக்கூடியவன் என்ன செய்வான் என்றும் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர் :  இர்பாள் பின் ஸாரியா(ரலி)

(அஹ்மத்: 16519)

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஒவ்வொரு நபிமார்களுக்கு பின்னாலும் மக்கள் மார்க்கத்தில் இல்லாததை புகுத்தி, மாற்றி பித்அத்களை அரங்கேற்றினால் அடுத்து ஒரு நபி வந்து தான் சரி செய்ய வேண்டும்.

ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு எந்தவொரு நபியும் இல்லை என்றாலும் அவர்களுக்கு பின்னால் மக்களால் மார்க்கத்தின் பெயரால் நுழைக்கப்பட்ட காரியங்களை நம்மால் அடையாளம் கண்டு தவிர்ந்துக் கொள்ள முடியும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பித்அத் என்ற அழிவு பாதையில் எப்போது ஒருவன் வீழ்ந்து மறுமையை நாசாமாக்கிக் கொள்வான் என்று மேற்படி செய்தியில் குறிப்பிட்டுவிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வெண்மையான பாதையிலிருந்து ஒருவன் விலகும் போதே பாதை மாறி பித்அத்களில் ஒருவன் வீழ்கிறான். எனவே பித்அத்களிலிருந்து நாம் விலகி நிற்க நபிகளார் விட்டுச் சென்ற வெண்மையான பாதையிலேயே நிற்க வேண்டும்.

அது தான் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்த மார்க்கத்தை எப்படி விட்டுச் சென்றார்களோ அந்த பாதையாகும். அது தான் இறைவனும் பொருந்திக் கொண்ட முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாகும்.

எனவே, மேற்படி முன்னறிவிப்புகளை நினைவில் கொண்டு பித்அத்கள் தோன்றத்தான் செய்யும். தோன்றும் போது நாம் நமது மார்க்கத்தை காத்துக் கொள்ள இந்த சமுதாயத்தில் பித்அத்களை களைந்து மக்களை நல்வழிப்படுத்த குர்ஆன் ஹதீஸ் என்ற ஒரு வழியிலேயே நாம் நிற்க வேண்டும்.

மார்க்கம் படித்த ஆலிம்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒன்றை நன்மை என்றோ வணக்கம் என்றோ பின்பற்றிவிட கூடாது. அவர் சொல்வது குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  ஏனெனில் அது தான் மார்க்கத்தின் அடிப்படை. அவ்வாறு ஆதாரம் இருப்பது மட்டுமே மார்க்கமாக ஆகும்.

ஆதாரம் என்று அவர்கள் கூறுகின்ற அனைத்தும் ஆதாரமாகவும் ஆகிவிடாது. சிலர் தவறான, மார்க்கத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களை கூட இவர் செய்திருக்கிறார் அவர் செய்திருக்கிறார் என்று ஆதாரமாக காட்டுவார்கள்.

இப்படி தவறாக சிலர் மக்களாகிய நம்மை வழிநடத்தும் போது அவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்கள் சொல்வது மார்க்கத்தில் உள்ள காரியமா? அல்லது பித்அத்தா? என்று எவ்வாறு கண்டறிவது? அதுப் பற்றி இஸ்லாம் நமக்கு என்ன வழிகாட்டுகிறது? வாருங்கள் பார்ப்போம்!

பித்அத்தை கண்டறிய எளிய வழி!

வஹி எனும் இறைச் செய்தி மட்டுமே மார்க்கமாக பின்பற்றத் தகுதியானது. அந்த வஹிச் செய்தி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்ற இரண்டு விதத்தில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் இல்லாத எதுவும் மார்க்கம் என்ற பெயரில் செய்யப்படும் எனில் அதுவே பித்அத் ஆகும் என்ற அடிப்படையை மேலே விளங்கிக் கொண்டோம்.

பித்அத்களை முக்கியமான மூன்று முறைகளில் அரங்கேற்றுகிறார்கள். அதை தெரிந்துக் கொண்டு அதை கண்டறியும் வழிகளை அறிந்துக் கொள்ளலாம்.

  1. குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இஸ்லாத்தின அடிப்படை ஆதாரங்களில் அறவே இல்லாத காரியங்கள்.
  2. குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட காரியத்தை அதன் காரணம், நேரம், அளவு, விதம் என்று அதன் முறைகளை மாற்றி செய்தல்.
  3. குர்ஆன் ஹதீஸில் பொதுவாக சொல்லப்பட்ட காரியத்திற்கு காலமும் அளவும் நிர்ணயம் செய்தல்

இந்த மூன்று அடிப்படைகளில் தான் பெரும்பாலும் பித்அத்கள் அரங்கேற்றப்படுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக கண்டறிவதற்கான வழியை பார்ப்போம்.

