26) நபிமார்களின் அற்புதங்கள்
மூஸா நபிக்கு இறைவன் பல அற்புதங்களை வழங்கியிருந்தான். மூஸா நபியவர்கள் காலத்தில் உள்ள இஸ்ரவேலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர்.
மூஸா நபி அந்தக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கும் போது தாகம் ஏற்படுகின்றது. உடனே அவர்கள், நீங்கள் தான் அல்லாஹ்வுடைய தூதராயிற்றே! எங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படுகிறது! நீங்கள் தண்ணீருக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரினர்.
உடனே மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் தண்ணீர் வேண்டி கோரினார்கள். உடனே இறைவன் உன்னுடைய கையில் இருக்கும் கைத்தடியால் அருகில் இருக்கும் பாறையை அடிப்பீராக! என்று கட்டளையிடுகின்றான்.
அவர்கள் அவ்வாறு ஒரு அடி அடித்த உடன் அந்த 12 கோத்திரத்திற்கான அடையாளங்களுடன் அந்த பாறையிலிருந்து 12 ஊற்றுகள் வந்தன. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுடைய ஊற்றுகளை அடையாளம் கண்டு அதில் தண்ணீர் அருந்தினார்கள். இந்தச் சம்பவம் மூஸா நபி அவர்கள் மூலமாக நிகழ்ந்த அற்புதமாகும்.
இதை 2:60, 7:160 ஆகிய வசனங்களில் அறியலாம்.
தண்ணீர் வேண்டும் என அம்மக்கள் முறையிட்ட போது தமது கைத்தடியைப் பயன்படுத்தி அல்லது வேறு மந்திரம் செய்து தண்ணீரை அவர்கள் வரவைக்கவில்லை. அல்லாஹ்விடம் தான் துஆ செய்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு தமது கைத்தடியால் அடித்ததால் தான் தண்ணீர் வந்தது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அதே போன்று. மூஸா நபியவர்கள் கைத்தடியை போட்டு பாம்பாக மாற்றிய சம்பவங்கள் குர்ஆனில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது.
அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.
அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.
“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். “மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்”.
மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இருக்குமென்றால் ஏன் தன்னுடைய கைத்தடியை கீழ போட்டு அது பாம்பாக மாறிய போது பயந்து ஓடினார்கள்?
கையில் இருக்கும் தடியை கீழே போடு என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஏன் அல்லாஹ் இத்தடியை கீழே போடச் சொல்கிறான் என்பது மூஸா நபிக்கு தெரியவில்லை. அவ்வாறு போட்டால் என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அதனால் தான் திரும்பிப் பார்க்காது ஓடினார்கள்.
ஆக மேற்கண்ட வசனங்களிலிருந்தே மூஸா நபிக்கு சுயமாக அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதே போன்று மூஸா நபிக்கு மேலும் ஒரு அற்புதத்தை வழங்கினான். எதிரிகள் இவர் தூதர் என்பதில் சந்தேகத்தைக் கிளப்பிய போது இறைவன் மூஸா நபிக்கு உம்முடைய கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுப்பீராக என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறு செய்தார்கள். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருந்த அவர்களுடைய கை அந்த நேரத்தில் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிடும் ஒளியைப் போன்று ஆனது. இந்த அற்புதத்தை அல்லாஹ், தான் நிகழ்த்திக் காட்டியதாகக் குறிப்பிடுகின்றான்.
உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.
உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்” (என்று இறைவன் கூறினான்.)
நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.
இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
சட்டைப் பைக்குள் இருந்து கையை வெளியே எடுப்பீராக! என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மூஸா நபி அவர்களுக்கு ஏன் இவ்வாறு செய்யச் சொல்கிறான் என்பதும் தெரியவில்லை. சட்டைப் பைக்குள் இருந்து கையை எடுத்தால் என்னவாகும் என்பதும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், மொத்தம் ஒன்பது அற்புதங்கள் – சான்றுகளுடன் சென்று அந்த சான்றுகளை அவர்கள் (எதிரிகள்) கண்ணால் பார்த்தும் அந்த அற்புதங்களை சூனியம் என்றே தான் கூறினார்கள்.
அது போன்று மூஸா நபியவர்கள் தன்னுடைய சமுதாய மக்களிடத்தில் உடன்படிக்கை எடுக்கும் போதெல்லாம் அம்மக்கள் அந்த உடன்படிக்கையை மீறுபவர்களாக இருந்தார்கள். இவர்களிடத்தில் சரியான முறையில் உடன்படிக்கை எடுக்க வேண்டும் என்று கருதி அல்லாஹ் வழங்கிய அற்புத்தைக் காட்டி உடன்படிக்கை செய்தார்கள். அதைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
மலையை அவர்களுக்கு மேல் மேகத்தைப் போன்று நாம் உயர்த்தி, அது தம் மீது விழுந்து விடும் என்று அவர்கள் நினைத்த போது “உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள்! அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள்! (நம்மை) அஞ்சுவோராகலாம்” (என்று கூறினோம்)
(அல்குர்ஆன் 7.171)
இறுதி கட்டமாக, பிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவையும் அவரை ஈமான் கொண்டவர்களையும் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வருகிறார்கள். கடைசியில் கடற்கரையை அடைகின்றார்கள். தப்பிப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஒன்று பிர்அவ்னிடம் அகப்பட்டு, கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்படும். அல்லது கடலில் விழுந்து இறக்க நேரிடும் என்பதை அறிந்த மூஸா நபியின் கூட்டத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அல்லாஹ் அங்கும் அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு அற்புதத்தை மூஸா நபிக்கு நிகழ்த்திக் காட்டினான். அதைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
“எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலில் மூட வேண்டியது அவர்களை மூடிக் கொண்டது.
