28) நபிகளாரின் மரணம்

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாய கட்டமைப்பு, மார்க்க போதனைகளை எடுத்தரைத்தல் ஆகியவற்றை செம்மையாக நிறைவேற்றியிருந்தார்கள். அதன் பிறகு தனது மரண காலத்தை நபிகள் நாயகம் நெருங்கினார்கள்.
ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு நபிகளாரின் மரணமே அது பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன,

தனது இறுதி ஹஜ்ஜின் போது கூட அடுத்த வருடம் இங்கே உங்களை சந்திப்பேனா என்று எனக்கு தெரியாது என்று கூறியது
ஜிப்ரீல் அலை அவர்கள் எப்போதும் ஆண்டிற்கு ஒரு முறை அருளப்பட்ட வசனங்களை நபிகள் நாயகத்திற்கு எடுத்துக் காட்டுவார்கள் ஆனால் அந்த வருடம் இரண்டு முறை எடுத்துக் காட்டியது. (அஹ்மத்: 8823)
இறப்பதற்கு முன்பு வஹீ அருளப்படுதல் அதிகமாகியது (புகாரி: 4982) போன்ற அடையாளங்கள் நபியவர்களின் மரணத்தை உணர்த்துவதாகவே இருந்தன.

நோய்வாய்ப்படுதல்

ஹிஜ்ரி 11ல் நபி (ஸல்) அவர்கள் உடல் நலம் மோசமானது. நோயினால் நடக்க முடியாத அளவுக்கு அவதியுற்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். (புகாரி: 198)

இவ்வாறு அயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
ஆயிஷா (ரலி) வீட்டில் தங்க அனுமதி கோருதல்
தம் நோயின் போது ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்க ஆசைப்பட்டு தம் மனைவியர்களிடம் சூசகமாக கேட்டார்கள். இந்த தகவலை ஆயிஷா (ரலி) அவர்களே தெரிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, “நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்? என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந் தார்கள் ஆகவே அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும் வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். (புகாரி: 4450)

பாத்திமா (ரலி) அவர்களின் கவலையும் மகிழ்ச்சியும்

ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து. எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன் பிறகு அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான் என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3626)

பாத்திமா (ரலி) அவர்களின் மகிழ்ச்சி குறித்து மாறுபட்ட அறிவிப்புகள் உள்ளன. சொர்க்க வாசிப் பெண்களின் தலைவியாக ஃபாத்திமா (ரலி) இருப்பார்கள் என்று சொன்னதால் மகிழ்ச்சி அடைந்ததாக வேறு அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. (புகாரி: 3624)

தண்ணீரை ஊற்றும்படி கோரிக்கை

நோயின் கடுமையால் தன் மீது தண்ணீர் ஊற்றும்படி கோரினார்கள். அந்த நிலையிலும் மக்களுக்கு அறிவுரை கூற விரும்பினார்கள் என்பதை பின்வரும் செய்தியின் வாயிலாக அறிகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் (நோய் கால பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து அவர்களின் நோய் கடுமையாகிவிட்ட பின்னர் அவர்கள், ‘வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல்பைகளிலிருந்து நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்ய முடியும்” என்றார்கள். எனவே அவர்கள் அவர்களின் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமர்த்தப்பட்டார்கள் பிறகு அவர்கள் மீது தோல்பைகளிலிருந்த நீரை ஊற்றத் தொடங்கினோம் அவர்கள் (சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்) என்று (கையால்) சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். (புகாரி: 198)

நோயின் போதும் ஜமாஅத் தொழுகை

நபிகள் நாயகம் அவர்கள் தமக்கு ஏற்பட்ட நோய் சற்று குறைந்ததாக உணர்ந்த போது சிரமம் மேற்கொண்டு பள்ளிக்கு வந்து ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் தகவலிலிருந்து இதை அறிகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்திமக் காலத்தில்) நோயுற்றிருந்த போது மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள் அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுவித்துக்கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந்திருக்கக் கண்டபோது (இரண்டு மனிதர்களை கைத்தாங்கலாக்கி புறப்பட்டு வந்தார்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக்கொண்டிருந்தார்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின் வாங்க முயன்றார்கள். ‘அப்படியே இருங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருந்தார்கள். (புகாரி: 683)

மருந்தூட்டப்படுதல்

நோயின் நேரத்தில் நபியவர்களுக்கு மருந்தூட்டப்பட்டது. அதில் கூட நபிகள் நாயகத்தின் நகைச்சுவை உணர்வு வெளிப்படுவதை காணலாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்றவேண்டாம் என்று தடை செய்யவில்லை என்று நாங்கள் கூறிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெரிந்தபோது “என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் மருந்து உட்கொள்ளப் பிடிக்காமல் தான் (அவ்வாறு சைகை செய்தீர்கள்” என்று சொன்னோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் “(நான் தடுத்தும் கேட்காததற்கு பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக் கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும் என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர் களைத் தவிர! ஏனெனில் மருந்தூற்றும் போது) அவர் உங்களுடன் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள். (புகாரி: 6897)