26) இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (அல்குர்ஆன்: 5:3)➚ வசனம் அருளப்பட்டது. ‘ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.

அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.
இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும், பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள்.

அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து, நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும், காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி, காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக சாறாகப் பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

விடை பெறும் ஹஜ்

“உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)(முஸ்லிம்: 2286)
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவிர்களா?” எனக் கேட்டார்கள் அதற்கு மக்கள், ‘அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்” என்றனர் உடனே அவர்கள், ‘இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்க மக்கள் ‘அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர் என்றனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு. ‘உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்” எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு. ‘இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்” என்று கூறினார்கள். மேலும், ‘இறைவா! நீயே சாட்சி” என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் இது நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்” என்று பேசிக் கொண்டார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: (புகாரி: 1742)

தூதுச் செய்தி நிறைவுறுதல்

“என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: 1739)

“நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள் உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும், ‘யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் (முஸ்லிம்: 2137)

சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரனாவான் (ஹாகிம்: 318) , பாகம்: 1, பக்: 171)

“நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள் அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான் அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள் அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ் (ரலி) நூல்: (புகாரி: 4406)

மனித உரிமைகள்

“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள். (புகாரி: 1739)

“அறிந்து கொள்ளுங்கள் உங்களது இந்த நகரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமான வையாக ஆக்கியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “நான் (இறைச் செய்தியை உங்களிடம்) சேர்த்து விட்டேனா?” என்று கேட்டார்கள். மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். “இறைவா! நீ சாட்சியாக இரு” என்று மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், ‘உங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ!” அல்லது “அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள் என்று சொன்னார்கள் (புகாரி: 4403)
மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல. அறிவிப்பவர்: அமர் பின் அல் அஹ்வல் (ரலி) (திர்மிதீ: 3012) ,(ஹாகிம்: 318)

அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள்.
(நூல்: தப்ரானீ 7523 பாகம் 8. பக். 111)

வேண்டாம் இன வெறி!

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான் உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும். ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும். ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும். ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைத் தவிர! (அஹ்மத்: 22391)

அறியாமை அகலட்டும்!

அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன. (முஸ்லிம்: 2137)