28) சுற்றுச்சூழலில் நலம் நாடுதல்
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்று முதலே மனித குலத்திற்குப் போதிக்கின்றது.
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்: அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 3159)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடை பாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 448)
மக்கள் நடமாடும் பாதைகளில், அவர்கள் ஒதுங்குகின்ற நிழல் பகுதிகளில் மலஜலம் கழிப்பதும் சுகாதார கேட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது ஆகவே, இது பற்றி இஸ்லாம் எந்த அளவுக்குச் சுற்றுச்சூழலைக் காக்கச் சொல்கின்றது; சுகம் காணச் செய்கின்றது என்று பாருங்கள்.