28) அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்
இறைநேசர்கள் குறிப்பாக நபிமார்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சுயமாகவே அற்புதம் செய்யக்கூடிய ஆற்றல், சக்தி இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் இதுவரை நாம் பார்த்தோம்.
அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நபிமார்களுக்கு மட்டுமில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதம் நிகழலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒருவருக்கு அற்புதம் நிகழ்ந்தது என்றால் அவர் பெரிய மகானாக இருக்க வேண்டும். அவ்லியாவாக இருக்க வேண்டும். அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட அடியாராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அது அடையாளம் கிடையாது.
எந்த ஒரு முஃமினாக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் உதவி செய்ய நாடிவிட்டால் அற்புதமான முறையில் அந்த உதவியை கிடைக்கச் செய்வான். இந்த வகையான ஒரு அற்புதமும் மார்க்கத்தில் இருக்கிறது.
நபிமார்களுடைய அற்புதத்திற்கும், இந்த அற்புதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், நபிமார்கள் ஒரு அற்புதத்தைச் செய்வதற்கு முன்னால் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள். அதன் பின்னர் நபிமார்கள் வழியாக அந்த அற்புதம் நிகழ்த்தப்படும். இதுபற்றிச் சென்ற இதழில் நாம் பார்த்தோம்.
அல்லாஹ், நபிமார்கள் வழியாக அவர்களுக்குத் தெரிய வைத்து இப்போது செய் என்று சொல்லி கட்டளையிட்டபின் அற்புதங்களைச் செய்வார்கள்.
இதல்லாமல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய அற்புதங்கள் என்னவென்றால், அவர்களுக்கு எந்த ஒரு செய்தியும் இறைவனிடமிருந்து வராது. இப்போது, இவ்வாறு நடக்கும் என்று நமக்கே தெரியாது. அல்லாஹ் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாடி விட்டால் நாம் அறியாத விதத்தில் நமக்கு அந்த உதவியைச் செய்வான். இதோ அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
(அல்குர்ஆன் 65.3)
இந்த வசனத்தில், அல்லாஹ் மனிதன் அறியாத விதத்தில் அவர்களுக்கு உணவளிப்பான் என்று மட்டும்தான் வந்துள்ளது. இதையே உணவளிப்பது மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். அவனே அறிந்து பார்க்காத அளவுக்கு எத்தனையோ விஷயங்களை அல்லாஹ் செய்வான்.
உதாரணமாக, ஒரு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விடுகின்றார்கள். ஆனால் அதில் அதிசயமான முறையில் ஒருவன் மட்டும் மயிரிழையில் உயிர் பிழைத்திருப்பான். விமானம் நொறுங்கி விழுந்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்; கார் விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. இதுபோன்ற ஏராளமான சம்வங்களை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.
இந்த உயிர் பிழைத்த மனிதனுக்கு, நாம் மட்டும் சாகாமல் தப்பி விடுவோம் என்று தெரியுமா? அல்லது அல்லாஹ் இந்த விபத்தில் நீ மட்டும் உயிர் பிழைத்துக் கொள்வாய்? மற்ற அனைவரும் இறந்து விடுவார்கள் என்று வஹீ அறிவித்தானா? இல்லை. அவனுக்கே தெரியாத, அறியாத விதத்தில் நடக்கின்ற இந்த நிகழ்வும் ஒரு அற்புதம்தான். ஆனால் அந்த மனிதன் அதைச் செய்யவில்லை.
ஆனால், நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை நபிமார்கள் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தான் நபி என்பதற்கு ஆதாரமாக, அத்தாட்சியாகக் காட்ட வேண்டியிருப்பதாலும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லி அவர்கள் வழியாகவே அந்த அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.
ஆனால் மற்ற மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழுமா என்றால், பணக்காரன், பாமரன், ஏழை உட்பட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஒரு பணக்காரனுக்கு நடக்காத அதிசயம் ஏழைக்கு நடக்கும். அல்லாஹ் ஒருவனுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவி செய்ய நினைத்து விட்டால் இது நடந்து விடும். ஆனால், நபிமார்களுக்கு நடந்தது போன்று அவர்கள் அறிகின்ற விதத்தில் நடக்காது. மற்ற மனிதர்களுக்கு அவர்கள் அறியாத வித்தில் நடக்கும். இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
நபிமார்களுக்கு அல்லாஹ் தள்ளாத வயதில் குழந்தையைக் கொடுத்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு எப்படி குழந்தையைக் கொடுத்தான்? அந்த நபிமார்களிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லிய பிறகு குழந்தையைக் கொடுத்தான். இவ்வாறு அல்லாஹ் திருமறையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை கொடுத்ததைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக் குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன்:) ➚,72,73)
இந்த சம்பவம் 51:29,30, 15:53-55, 14:39 ஆகிய வசனங்களிலும் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கும் தள்ளாத வயதில் தான் குழந்தையைக் கொடுத்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
.அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 3.38,)
இந்தச் சம்பவம் மேலும் 21:89,90, 19:3-10 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
இதுபோன்று இப்போதும் கூட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இப்ராஹீம் நபி மற்றும் ஸக்கரியா நபிக்குக் கிடைத்த மாதிரி, தள்ளாத வயதுடையவர்களில் யாரோ ஒருவருக்குக் கிடைத்து விடும்.
