மரணமும் மறுமையும் -25

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

(ஒவ்வொருவராக தீர்ப்பளிக்கப்படுதல்)

வெளிப்படுத்தப்படும் ஏடு

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன்: 50:17-18)

وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான்.

(அல்குர்ஆன்: 17:13)

உண்மையை மட்டும் பேசும் உத்தம ஏடு

குற்றம் செய்தவனை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பெரிய குற்றவாளி என்று பதியப்படுகின்றது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அந்த அறிக்கையில் சாதாரண குற்றச்செயல் செய்தவர் என்று மாற்றிவிடுகின்றனர்.

ஒருவருடைய சொத்தை மற்றொருவர் சர்வ சாதாரணமாக மாற்றி எழுதிவிடுகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்காக பதியப்படுகின்ற அனைத்தும் பொய்யாய் போவதைப் பார்க்கலாம். ஆனால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர்கள் மூலம் எழுதப்பட்ட முதலும் முற்றிலுமான தகவல் அறிக்கையில் உண்மை மட்டுமே இருக்கும். அதில் உள்ளதை யாராலும் மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. உள்ளது உள்ளபடி இருக்கும்.

وَلَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ وَلَدَيْنَا كِتٰبٌ يَّـنْطِقُ بِالْحَـقِّ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 23:62)

هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ‌ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம்.

(அல்குர்ஆன்: 45:29)

ஏடு வழங்கப்பட்டு சொர்க்கம் தீர்ப்பளிக்கப்படுதல்

 

فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏

اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏

فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏

فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏     قُطُوْفُهَا دَانِيَةٌ‏

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــًٔا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏

 

69:19, 20. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்” எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)

 ஏடு கொடுக்கப்பட்டு நரகம் தீர்ப்பளிக்கப்படுதல்

என்ன புத்தகம் இது?

இதுவரை வாழ்க்கையில் பார்த்திராத ஒன்றை பார்க்கும் போது இது போன்ற ஒரு ஆச்சரியம் ஏற்படுவது இயற்கையானது. நாம் செய்த செயல்கள் அனைத்தையும் பதிவு செய்த ஒரு புத்தகத்தை பார்க்கும் போது மனிதன் இவ்வாறு புலம்புவான்.

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا‌ ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 18:48-49)

இடது கையில் கொடுக்கப்பட்டவன்

 

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ  يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ   مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ  هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

خُذُوهُ فَغُلُّوهُ   ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ

ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ

إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ”எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக்கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) முடிந்திருக்கக்கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே, எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்துவிட்டதே” எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.  குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 69:25-29)

فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ‏
وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏   اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۚ ۙ‏

நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.

இது மரியாதைக்குரிய தூதரின் கூற்றாகும்.

(அல்குர்ஆன்: 69:38)

நன்மைகளை எடைப் போட்டு தீர்ப்பளிக்கப்படுதல்

மறுமை நாளில் நாம் ஒவ்வொருவரும் நன்மை தீமையின் எடைகளுக்கு தகுந்தவாறு தான் சுவனமோ, நரகமோ செல்லமுடியும். நன்மை தீமையை எடை போடுவதற்கு ஒரு தராசை இறைவன் மறுமையில் ஏற்படுத்துவான். இதனை திருமறைக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக நமக்கு சொல்லித் தருகிறது.

நீதியான தராசு

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــًٔـا‌ ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ ؕ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏

கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.

(அல்குர்ஆன்: 21:47)

எடை போடுவது சத்தியம்

وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அன்றைய தினம் நன்மை தீமைகளை எடைபோடுவது சத்தியம். ஆகவே எவருடைய எடை(நன்மையால்) கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

(அல்குர்ஆன்: 7:8)

எடை அதிகமாக உள்ளவர்கள் வெற்றியாளர்கள்

உலகில் மனிதன் சிலவற்றை அளவிடுவதற்கு சில சாதனங்களை பயன்படுத்துகிறான். இன்றைய விஞ்ஞான அறிவியல் புரட்சியின் மூலம் வெயிலை அளவிடுகிறான். மழையை அளவிடுகிறான். ஏன் வேறு கிரகத்தில் இருக்கும் தட்பவெட்ப நிலையைக் கூட அளவிட்டுவிடுகிறான். மனிதனுக்கு இத்தகைய அறிவைத் தந்த அல்லாஹ்வுக்கு மனிதனின் நன்மையையும் அளவிட்டுக் காட்டுவது அற்பத்திலும் அற்பமான காரியம். இதையே அல்லாஹ் கூறுகிறான்:

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ    وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன்: 99:7, 99:8)

 وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அன்றைய தினம் நன்மை தீமைகளை எடைபோடுவது சத்தியம். ஆகவே எவருடைய எடை(நன்மையால்) கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

(அல்குர்ஆன்: 7:8)

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ    فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.

(அல்குர்ஆன்: 101:6-7)

எடை இலேசாக உள்ளவர்கள் நஷ்டவாளிகள்

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ‏

(நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 7:9, 23:102, 23:103)

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُمُّهٗ هَاوِيَةٌ

யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.

(அல்குர்ஆன்: 101:8)

அல்லாஹ் (கருணையுடன்) பார்க்காத நபர்கள்

ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 171)

நரகில் போடப்படும் மூன்று வகையினர்

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான்.

அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்கு பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான்.

அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான்.

அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறி : அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 3865)-3537

நரகில் போடப்படும் முஷ்ரிக்குகள்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலுவையுடனும், சிலை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள்.

முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர்.

பின்னர் நரகம் கொண்டு வரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது

அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், “இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), “குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள்.

பின்னர் கிறித்தவர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்டபின் “நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) “குடியுங்கள்!” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட் டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் “மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?)

இங்கு ஓர் அழைப்பாளர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வழிபட்டுக்கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள்.

அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று சொல்வார்கள்…..

(புகாரி: 7439)

சஜ்தா செய்யக் கட்டளை

(முந்தைய ஹதீஸின் தொடர்ச்சி) …அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், ‘(இறைவனின்) கால் (பாதம்)தான்” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான்.

இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து (தொழுது)கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரவணக்கம் செய்ய முடியாது). பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு, நரகத்தின் மேலே வைக்கப்படும்….

(புகாரி: 7439)

இவ்வுலகில் இறைவனுக்குப் பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்; மற்றவர்கள் இறைவனின் காலில் விழ முடியாது.

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏

கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து விடும். அவர்கள் உடலில் குறை ஏதுமற்று இருந்த நிலையில் (உலகில்) ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

(அல்குர்ஆன்: 68:42)

«يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காகவும் மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்துவந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (வளையாமல்) ஒரே கட்டையைப்போல் மாறிவிடும்.

(புகாரி: 4919)

பரிந்துரையை தேடுவார்கள்..

இவ்வாறு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் மாறி மாறி பல பேர் தீர்ப்பளிக்கப் படுவார்கள். நரகத்திற்கு தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் யாரையேனும் பிடித்து அவர்களின் பரிந்துரையைப் பெற்று சுவர்கத்திற்குச் சென்றுவிடமுடியாதா? என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் நபிமார்களைத் தேடி சுற்றி வருவார்கள்.

அடுத்த உரையில், யார் யார் பரிந்துரை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் அது எவ்வாறு ஏற்கப்படும் என்பதனை வரிசையாக காண்போம் இன்ஷா அல்லாஹ்.