29) பாதையில் பிறர்நலம் நாடுதல்
மக்கள் வந்துச் செல்லும் பாதையில் இருக்கும் போதும் சமூக சிந்தனையோடு செயல் பட வேண்டும். பாதையில் வருவோர் விசயத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஒருபோதும் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் காரியங்களை செய்யக் கூடாது.
நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம். நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து அமரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும். நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: (புகாரி: 2465)
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘முஸ்லிம்கள் நட மாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா (ரலி), நூல்: (முஸ்லிம்: 5109)
பாதத்தில் தைக்கும் சிறிய முள்ளை அப்புறப்படுத்தச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கம், வெடிகுண்டு வைத்து அடுத்த ஆளைக் கொல்லச் சொல்லுமா? அத்தகைய ஆட்களை ஆதரிக்குமா? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தெளிவான உண்மை. இஸ்லாத்தைப் பற்றி முறையாக படிப்போர் எவரும் இதை எளிதில் அறியலாம்.