26) பள்ளிவாசலில் பிறர்நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாட வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வின் ஆலயத்திலும் இதைக் கடைபிடிக்க வேண்டும். பள்ளிவாசலை பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்கு துன்பம் தரும் காரியங்களை செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகளை செய்யும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள். துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : (முஸ்லிம்: 974)

உங்களில் ஒருவர் (பள்ளிவாசலுக்கு வந்து தொழுவதற்காக) தொழக்கூடிய இடத்தில் (காத்திருந்து) அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவருக்கு காற்றுப் பிரிந்து, உளூ நீங்கிவிடாமல் இருக்கும் வரை,பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும்வரை ‘இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!’ என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 2119)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உங்களில் ஒருவர் பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ தமது கையில் அம்புடன் நடந்துசென்றால். அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்!’ என்று (மும்முறை) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் சிலர் வேறு சிலரின் முகங்களுக்கு எதிரே அம்புகளை உயர்த்திப் பிடிக்காத வரையில் நாங்கள் இறக்கவில்லை.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: (முஸ்லிம்: 5101)