காலையில் (ஃபிர்அவன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(அல்குர்ஆன்: 26:62) ➚,63)
மூஸா நபியின் கையில் கைத்தடி இருந்தும் அவர்கள் தன்னிச்சையாக கடலில் அதை அடித்து, பிளக்கச் செய்யவில்லை. என் இறைவன் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் வழிகாட்டலுக்காகக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகுதான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அற்புதங்கள் செய்யும் ஆற்றலும் அதிகாரமும் நபிமார்களுக்கு இல்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றுகளாகும்.
அதே போன்று, மூஸா நபியுடைய சமுதாயம் ஒரு நாடோடி சமுதாயமாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்யாமல், எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டு தான் இருப்பார்கள். அப்போது அவர்கள் உணவுக்கு வழியில்லாத காரணத்தால் மூஸா நபியிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டனர். அப்போது இறைவன் அவர்களுக்கு மன்னு ஸல்வா எனும் அற்புத உண்வை இறக்கினான். அதைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
இஸ்ராயீலின் மக்களே! உங்கள் எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். தூர் மலையின் வலப்பகுதியை உங்களுக்கு வாக்களித்தோம். உங்களுக்கு “மன்னு, ஸல்வா‘ (எனும் உண)வை இறக்கினோம்.
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்).
அந்த உணவை சிறிது காலம் சாப்பிட்டு அனுபவித்து விட்டு மீண்டும் மூஸாவிடம், “ஒரே உணவை எவ்வளவு காலத்திற்குத் தான் சாப்பிடுவது? எங்களை ஏதாவது ஒரு நல்ல இடத்தில் குடியமர்த்தி, வகை வகையான காய்கறிகளைச் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்கத் தொடங்கினர். அதற்கு மூஸா நபியவர்கள் “அல்லாஹ் உங்களுக்கு எவ்வளவு அருமையான உணவை வழங்கியிருக்கிறான்; அதை விட்டுவிட்டு இப்போது வேறு உணவு கொண்டு வா என்கிறீர்களே’ என்று அவர்களை நோக்கிக் கேட்டார்கள். பிறகு அதையும் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். அந்தக் கோரிக்கையை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் நிறைவேற்றியதாகக் குறிப்பிடுகிறான்.
“மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக் காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்” என்று நீங்கள் கூறிய போது, “சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு” என்று அவர் கூறினார்.
“இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! ‘மன்னிப்பு‘ என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்” என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்!
அதே போன்று ஈஸா நபியவர்கள் களிமண்ணால் ஒரு பறவையைச் செய்வார்கள். அது உடனே நிஜப் பறவையாக மாறுகிறது.
இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது” (என்றார்)
(அல்குர்ஆன் 3.49)
இது அல்லாமல் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட பல்வேறு அற்புதங்களை பற்றியும் இறைவன் குறிப்பிடுகிறான்.
மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 5.110)
மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார். “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண் மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர். “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார். “உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் 5.112,115)
மேலும் குர்ஆனில் 19:20, 3:37, 21:91, 66:12, 3:45-47 ஆகிய இடங்களில் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைப் பற்றி இறைவன் கூறுகறான்.
அதே போன்று, யஃகூப் நபிக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டு, யூசுப் நபியின் சட்டையை எடுத்துப் போட்டவுடன் பார்வை திரும்ப வந்துவிடும். இந்த சம்பவம் குர்ஆனில் 12வது அத்தியாயத்தில் 93 முதல் 96 வரை வருகின்றது
“எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்) “ஒட்டகக் கூட்டம் புறப்பட்ட போது “நான் யூஸுஃபுடைய வாசனையை உணர்கிறேன். நீங்கள் என்னைப் பழிக்காதிருக்க வேண்டுமே” என்று அவர்களின் தந்தை கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் உமது பழைய தவறான முடிவில் தான் இருக்கிறீர்” என்று (குடும்பத்தினர்) கூறினர். நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.
அதே போன்று, இப்ராஹீம் நபிக்கு, நான்கு பறவைகளை அறுத்து துண்டு துண்டா ஆக்கி அவற்றை தனித் தனியாக நான்கு மலையின் மீது வைத்து விட்டு பிறகு நீ அவற்றை அழைத்தால் அவை உன் அழைப்பை ஏற்று உயிர் பெற்று வரும் என்று இறைவன் கூறியதாக குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
“என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” எ ன்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.” என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக” என்று (இறைவன்) கூறினான்.
இப்ராஹீம் நபியவர்களை எதிரிகள் தூக்கி தீயில் போட்டவுடன் அந்த தீயை இறைவன் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் குளிர்ச்சியாக ஆக்கினான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.
இதுபோன்ற பல அற்புதங்கள் நபிமார்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றை இதுவரை நாம் பார்த்தோம்.
இதையெல்லாம் பார்த்து விட்டு, இறந்து போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து எழுப்பியிருக்கிறார்கள்; களிமண்ணால் பறவையை செய்திருக்கிறார்கள்; வானத்திலிருந்து உணவை இறக்கியிருக்கிறார்கள்; இதெல்லாம் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய விஷயமா? நபிமார்கள் மனிதப் படைப்பு அல்ல என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கலாம்.
இவற்றை நபிமார்கள் செய்தார்கள் என்பதில் நமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்தந்த சம்பவங்களிலேயே அந்த அற்புதத்தை எப்படிச் செய்தார்கள்? யார் மூலமாகச் செய்தார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கின்றது.