நாம் செய்தித் தாள்களில் கூடப் படித்திருப்போம். 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று. இது ஒரு அதிசயமான, ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், அந்த வயதில் மாதவிடாய் நின்று விடும். எந்த மருத்துவரிடம் சென்று மாத்திரை மருந்துகள் எடுத்தாலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத வயது. மருத்துவர்கள் கூட, நீங்கள் குழந்தை பெறும் தகுதியை இழந்து விட்டீர்கள். அல்லது, உங்கள் கணவன் ஆண்மைத் தன்மையை இழந்து விட்டார். இனிமேல் உங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று சொல்லி விடுவார்கள்.
ஆனால் அதையும் தாண்டி இறைவன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத பெண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கியிருக்கிறான். அந்தப் பெண், நமக்கு இந்த வயதில் குழந்தை பிறக்கும் என்று அறிந்திருப்பாளா? என்றால் அறிந்திருக்க மாட்டாள். அல்லது, அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லியிருப்பானா என்றால் அதுவும் இல்லை. அவளே அறியாத விதத்தில், நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் தான் இந்த அற்புதம் நடந்திருக்கிறது. இவ்வாறு சில அற்புதங்களை வழங்குவான்.
அத்தகைய அற்புதங்களை இப்போதும் அல்லாஹ் நிகழ்த்துவான். அந்த அற்புதங்கள் அவரிடம் நிகழ்ந்தவுடன் அவரை அவ்லியா என்று சொல்வதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கு அடையாளம் என்று சொல்வதற்கோ, அவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று சொல்வதற்கோ எந்த ஆதாரமும் கிடையாது. பொருந்திக் கொள்ளப்பட்டவர்களுக்கும் அவன் அற்புதங்களைச் செய்வான். சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்களைச் செய்வான்.
நம் வாழ்க்கையிலும் கூட யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு அற்புதம் – அதிசயம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாகச் சொல்வதாயிருந்தால், ஒருவருக்கு மிகப் பெரிய நோய் ஒன்று ஏற்பட்டிருக்கும். அல்லது அவர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை ஸ்கேன் எடுத்து பார்த்து, பரிசோதித்து விட்டு, இவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. அவர் பிழைப்பது மிகவும் கஷ்டம். அல்லது அவர் பிழைக்கவே மாட்டார். எங்களால் காப்பாற்ற முடியாது. இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கைவிரித்து விடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவர் உயிர் பிழைத்தார்; அந்த நோயிலிருந்து குணமடைந்தார் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம்.
இவ்வாறு அவர் உயிர் பிழைத்ததால்- இந்த அதிசயம் நடந்ததால் அவரை அவ்லியா என்று முடிவு செய்ய முடியுமா? இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார், அதனால் தான் இவர் உயிர் பிழைத்தார் என்று சொல்ல முடியுமா? முடியாது. அல்லாஹ் அவருக்கு உதவ நாடிவிட்டதால் அவருக்கு உதவி செய்தான். இதனால் அவர் மகான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், இந்த அற்புதங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். இறைவனை நம்பாத, இறைவனை மறுக்கின்ற இறைமறுப்பாளர்களுக்கும் சில அற்புதங்களைச் செய்வான். மறுமையில் இவர்களுக்கு எந்தச் சிறப்பும் அந்தஸ்தும் கிடையாது. அவர்களுக்கு நரகம்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் இவ்வுலகில் மட்டும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பை – அந்தஸ்தை வழங்க நினைத்தால், அற்புதத்தைச் செய்து காட்ட நினைத்தால் அதை அல்லாஹ் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டுவான்.
மேலும், அற்புதங்களிலேயே மிகப் பெரும் அற்புதத்தை செய்யக்கூடியவன் ஷைத்தானாகத் தான் இருக்கிறான். இவ்வுலகில் இப்லீஸ் செய்த அற்புதங்களுக்கு நிகராக வேறு யாரும் அற்புதங்கள் செய்திருக்கிறார்களா? நம்முடைய உள்ளத்திற்குள் நுழைந்து நம்மைத் திசை திருப்பி விடுகின்றான். நம்முடைய உள்ளத்தில் ஊடுருவுதல் போன்ற விஷயங்கள் அவனிடம் நடக்கின்றது. அற்புதங்கள் என்பது ஷைத்தானிடம் கூட நிகழ்வதனால், அவன் மகான் என்பதற்கு அடையாளமாகுமா? அவனை நல்லடியார் என்று சொல்ல முடியுமா? என்றால் முடியாது.
