25) ஏமாற்று வியாபாரம்

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்

பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, “கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை.

மரத்தில் உள்ள பிஞ்சை விலை பேசலாமே தவிர, காயான உடன் வாங்கிக் கொள்கிறேன் என்று பிஞ்சாக இருக்கும் போதே விலை பேசக்கூடாது. ஏனென்றால் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படை.

உதாரணத்திற்கு, ஒரு மரத்தில் பேரீச்சையோ திராட்சையோ பிஞ்சாக இருக்கிறது. இதை வாங்குபவன், இதைக் கனியான உடன் நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறான். காயாக இருக்கும் போதே அந்தப் பொருள் இவ்வளவு வரும் என்று அவன் ஒரு கணக்கை வைத்திருப்பான். அந்தக் கணக்கு வந்தால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைய மாட்டான்.

ஆனால் அவன் போட்ட கணக்கு வரவில்லை என்றால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைகின்றான். பொருளை விற்றவன் இதில் ஒரு கணக்கை வைத்திருப்பான். அதாவது, இவ்வளவு தான் இதில் லாபம் வரும் என்று பொருளை விற்றவன் போட்ட கணக்கின் அடிப்படையில் லாபம் வந்தால் அவன் நஷ்டமடைய மாட்டான். இவனது கணக்கை விட அதிகமான கனிகள் வந்தால் விற்றவனுக்கு நஷ்டமாகின்றது.

இப்படி இருவர் மனம் புண்பட்டுச் செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. இந்த வியாபாரத்தில் ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

(புகாரி: 2194)

ஹுமைத் அவர்கள் கூறியதாவது: “பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், “பக்குவம் அடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது” என்று விடையளித்தார்கள்.

(புகாரி: 2197)

பேரீச்சம்பழம் மரத்தில் பிஞ்சாக இருக்கும் போது விற்கக் கூடாது. அப்படியே விற்கவேண்டும் என்றால் கனியாக ஆனவுடன் உள்ள விலையைப் பேசக்கூடாது. பிஞ்சிற்கு என்ன விலையோ அதைத் தான் பேசவேண்டும்.

பேரீச்சம்பழத்தை பொறுத்த வரை அது மஞ்சள் நிறத்தையோ சிவப்பு நிறத்தயோ அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு அது மரத்திலேயே இருந்தாலும் அதற்கு விலை பேசுவது குற்றமில்லை. ஏனென்றால் அது எல்லாவிதமான ஆபத்தையும் கடந்துவிட்டது.

பயிரை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அனைத்தும் அரிசியாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் கீழ்பகுதி மஞ்சள் நிறத்தை அடைந்துவிட்டால் அதன் பிறகு அதற்கு ஆபத்தில்லை

பேரீச்சம்பழத்தைப் பொறுத்த வரை அது மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாகவோ ஆனதற்குப் பிறகு காய்க்குறிய பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கெள்ளளாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை அது கடந்துவிட்டால் அதற்குப் பிறகு எந்த இடையூறும் இருக்காது என்று தெரிந்ததற்குப் பின்னால் அதை விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்பது கீழ்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(புகாரி: 1486)

மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி, காய்க்கு விலை பேசி பணத்தை வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு மனிதர் மற்றொரு மனிதனிடத்தில் மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, இது காயான உடன் எடுத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த மனிதரும் சரி என்று சொல்கிறார். பிறகு பருவ நிலையாலோ அல்லது மழை வந்ததாலோ அல்லது வெயிலின் காரணமாகவோ அந்தப் பிஞ்சு காயாகவில்லை; உதிர்ந்து விடுகிறது. இப்போது ஒரு சகோதரன் தனது மற்றொரு சகோதரருடைய பணத்தை வாங்குவது எப்படிக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்

ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், “சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!‘ என்று பதிலளித்தார்கள். மேலும், “அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்!” என்றும் கேட்டார்கள்.

(புகாரி: 2208)

இந்த ஹதீஸை வைத்து நாம் பார்க்கும் போது விற்பவன் மீது மட்டும் குற்றம் என்பதைக் காட்டுகிறது ஆனால் நபி (ஸல்) அவார்கள் சொல்லும் போது விற்பவன் மீதும் வாங்குபவன் மீதும் குற்றம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

(புகாரி: 2194)

ஒரு காய் மரத்தில் இருக்கும் நிலையில் அதை அப்படியே விற்பது தவறில்லை. இந்த நிலையைக் காட்டி இதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விற்கக் கூடாது.

வியாபாரம் என்பது மன நிறைவாக இருக்க வேண்டும். விற்பவனும் வாங்குபவனும் பாதிக்கப்படக் கூடாது.