முதல் வழி – அடிப்படை ஆதாரமற்றவை

மார்க்கத்தைப் பற்றி இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்: 5:3)

இறைவன் இந்த வசனத்தில் இரண்டு அடிப்படைகளை நமக்கு சொல்லித் தருகிறான்.

  1. “இன்றுடன் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டேன்“ – “இன்று“ என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை குறிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. யாரும் இன்றைய தினம் என்றால் எது என்றோ? இன்று என்றால் நாம் படித்துக் கொண்டிருக்கும் இன்று என்றோ வாதிட மாட்டார்கள்.
  2. “இஸ்லாத்தை உங்களுக்கான மார்க்கமாக பொருந்திக் கொண்டேன்“ – மார்க்கத்தை முழுமைப்படுத்தி அந்த இஸ்லாம் எனும் மார்க்கத்தை இறைவன் பொருந்திக் கொண்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் எதை பொருந்திக் கொண்டானோ அதை பின்பற்றும் போது தான் நமக்கு நன்மை கிடைக்கும். அதன் மூலம் இறை விசுவாசிகள் விரும்பும் சுவனத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவற்றை நமக்கு தருபவன் அல்லாஹ் தான். எனவே அவன் விரும்புவதை செய்யும் போது தான் அந்த கூலிகள் நமக்கு கிடைக்கபெறும். அவனால் வழங்கப்படும்.

இறைவன் பொருந்திக் கொண்ட அத்தகைய இஸ்லாம் எனும் மார்க்கத்தை நபி(ஸல்) அவர்கள் காலத்துடன் அவன் முழுமைப்படுத்தியும் விட்டான் என்றால் நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எது இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை இஸ்லாம்.

எது நன்மை என்றும் வணக்கம் என்றும் அவர்கள் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை நன்மை, வணக்கம். எது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லையோ அது யார் செய்தாலும், எத்தனை பேர் செய்தாலும் அது ஒரு போதும் மார்க்கமாகவும் நன்மையாகவும் வணக்கமாகவும் ஆகாது. அது நரகில் தள்ளும் பித்அத்தாகவே ஆகும்.

எனவே, நாம் மார்க்கம் என்றோ அல்லது நன்மை, இபாதத் என்றோ எந்த காரியத்தை செய்து வந்தாலும் அதை நமது முன்னோர்கள், ஆலிம்கள் என்று யார் சொல்லிக் கொடுத்தாலும் நாம் நம்மிடமோ அல்லது அவர்களிடமோ கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று தான்.

இதற்கு குர்ஆனிலிருந்தோ அல்லது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கிகாரத்திலிருந்தோ பலமான ஒரு ஆதாரம் வேண்டும். ஆதாரம் இருந்தால் அது மார்க்கம். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத். இப்படி சில கேள்விகளை கேட்டுப் பார்ப்போம் வாருங்கள்!

இன்றைக்கு நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள். நபி(ஸல்) அவர்களோ அல்லது அவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்களோ இவ்வாறு செய்து நபி(ஸல்) அதை அங்கீகரித்து பிறந்த நான் கொண்டாடியுள்ளார்களா?

இல்லை. அப்படியென்றால் இது பித்அத்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தஸ்பீஹ் தொழுகை, இஷ்ராக் தொழுகை எனும் பெயரில் ஏதேனும் தொழுததற்கு பலமான ஆதாரம் இருக்கிறதா?

இல்லை. அதனால் அது பித்அத்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாகவே இருந்தது. இன்றைக்கு திருமணம் செய்யும் சிலர் மாற்று மதத்தில் தாலி இருப்பதை போல கருகமணி அணிகிறார்கள். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்தின் ஒரு அம்சமாக சொல்லப்பட்டதா?

இல்லை. எனவே இது பித்அத்.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் நமக்கு நாமே அல்லது இதை நமக்கு சொல்லித் தரும் மார்க்கம் படித்த ஆலிம்களிடமோ ஆதாரம் கேட்க வேண்டும்.

இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கத்தில் அது முழுமைப்படுத்தப்பட்ட போது இருந்தால் எது இருந்த்தோ அது மார்க்கம். அதற்கு பின் நபிகளார் மரணித்த நொடியில் அவர்கள் வாழும் போது இல்லாத ஒன்று தோன்றியிருந்தாலும் அது பித்அத்தே ஆகும்.

இதுவே அடிப்படையற்ற பித்அத்தை நாம் கண்டறிவதற்கான முதல் வழி! இதற்கு படித்து பட்டம் பெற தேவையில்லை. இத்தகைய கேள்வி ஞானம் இருந்தாலே போதுமானது.