29) முக்கிய அறிவுரைகள் – இறுதி எச்சரிக்கைகள்
மரணத்தின் விளிம்பில் நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் சமுதாய நலன் பற்றியும் தாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியுமே சிந்தித்தார்கள் அப்போதும் தூதுப் பணிக்கு நபிகள் நாயகம் ஓய்வு கொடுக்கவில்லை
போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்று நபித்துவத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் சொன்ன கட்டளையை ஏற்று பிரச்சாரப் பணியில் எழுந்து நிற்க ஆரம்பித்தவர்கள் தம் மரணம் வரையிலும் ஓய்வு பெறவில்லை. அந்நேரத்தில் மக்களுக்கு பல அரிய, முக்கியமான போதனைகளை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அவைகளை ஒவ்வொன்றாக காண்போம்.
அபூபக்கர் அவர்கள் தமக்கு செய்த பேருபகாரத்தை எண்ணி, மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அந்நேரம் அவர்களின் சிறப்பையும் விளக்கினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக (தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள் பிறகு, ‘தன் நட்பிலும், தனது செல்வத்திலும் எனக்கு அபூபக்ரைவிட வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. (இறைவனைத் தவிர) மக்களில் ஒருவரை நான் (எ) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன். என்றாலும் தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதைவிட) இஸ்லாமிய அடிப்படை யிலான நேசமே சிறந்ததாகும்’ என்று கூறி விட்டு, ‘இந்தப் பள்ளிவாசலில் என்னிடம் வருவதற்காக உள்ள எல்லா நுழைவாயில் (சுவர்ப்புழை) களையும் அடைத்துவிடுங்கள். அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர’ என்று கூறினார்கள். (புகாரி: 467) ➚
கப்ர் வழிபாடு செய்யக் கூடாதென எச்சரிக்கை செய்தார்கள். யூதர்கள், கிறித்தவர்கள் கப்ர் வழிபாடு செய்ததாலே நாசமானார்கள் என்று போதித்தார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறபடுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். (புகாரி: 1330) ➚
தீமை செய்பவர்களை மன்னித்து விடும்படி அறிவுரை கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்கள் ஒரு போர்வையுடன் வெளியே வந்தார்கள். அப்போது தமது தலையில் கருப்புக் கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள் மிம்பரின் (மேடை) மீதமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது குணங்களை எடுத் துரைத்துப் பிறகு, ‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன் (இஸ்லாத்தில் இணையும்) மக்கள். (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள் (ஆனால், இறைமார்க்கத் திற்கு உதவிபுரிபவர்கள் (அன்சார்) குறைந்து போய் விடுவார்கள்.
எந்த அளவிற்கென்றால் உணவில் உப்பிருக்கும் அளவில் தான் (உதவி செய்பவர்கள்) மக்களிடையே இருப்பார்கள் உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவர்களுக்கு நன்மையும் விளைவிக்கக் கூடிய ஓர் அதிகாரம் எதையும் பெற்றால் நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்றுக் கொண்டு தீமை செய்பவரை மன்னித்து விடட்டும்” என்று சொன்னார்கள். அது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்த கடைசி அவையாக இருந்தது. இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறர்கள். (புகாரி: 3628) ➚
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
நான் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத் மரண சாசனம் செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித் தார்கள். நான், “அப்படியென்றால் மக்கள் மீது வஸிய்யத் மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டு மென்று மக்களுக்கு எப்படிக் கட்டளை யிடப்பட்டது?.என்று கேட்டேன் அதற்கு அவர். “அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள் என்று பதிலளித்தார்கள் (புகாரி: 2740) ➚
ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள். “நபி (ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டுச் சென்றார்கள் (என்று கேள்விப்படு கிறோமே!” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான்தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் (எச்சில் துப்ப) பாத்திரம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?” என்று கேட்டார்கள். (புகாரி: 2741) ➚
அல்லாஹ்வின் தூதருக்கு அவர்களுடைய (நோயின்) வேதனை கடுமையாகிய போது அவர்கள் என்னிடம் புஜ எலும்பு ஒன்றைக் கொண்டு வாருங்கள் உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள். மக்கள் சச்சரவு செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள், இறைத்தூதரின் முன்பாக சச்சரவிட்டுக் கொள்வது அழகல்ல” என்று கூறிவிட்டு இணைவைப்பவர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள். நான் வெளிநாட்டிலிருந்து வரும் தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கி வாருங்கள் என்று உபதேசம் செய்தார்கள். (புகாரி: 3168) ➚
தாம் இறந்த பிறகு தம் சொத்துக்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கான தர்மமே. அதிலிருந்து என் குடும்பத்தார் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அறிவித்தார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும் போசு நான் விட்டுச் செல்பவையெல்லாம் தருமமே யாகும் (புகாரி: 3096) ➚
நபியவர்களின் நோய் சற்று அதிகமாகி மரண வேளையை முற்றிலும் நெருங்கினார்கள். அதன் காரணத்தால் நபியவர்களுக்கு தொண்டை கட்டியது. குரல் தழுதழுக்க ஆரம்பித்து விட்டது. அந்த நிலையிலும் மறுமை சிந்தனையை கருத்தில் கொண்டு. மறுமையில் நல்லோர்களுடன் இருப்பதை விரும்பியவர்களாக (அல்குர்ஆன்: 4:69)➚ வசனத்தை ஓதினார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்
உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத் துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் ளநபி (ஸல்) அவர்களிடமிருந்தே செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள். எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய கரகரப்பான குரலில்), அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள். உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (4:69➚) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டி லொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்று நான் எண்ணிக்கொண்டேன். (புகாரி: 4435) ➚
நபிகள் நாயகம் அவர்களுக்கு இயலாமையினால் ஆயிஷா அவர்கள் ஓதி ஊதினார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களைக் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன். (புகாரி: 4439) ➚