மரணமும் மறுமையும் -29

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

சொர்க்கம்-1

சொர்க்கத்தின் பெயர்கள்

சொர்க்கம் என்பது ஒரே படித்தரம் உடையதன்று. மாறாக, சொர்க்கத்தில் பல படித்தரங்கள் உள்ளன. அது போல, சொர்க்கத்திற்கு பல பெயர்களும் உள்ளது.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

(அல்குர்ஆன்: 18:107)

பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 23:1-11)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது.

நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள்.

(புகாரி: 7423)

  1. அல்ஜன்னத்-

(அல்குர்ஆன்: 2:82)

  1. ஜன்னதுல் குல்த்-

(அல்குர்ஆன்: 25:15)

  1. ஜன்னதுல் மஃவா-

(அல்குர்ஆன்: 53:15)

  1. ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ்-

(அல்குர்ஆன்: 18:107, 23:11)

  1. ஜன்னது அத்ன்-

(அல்குர்ஆன்: 38:50)

  1. ஜன்னதுன் நஈம்

(அல்குர்ஆன்: 5:65)

  1. தாருஸ் ஸலாம்-

(அல்குர்ஆன்: 6:127, 10:25)

  1. தாருல் முகாமா-

(அல்குர்ஆன்: 35:35)

  1. தாருல் முத்தகீன்-

(அல்குர்ஆன்: 16:30)

  1. அல்ஹுஸ்னா-

(அல்குர்ஆன்: 4:95, 10:26)

இன்னும் சில பெயர்கள் உள்ளன.

சொர்க்கத்தின் வாசல்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.

அறி: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

(புகாரி: 3257)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார்.

(தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!’ என்றார்கள்.

அறி: அபூஹுரைரா(ரலி)
(புகாரி: 1897)

சொர்க்கத்தின் மாளிகைகள்

تَبَارَكَ الَّذِي إِنْ شَاءَ جَعَلَ لَكَ خَيْرًا مِنْ ذَٰلِكَ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَيَجْعَلْ لَكَ قُصُورًا

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் எற்படுத்துவான்.

(அல்குர்ஆன்: 25:10)

நபியை பார்த்து இறைவன் கூறும் வசனம் இது. எனினும், இது நபிக்கு மட்டுமா என்றால், இல்லை. இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன். சுவனத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் ஒரு கூடாரத்தின் நிலையைக் குறித்து பெருமானார் கூறுவதைப் பாருங்கள்.

சிறப்பு அறைகள்

إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الأُفُقِ مِنَ الْمَشْرِقِ ، أَوِ الْمَغْرِبِ لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ قَالُوا : يَا رَسُولَ اللهِ تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ.

“சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்” என பதிலளித்தார்கள்.

அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
(புகாரி: 3256)

முத்து மாளிகை

நாம் ஒரு வீட்டை செங்கல், மணல், சிமெண்ட், ஜல்லி போன்றவைகளை வைத்தே கட்டுகிறோம். யாரேனும் மிக அரிதாக முழுவதும் டைல்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன், ஆசையுடன் பாக்கின்றோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.

إِنَّ لِلْمُؤْمِنِ فِي الْجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ، طُولُهَا سِتُّونَ مِيلًا، لِلْمُؤْمِنِ فِيهَا أَهْلُونَ، يَطُوفُ عَلَيْهِمِ الْمُؤْمِنُ فَلَا يَرَى بَعْضُهُمْ بَعْضًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.

அறி: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
(முஸ்லிம்: 5458)

இவ்வளவு பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட கூடாரங்கள், மாளிகைகள் சுவனத்தில் வழங்கப்படுகிறது என்றால் நம்மால் அவற்றைப் பற்றிக் கற்பனையால் கூட வர்ணிக்க முடியாது என்பதை நம்மால் உணர முடிகிறது. இதுவெல்லாம் போக, இன்னொரு அற்புதமான மாளிகையைக் குறித்தும் நபிமொழிகள் பேசுகின்றன.

إِنَّ فِي الْجَنَّةِ غُرَفًا يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا

நபி (ஸல்) கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மாளிகை இருக்கும். அதில் உட்பகுதியில் இருந்து வெளிப்பகுதியையும் வெளிப்பகுதியிலிருந்து உட்பகுதியையும் பார்க்க முடியும்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 509), பாகம்: 2, பக்:262, ஹாக்கிம் 270, தப்ரானீ கபீர், பாகம்:3, பக்:301

சொர்க்கத்தின் ஆறுகள், நதிகள்

ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில் குளிப்பது ஒரு வித சந்தோஷத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.

இறைவன் தரும் மாளிகையில் இவற்றிருக்கும் பஞ்சமில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் என இறைவன் கூறுகிறான்.

لٰـكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕوَعْدَ اللّٰهِ‌ ؕ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ‏

மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:20)

சொர்க்கவாசிகளின் தோற்றம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரிலிருந்து எழுபதாயிரம் பேர்… அல்லது எழு நூறாயிரம் பேர்.. (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) புகாத வரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) புக மாட்டார். அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)

(புகாரி: 3247)

أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ نَجْمٍ فِي السَّمَاءِ إِضَاءَةً ثُمَّ هُمْ بَعْدَ ذَلِكَ مَنَازِلُ لاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَبُولُونَ وَلاَ يَمْتَخِطُونَ وَلاَ يَبْزُقُونَ أَمْشَاطُهُمُ الذَّهَبُ وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ وَرَشْحُهُمُ الْمِسْكُ أَخْلاَقُهُمْ عَلَى خُلُقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى طُولِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا ‏” قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَلَى خُلُقِ رَجُلٍ ‌‏ وَقَالَ أَبُو كُرَيْبٍ عَلَى خَلْقِ رَجُلٍ ‌‏ وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَلَى صُورَةِ أَبِيهِمْ ‌‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல படித்தரங்களும் உண்டு.

(சொர்க்கத்தில்) அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சளி துப்பவுமாட்டார்கள். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகில் குச்சியால் எரிக்கப்படும். அவர்களுடைய வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.

அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் போன்று அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 5451)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும்.

உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும் தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5448)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழைகிற முதல் அணியினர் பெளர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுக்கிடையே எந்த மன மனவேறுபாடும் இருக்காது; எந்த விதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள்.

(அவர்களில் ஒவ்வொருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளுடைய பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும்.)

அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களின் வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3246)

இவ்வுலகில் சுபச்செய்தி பெற்றோர்

10 முக்கிய நபித்தோழர்கள்:

அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

(அஹ்மத்: 1675)

பெண்களில் சொர்க்கவாசிகள்:

2668 – حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ عِلْبَاءَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: خَطَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَرْضِ أَرْبَعَةَ خُطُوطٍ، قَالَ: ” تَدْرُونَ مَا هَذَا؟ ” فَقَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَفْضَلُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ: خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ، وَآسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ

(அஹ்மத்: 2668)(தரம் பார்க்க வேண்டும்)

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வோர்

நபியின் பரிந்துரையின் மூலம் சிலர்:

ஏற்கனவே நாம், நபியின் பரிந்துரையின் மூலம் சிலர் எந்த விசாரணையும் இல்லாமல் சொர்க்கம் செல்வார்கள் என்று கூறியுள்ளோம்.

…அப்போது நான் என் தலையை உயர்த்தி ‘இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு ‘முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும்.

அறி: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 4712)

எழுபதாயிரம் பேர்:

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர்.

ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, ‘அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது.

அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள்.

இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 5705)