மரணமும் மறுமையும் -27
நரகம்-1
விதிப்படியே நடக்கும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம்: 5160
அனைவருக்கும் சொர்க்கம் , நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இஸ்லாம் கூறும் பதில், ஆம். அனைவருக்கும் சொர்க்கம் நரகம் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (தெரியும்) என்று சொன்னார்கள். அவர் அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹூசைன் (ரலி)
பீதியை ஏற்படுத்தும் செய்தி:
இந்த ஹதீஸை – செய்தியை படிப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது உண்மையிலேயே நம் அனைவருக்கும் உள்ளத்தில் பீதியை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தி. ஏனென்றால் ஒருவேளை நான் நரகத்திற்கு உரியவனாக இருந்தால் என் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
எதிர்காலத்தில் நடப்பதை யாரும் அறிய முடியாது. எனினும், ஒவ்வொருவரும் தன் நிலையை வைத்து தான் செய்யும் நல்ல தீய செயல்களை வைத்து தான் நரகத்திற்கு உரியவரா அல்லது சொர்க்கத்திற்கு உரியவரா, எதற்கு செல்வதற்குரிய செயல்களை செய்து கொண்டிருக்கிறேன் – என்பதனை ஓரளவு யோசிக்க முடியும். எனினும் இறுதி முடிவை அல்லாஹ்வே அறிவான்.
அந்த படிப்பினையை இந்த ஹதீஸிலிருந்து நாம் எடுத்துக் கொண்டு ”இறைவா! நான் உனது சொர்க்கத்திற்கு உரியவராக நாம் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனையோடு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அதற்குரிய வேலைகளை செய்ய வேண்டும்.
நரகத்தின் பெயர்கள்
நரகத்திற்கு பல்வேறு பெயர்களை திருமறை குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
- நார்-நரகம்
- ஹாவியா-சுட்டெரிக்கும் நெருப்பு
- லளா-பெரும் நெருப்பு
- ஹுதமா-மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு
- ஜஹீம்-நரகம்
(அல்குர்ஆன்: 79:39) ➚ …
- ஜஹன்னம்-நரகம்
(அல்குர்ஆன்: 78:21) ➚ …
- ஸகர்-நரகம்
(அல்குர்ஆன்: 54:48) ➚ …
- ஸயீர்-நரகம்
9 . தாருல் பவார்-அழிவு உலகம்
தாருல் ஃபாஸிகீன்-பாவிகளின் உலகம் (வசன விளக்கம் பார்க்க)
- ஸூஉத் தார்-மிகக்கெட்ட வீடு, கொடிய தங்குமிடம்
- பிஃஸல் மஸீர்-கெட்ட சேருமிடம்
(அல்குர்ஆன்: 2:126) ➚ …
- பிஃஸல் கரார்-மிகவும் கெட்ட தங்குமிடம்
- பிஃஸல் மிஹாத்-கெட்ட தங்குமிடம்
(அல்குர்ஆன்: 38:56) ➚ …
- பிஃஸல் விர்துல் மவ்ரூத்-கெட்ட சேருமிடம்
நரகத்தின் பிரம்மாண்டம்
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.
அறி: இப்னு மஸ்ஊத் (ரலி)
நரகத்துக்கு ஏழு வாசல்கள்:
அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.
நரகத்தின் காவலர்கள்
(ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?” என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.
உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்” என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்
“(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்” எனக் கேட்பார்கள். “நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்” என்று அவர் கூறுவார்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
…ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர்.
நரகவாசிகளின் பானம், உணவு, ஆடை
அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் சூடேற்றப்பட்ட பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது.
அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள். தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.
நரகவாசிகளின் உணவு
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது. அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவர். அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும். உருக்கிய செம்பைப் போலும், சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.
பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள். அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.
சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
நம்மிடம் கைவிலங்குகளும், நரகமும், விக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.
நெருப்பால் ஆன ஆடை
(ஏகஇறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.
நரகில் பல்வேறு வேதனைகள்
விலங்குகளும், சங்கிலிகளும்
அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்:
‘அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்! (என வானவர்களிடம் கூறப்படும்.)
அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
அடர்ந்த இருளில் இருப்பார்கள்:
அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை (இருள்) நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.
குளிர்ச்சி என்பதே கிடையாது:
வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
உள்ளத்தை தாக்கும் நெருப்பு:
ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
முகங்கள் நரகில் புரட்டப்படும்:
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள்.
மேலும் கீழும் வேதனை:
அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான்.
அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்!’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
சம்மட்டி அடி:
அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.
கூச்சலும் அலறலும்:
கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.
கருகும் தோல்கள்
நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
இதில் உள்ள அறிவியல்:
இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது.
வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் தீக்காயத்தை மூளை உணராது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நமது தோல், நாம் விளங்க முடியாத அளவிற்கு பல சிக்கலான நரம்பு அடுக்குளையும், வலி உணரிகளையும் கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில், தோலில் ஏதேனும் சூடு, காயம் ஏற்பட்டால், Nociceptors நான்சிசெப்டார்கள் என்று அழைக்கப்படும் தோலில் உள்ள வலி உணரும் செல்கள், அற்கேற்றார் போல, சில மின் அலைகளை உருவாக்கி, அதை தண்டுவடம் மற்றும் மூளைக்கும் அனுப்புகிறது.
மூளை அதை உள்வாங்கி, தாலமஸ், கார்டெக்ஸ் மற்றும் பல பகுதிகளுக்கு கொண்டு சென்று, இது என்ன என்று கண்டறிகிறது. அவை இந்த வலி எங்கு ஏற்பட்டது, எப்படி இதை வலியாக மனிதனுக்கு காட்ட வேண்டும், மனிதன் அதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று பலவற்றை தீர்மாணிக்கிறது.
இதற்கிடையே Endorphins எனப்படும் சில வலி நிவாரணிகளை எந்த இடத்தில் உற்பத்தி செய்து எப்படி அந்த இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை மூளை செய்து முடிக்கிறது. சுருக்கச் சொன்னால், தோல் மட்டுமே வலியை உணரும் உறுப்பாக உள்ளது.
சிறு தீக்காயம் ஏற்படும்போது மனிதன் துடிக்கிறான். ஆனால் பெருமளவு தோல் கருகிப் போனவன் துடிதுடிக்காமல் படுத்துக் கிடக்கிறான். அவன் சாதாரண தீக்காயம் பட்டவனை விட பன்மடங்கு துடிக்க வேண்டும். ஆனால் அவன் எந்த வேதனையும் இல்லாதவனைப் போல் படுத்துக் கிடப்பதை நாம் பார்க்கிறோம்.
காரணம் தீக்காயத்தின் வேதனையை மனிதன் உணர்வதற்கான தோல் கரிந்து விட்டதால் அவனுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது எப்படித் தெரியும்? திருக்குர்ஆன் “அவர்களின் தோல் கருகும்போது அதை மாற்றுவோம்” என்று கூறாமல் “வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்” என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுகிறதென்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான் இதைக் கூறியிருக்க முடியும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.
நரகம் தொடர்பான மீதம் உள்ள செய்திகளை அடுத்த உரையில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.