29) திருட்டு
29) திருட்டு
திருடப்படுகின்ற பொருள் திருடியவனுக்கு நெருப்பாக மாறும் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும் சம்பவத்தில் உணர்த்தி யுள்ளார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ, வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லாத கால் நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருள்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள்ளுபைப்’ எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘மித்அத்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது ‘மித்அம்’ என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்று விட்டது. இதைக் கண்ட மக்கள் “அவருக்குச் சொர்க்கம் கிடைத்து விட்டது; வாழ்த்துக்கள்” என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படிச் சொல்லாதீர்கள்.
என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக் கொண்டு விட்ட போர்வை அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்ற போது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரு வார்களைக்’ கொண்டு வந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் “(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண நெருப்பு வாராக இருந்திராது. மாறாக) ‘நெருப்பு வாராக’ அல்லது ‘இரு நெருப்பு வார்களாக’ மாறியிருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)