மேலும், நபிமார்கள் அல்லாமல் நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்களை மாத்திரம் தான் நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை விடுத்து வேறு யாரையும் நாம் அல்லாஹ்வின் இறைநேசர் என்றோ நல்லடியார் என்றோ சொல்லக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாரை நல்லடியார்கள் என்று சொல்லியிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எப்பேற்பட்ட அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதிசயங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களை மகான் என்றோ அவ்லியாக்கள் என்றோ இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்றோ சொல்லக்கூடாது.
உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் விடச் சிறந்தவர்களான, எல்லா முஃமீனான ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன் மாதிரியாகச் சொல்லப்பட்ட மர்யம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
“மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்” என்று வானவர்கள் கூறியதை நினை வூட்டுவீராக! “மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!” (என்றும் வானவர்கள் கூறினர்.).
(அல்குர்ஆன் 3.42,43)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
(அல்குர்ஆன் 66.12)
இத்தகைய சிறப்பைப் பெற்ற மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாகப் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய் யாவைப் பொறுப்பாளியாக்கினான்.
அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்.
“இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ், தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார்.
(அல்குர்ஆன் 3.37)
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத் தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித் தார். “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறி னார். “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற் காக (வந்த) உமது இறைவனின் தூதன்” என்று அவர் கூறினார்.
“எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார். “அப்படித் தான்” என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை‘ எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.) பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
“கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். “பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் “நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக! (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத் திடம் கொண்டு வந்தார். “மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?” என்று அவர்கள் கேட்டனர்.
“ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்த தில்லை” (என்றனர்) அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?” என்று அவர்கள் கேட்டார்கள்.
உடனே அவர் (அக்குழந்தை), “நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக ஆக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்திய வனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர் பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது” (என்றார்) இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.
இது மர்யம் (அலை) அவர்கள் விஷயத்தில் இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களாகும்.
அதே போன்று குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றியும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
முந்தைய சமுதாயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில பேர் இருந்தார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதால் சொல்லெணாத் துயரத்தை – துன்பத்தை அடைந்தார்கள்.
இனிமேல் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்த ஊரில் வாழ முடியாது. நமக்குக் கொள்கை தான் முக்கியம் என்பதை அறிந்து அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். அந்த ஊரை விட்டு சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு குகையில் அவர்கள் தஞ்சம் அடைகின்றார்கள். ஆனால், அந்தக் குகையில் அவர்களுக்கே தெரியாமல் பல அற்புதங்கள் அங்கே நிகழ்கின்றது.
குகைவாசிகள் குறித்தும், அவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள் குறித்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றை முதலில் பார்ப்போம்.
“அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது “எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!” என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம். அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம்.
அவர்கள் எழுந்து “நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்” என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங் களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்? அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்குபவற் றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்). சூரியன் உதிக்கும் போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப் புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவர் நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர் வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.
அவர்கள் விழித்துக் கொண்டிருப் பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை வலப்புறமும் இடப் புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்! அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர் களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்” என்றனர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றும் கூறினர்.
அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுக முடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்” என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் “இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்” என்றனர்.
“(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்” என்று (சிலர்) கூறுகின்றனர். “ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்” என்று மறைவானதைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். “எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்” என்று (மற்றும் சிலர்) கூறுகின்றனர். “அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! “எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்” என்று கூறுவீராக!
அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) “அவர்கள் தங்கிய (காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர் களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்” என்று கூறுவீராக!
இதுவே குகைவாசிகள் பற்றித் திருக்குர்ஆன் கூறும் வரலாறாகும்.
அந்தக் குகைவாசிகள் குகையில் பல ஆண்டுகளாக உறங்கியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புகிறான். ஒரு மனிதன் சாகாமல் பல ஆண்டுகளாக உண்ணாமல், பருகாமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருப்பது ஒரு அற்புதமாகும்.
ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்கினாலும் அவனுக்குப் பசி வந்து விட்டால் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுவான். ஆனால் இந்தக் குகைவாசிகள் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடமால், குடிக்காமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருக்கிறார்கள். அதிலும் எந்த மனிதனாவது ஒரு புறமாகவே சாய்ந்து பல நாட்கள் படுத்துக் கிடந்தாலே உடல் வெப்பத்தினால் வெந்து போய் விடும். சில நோயாளிகளுக்குத் தண்ணீர் படுக்கை (வாட்டர் பெட்) போட்டால் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் படுத்துக் கிடக்கின்றார்கள். ஆனால் எந்த விதமான விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை. அல்லாஹ் தான் அவர்களை இடது புறமாகவும் வலது புறமாகவும் புரட்டியதாகச் சொல்கின்றான். அதன் காரணத்தால், சூரியன் உதிக்கும் போதும் அவர்கள் மீது படவில்லை. சூரியன் மறையும் போதும் அவர்கள் மீது படவில்லை.