முஸாபனா என்கின்ற மற்றொரு வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸாபனா என்றால் மரத்திலுள்ள பக்குவப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு பக்குவப்படாத பேரீச்சம்பழத்தை விற்பது. ஒரு இனத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு விற்பது. இந்த வகையான வியாபாரம் தவணை முறையில் தான் நடைபெறும்.

உதாரணமாக, பேரீச்சம்பழத்திற்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை, திராட்சைக்குப் பதிலாக திராட்சையை, மிளகாய்க்குப் பதிலாக மிளகாயை விற்பது, அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டை விற்பது மார்க்கத்தில் தடையில்லை.

மரத்தில் உள்ளதைக் காட்டி, “இதில் 100 கிலோ இருக்கும்; இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 100 கிலோ கொடு’ என்ற ஒருவர் கேட்கிறார். அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் பிரச்சனையில்லை.

அப்படி இல்லாமல் வாங்கியவர் 100 கிலோவை வாங்கிவிட்டு மரத்தில் உள்ளது 90 கிலோவாகவோ 80 கிலோவாகவோ இருந்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். இப்போது 100 கிலோ வாங்கியவர் கிடைக்காமல் போன 10 கிலோவிற்கு என்ன பதில் சொல்வார்? இதை நபி (ஸல்) அவர்கள் வட்டி என்று சொல்கிறார்கள்.

அப்படி மரத்தில் உள்ளது 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவன் பாதிக்கப்படுகிறான்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். “முஸாபனா‘ என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!

(புகாரி: 2185)

முஹாக்கலா வியாபாரத்தை நபி (ஸல்) தடை செய்தார்கள். முஹாக்கலா என்றால் பக்குவப்பட்ட நெல்லை அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்கு விற்பதாகும்.

நெற்கதிர்களை கதிரில் வைத்து விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அது மஞ்சள் நிறம் ஆனதற்குப் பின்னால் விற்பதை அனுமதித்தார்கள். நெற்கதிர்கள் பச்சையாக இருக்கும் போது விற்றால் பச்சைக்கு என்ன விலையோ அதைத் தான் விலை பேசவேண்டும். அது மஞ்சளாதனற்குப் பின்னால் உள்ள நிலைக்கு விலை பேசக்கூடாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “முஹாகலா, முஸாபனா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

(புகாரி: 2187)

நபி (ஸல்) அவர்கள் வியாபாரத்தில் ஏமாறக்கூடிய, ஏமாற்றக்கூடிய அனைத்து வாயில்களையும் அடைக்கிறார்கள். வியாபாரம் என்று வரும் போது விற்பவனும் வாங்குபவனும் நஷ்டமடையாமல் இருப்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு பழம் அதன் பக்குவத்தை அடையும் வரையும் இன்னும் கால்நடையின் முதுகின் மீதுள்ள முடியையும் (அறுப்பதுக்கு முன்) இன்னும் மடுவிலுள்ள பாலையும் இன்னும் பாலிலுள்ள நெய்யையும் விற்பதை நபிகள் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

நூல்: தாரகுத்னி

ஆட்டினுடைய ரோமத்திலிருந்து கம்பளி செய்யப்படுகிறது. எனவே ஆட்டின் ரோமத்தை விற்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. எப்போது தடுக்கிறது என்றால் ஆட்டை அறுப்பதற்கு முன்னாலே ரோமத்திற்கு விலை பேசுவதை இஸ்லாம் தடுக்கிறது.

அதேபோல மாட்டிலிருந்து பால் கறப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதே சமயம், ஒருவனிடத்தில் மாட்டைக் காட்டி ஒரு 100 ரூபாய் வாங்கி விட்டு, இதிலுள்ள பாலைக் கறந்து கொள் என்று சொன்னால் அது தவறாகும்.

அந்த மாட்டின் மடுவில் 100 ரூபாய்க்கான பால் இருந்தால் இரண்டு பேருக்கும் நஷ்டம் ஏற்படாது. ஆனால் அதில் 100 ரூபாய்க்கான பால் இல்லை என்றால் வாங்கியவன் நஷ்டமடைகிறான். அதில் 100 ரூபாய்க்கும் அதிகமான அளவுக்குப் பால் இருந்தால் விற்றவன் நஷ்டமடைகிறான். இந்த வகையான வியாபாரத்தை இஸ்லாம் தடுக்கிறது.

இருவர் வியாபாரம் செய்தால் இருவர் மனதிற்கும் வருத்தம் ஏற்படாமல் மன நிறைவோடு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது.

பாலில் வெண்ணை இருக்கும். அந்தப் பாலைக் காட்டி, “எனக்கு இன்ன தொகை தா! அதன் பிறகு இந்தப் பாலைக் கடை. அதில் வரும் வெண்ணையை நீ எடுத்துக் கொள்’ என்று சொல்லி பாலைக் கடைவதற்கு முன்னரே விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள்.