24) மணணறை தண்டனைக்கான காரணங்கள்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

24) மணணறை தண்டனைக்கான காரணங்கள்

உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியு மாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டிட வேண்டும்.
உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை). ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகின்றார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரலி)

(புகாரி: 3978)