அல்லாஹ் அவர்களைப் பல வருடங்களாகத் தூங்க வைத்து, அவர்கள் அழைத்து வந்த ஒரு நாயைக் காவலுக்கு வைத்து இந்த அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறான்.
அதற்குப் பிறகு அவர்கள் பல வருடங்கள் கழித்து எழுந்திருக் கிறார்கள். அப்போது தான் அவர்களுக்குப் பசி ஏற்படுகின்றது. சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக காசு கொடுத்து சாப்பாடு வாங்க ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் அந்த ஊர் மக்கள் அந்தக் காசுகளை செல்லாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
பிறகு அவர்கள் திரும்பி வந்து, நாம் எவ்வளவு நேரம் இங்கே உறங்கியிருப்போம்? நாம் ஒரு நாள் அல்லது அரைநாள் தூங்கியிருப்போம். அதற்குள் உலகமே மாறிவிட்டது. நாம் சாப்பாடு வாங்குவதற்காகக் கொண்டு போன பணமும் செல்லாக் காசாகி விட்டது என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
முன்னூறு வருடமாகத் தூங்கியவர் களுக்கு, தாங்கள் எத்தனை வருடம் தூங்கினோம் என்பது கூடத் தெரியவில்லை. அவர்களிடத்தில் தான் அற்புதம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய அறிவு அவர்களிடத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு போய் சாமான்கள் வாங்குவதற்குக் கடைக்கு செல்லும் போதுதான் அவர்களுக்கு விபரமே தெரிய வருகிறது.
இவ்வாறு நபிமார்கள் அல்லாத, நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் இது அவர்கள் மூலமாக நடந்த அற்புதமா என்றால் இல்லை. அவர்கள் அறியாமலேயே அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான். நபிமார்களுக்கு எவ்வாறு அற்புதங்கள் நிகழுமோ அந்த மாதிரி இவர்களுக்கு நிகழவில்லை. இவர்களாகவும் நிகழ்த்திக் காட்டவுமில்லை. நபிமார்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து, “செய்’ என்று சொல்வான். அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி யுடன் அதைச் செய்து காட்டுவார்கள்.
அது போன்று, நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்குக் கீழ்க்காணும் சம்பவத்தை நாம் உதாரணமாகக் கூறலாம்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், ‘நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மை யான முறையில் செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக – துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப் போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்” என்று பேசிக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப் பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன்.
வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலை மாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந் தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது.
நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக் கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி – முறைப் பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக் கும் இடையே அமர்ந்தபோது அவள், ‘அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே” என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!
உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.
மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், ‘என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
(அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எது வரை என்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு அஞ்சு‘ என்று கூறினார். நான் அவரிடம், “அந்த மாடுகளிடமும் இடையர் களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்‘ என்றேன்.
அதற்கு அம்மனிதர், “அல்லாஹ் வுக்கு அஞ்சு! என்னைப் பரிகாசம் செய்யாதே‘ என்று கூறினார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்ய வில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்‘ என்று பதிலளித் தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!
(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்தச் சம்பவம் மேலும் புகாரியில் 2063, 2111, 2165, 3206, 5517 ஆகிய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.
மேற்கண்ட சம்பவத்தில், அந்த மூன்று பேர் கேட்ட துஆவினால் பாறை அகன்ற அந்த அற்புதம் நிகழ்ந்ததாக நபிகளார் கூறுகிறார்கள். அந்த மூன்று பேரும் சராசரி மனிதர்கள் தானே தவிர அதிகம் அதிகம் நன்மைகள் செய்து, நாள் முழுவதும் இறை வணக்கத்தில் ஊறித் திளைத்த, காசு பணத்தை தர்மமாக வாரி இறைத்த, தியாகம் செய்த பெரிய அவ்லியாக்களோ, மகான்களோ அல்லர். தங்களின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த ஒரு நல்லறம் உண்டா என்று தேடிப் பார்க்கும் அளவுக்குக் குறைந்த நல்லறம் செய்தவர்கள். ஒரு நேரத்தில் அல்லாஹ்வை அஞ்சி, பயந்து ஒரு நற்செயலைச் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆக, அல்லாஹ் நாடினால் யாருக்கும் இவ்வுலகில் அற்புதங் களைச் செய்வான். அவன் நல்லவனாக இருந்தாலும் சரி தீயவனாக இருந்தாலும் சரியே!