மரணமும் மறுமையும் -24
(விசாரணையின் தொடர்ச்சி)
சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள்
அந்த நாளில் அனைத்து ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், அனைத்து மனிதர்களும் தனக்கு வழங்கப்படும் நீதி உண்மையில் நீதிதான் என்று அறிந்து கொள்ளும் விதமாக அன்றைய தினம் விசாரணை இருக்கும். அதற்காக அல்லாஹ் சாட்சிகளை கொண்டு வருவான்.
நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!
ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர்.
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (இப்போது வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும். (அல்குர்ஆன்: 28:75) ➚
நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம்.
நபிமார்களுக்கும் விசாரணை உண்டு
யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.
ஈஸா நபியிடம் விசாரணை
தூதர்களை அனுப்பி அனைத்தையும் படைத்த இறைவனை வணங்குங்கள் என்று கூறினால் இறைவன் படைத்த சூரியனையும் சந்திரனையும் மனிதர்களையும், ஓரிறை கருத்தை தனது வாழ்நாள் முழுவதும் போதனை செய்த இறைத்தூதர்களையே கடவுளாக வணங்கியவர்கள் மறுமையில் வந்து நிற்பார்கள். அல்லாஹ் தனது திருமறை குர்ஆனிலே கேட்கிறான். அவர்கள் முன்னிலையில், ஈஸா நபியிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்.
“மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார்.
காஃபிர்களிடம், முனாஃபிக்களிடம் விசாரணை
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள்.
மக்கள் “இல்லை’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.
இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்’ என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை’ என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான்.
இது போன்று இரண்டாவது ஒரு அடியானிடத்திலும் நடக்கும்.
பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.
அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான்.
அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “பேசுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன் மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5678)
இணைவைத்தோரிடம் விசாரணை
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டு வரப்பட்டு ‘உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?’ என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ‘ஆம்’ என்று பதிலளிப்பான்.
அப்போது ‘இதைவிட சுலபமான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)’ என்று கூறப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொறுப்புகளைப் பற்றிய விசாரணை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார்.
ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்.
மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்), தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள்.
மறுமையில் பயன்தராத செல்வம் அதிகாரம்
அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.
அதிகாரம் பயன் தராது
எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.
ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது
ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
சமாளிப்பு பயன் தராது.
அந்நாளில் அநீதி இழைத்தோரின் சமாளிப்பு அவர்களுக்குப் பயன் தராது. அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு) வணக்கங்கள் செய்ய வற்புறுத்தப்பட மாட்டார்கள்.
பிறருக்கு அநியாயம் செய்ததைப் பற்றிய விசாரணை
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.
தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.
அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்த அளவுக்கென்றால்,கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5038)
மிகமிக சங்கடமான ஒரு நிகழ்வு
அனைவரும் வெருண்டு ஓடுவர்
அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
தான் மட்டும் தப்பித்தால் போதும் என்றே பாவி விரும்புவான்
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.
வேண்டவே வேண்டாம் இந்த இழிநிலை!
என்னை சுமந்தெடுத்த, பாசமாய் வளர்த்த எனது தாய், நான் ஆசை ஆசையாய் வளர்த்த எனது பிள்ளைகள், என் உடன் பிறந்த சகோதர சகோதரிகள், எனக்காகவே வாழ்ந்த என் அன்பு மனைவி என அனைவரையும் பலி கொடுத்தாவது, அவர்களை நரகத்தில் தள்ளியாவது என்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மறுமையில் ஒவ்வொரு பாவியும் விரும்புவான்.
இந்த சங்கடமான ஒரு நிகழ்வை நாம் யாருமே மறுமையில் சந்தித்து விடக்கூடாது. உலகில் இப்படி விரும்புவோமா? எண்ணிப் பாருங்கள். உங்களை பிள்ளையை பலிகொடுத்து உங்களை காப்பாற்ற விரும்புவீர்களா? நம் யாருக்கும் வேண்டவே வேண்டாம் இந்த இழிநிலை. இறைவனது கடும் விசாரனையில் நாம் மாட்டி விடக்கூடாது என்று துஆச் செய்யுங்கள். ஏனெனில்.
விசாரணைக்காக கொண்டு வந்தாலே அழிவுதான்
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்” என்று கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! “எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” (அல்குர்ஆன்: 84:8) ➚ என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
(புகாரி: 6537)
மறுமையில் நடக்கும் விசாரணை நிகழ்வுகளை இதுவரை பார்த்தோம். அடுத்த உரையில் ஏடு வழங்கப்படுதல், நன்மை தீமைகளை எடை போடப்படுதல், பிறகு தீர்ப்பளிக்கப்படுதல், சஜ்தா செய்ய கட்டளை இடப்படுதல் ஆகிய செய்திகளை காண்போம்.