மரணமும் மறுமையும் – 23 (விசாரணை ஆரம்பம்)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

உலகில் செய்தவற்றுக்கு மறுமையில் விசாரணை உண்டு

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا

அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள்.

(அல்குர்ஆன்: 14:21)

فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.

(அல்குர்ஆன்: 15:92,93)

அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்:

وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ

‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் – உங்கள் மானமும் – உங்களுக்குப் புனிதமானவையாகும்.

நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.

صَدَقَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்’ என்று கூறுவார்கள்….

(புகாரி: 4406)

ஸஃப் ஸஃப்பாக – வரிசையாக நிறுத்தப்படுவார்கள்

يَوْمَٮِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗ‌ؕ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا‏

எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம், ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்!

(அல்குர்ஆன்: 20:108)

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 99:6)

وَعُرِضُوْا عَلٰى رَبِّكَ صَفًّا ؕ لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ ۢ  بَلْ زَعَمْتُمْ اَ لَّنْ نَّجْعَلَ لَـكُمْ مَّوْعِدًا‏

உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).

(அல்குர்ஆன்: 18:48,49)

நல்லவர்களும் தீயவர்களும் பிரிக்கப்படுவார்கள்

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ‏

மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது – அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன்: 30:14)

وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏

அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

(அல்குர்ஆன்: 36:59)

வானவர்கள் அணி வகுக்க இறைவன் வருகை!

வானவர்கள் அணி வகுக்க இறைவன் வருவான் என்று திருமறைக் குர்ஆன் பேசுகிறது. அப்போது நரகமும் கொண்டு வரப்படும். அப்போது தான் மனிதனுக்கு புத்தி வரும்.

كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰى

يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌

அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்? “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?’’ என்று கூறுவான்.

(அல்குர்ஆன்: 89:21-24)

மொழிபெயர்ப்பாளரும், திரையும் இருக்காது

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில் தனித்தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

(புகாரி: 7443)

வாய்களுக்கு முத்திரையிடப்படும்

மறுமையில் பல முறைகளில் மனிதர்களிடம் இறைவன் விசாரணை செய்வான். அதில் ஒரு சாராருக்கு வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு விசாரணை நடக்கும் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.

இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

(அல்குர்ஆன்: 36:65)

மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. வாய்க்கு முத்திரை இடப்படும். மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள்.

“எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள் !” என்று அவை கூறும்.

(அல்குர்ஆன்: 41:21)

தனக்கு எதிராகவே கோரிக்கை வைக்கும் அடியான்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் சிரித்துவிட்டு, “நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் அடியான் தன் இறைவனுடன் (மறுமை நாளில்) உரையாடுவது குறித்(து நினைத்)தே (சிரித்தேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்: அடியான் (தன் இறைவனிடம்), “என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?” என்று கேட்பான்.

அதற்கு இறைவன், “ஆம்” என்பான். அடியான், “அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறுவான்.

அதற்கு இறைவன், “இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்” என்பான்.பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனுடைய உறுப்புகளிடம், “பேசுங்கள்” என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.

பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், “உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்” என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான்.

(முஸ்லிம்: 5679)

முதலில் தீர்ப்பளிக்கப்படுவது கொலையை பற்றியே

أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 6533)

தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.

ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில், கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்து வரப்படுவார்கள்.

يَجِيءُ الْمَقْتُولُ بِالقَاتِلِ يَوْمَ القِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا ، يَقُولُ  يَا رَبِّ ، قَتَلَنِي هَذَا ، حَتَّى يُدْنِيَهُ مِنَ العَرْشِ

(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்’ என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அனஸ் (ரலி),
நூல்: (திர்மிதீ: 3029) (2955)

வணக்க வழிபாடுகளில் முதல் கேள்வி

إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلاَتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَىْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ انْظُرُوا هَلْ لِعَبْدِى مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (திர்மிதீ: 413) (378)

உலகின் அருட்கொடைகள் பற்றிய விசாரணை

உலகில் வாழும் மக்களில் சிலர் வீடு, கார், பங்களா, சொத்து, சுகம் என்று வாழும் மக்களும் இருக்கிறோம். அவ்வளவு இல்லாவிட்டாலும், 10 ஆயிரம், 20 ஆயிரம் முதலீட்டில் ஒரு சிறிய தொழில் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை, வாழ்வதற்கு ஒரு வாடகை வீடு, அதில் சில பொருட்கள் என்றாவது வாழ்கிறோம். எதுவுமே இல்லாமல், நடுத்த தெருவில் வசிக்கவில்லை. நமக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகள் எதுவாக இருந்தாலும், அது பற்றியும் மறுமையில் நாம் விசாரிக்கப்படுவோம்.

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 102:8)

பேரீத்தம்பழம், தண்ணீருக்கும் விசாரணை உண்டு:

لَمَّا نَزَلَتْ: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ} [التكاثر: ] قَالَ الزُّبَيْرُ: يَا رَسُولَ اللَّهِ، وَأَيُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ، وَإِنَّمَا هُمَا الأَسْوَدَانِ التَّمْرُ وَالمَاءُ؟ قَالَ: «أَمَا إِنَّهُ سَيَكُونُ».

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:8) எனும் இறைவசனம் இறங்கியபோது, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாம் அப்படி எந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படப் போகிறோம்? (நம்மிடம் இருப்பது) இந்த இரு கறுப்புகளான பேரீத்தம்பழமும், தண்ணீரும் மட்டும்தானே என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவ்விரண்டும் பெரும் அருட்கொடைகள் தான் என்பதால் ஆம்) “இவற்றைப் பற்றியும் நம்மிடம் விசாரணை உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),
நூல்: (திர்மிதீ: 3356)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்” அல்லது “ஓர் இரவு” (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறிவிட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்”என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 4143)

ஏன் எனக்கு உணவளிக்கவில்லை?

நமக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படுவது போல, அந்த அருட்கொடையில் இருந்து பிறருக்கு வழங்காமல் இருந்தால் அதைப் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவோம். அதாவது என்னிடம் ஒரு உணவு இருந்து அதை நான் சாப்பிட்டால் அதற்கும் விசாரணை. ஒரு ஏழை அதை என்னிடம் கேட்கும்போது அதை நான் கொடுக்காமல் இருந்தால் அதற்கும் விசாரணை உண்டு.

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5021)

ஆகவே நம்மிடத்தில் செல்வம் இருந்தால், உணவுப் பொருட்கள் இருந்தால் கையேந்தி நம்மிடம் யாரேனும் தர்மம் கேட்டால் அதை கொடுக்க வேண்டும். கொடுக்க இயலாவிட்டால், அது மறுமையில் விசாரிக்கப்படும். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மறுமையில் இன்னும் சில விசாரணைகள் உள்ளது. அது குறித்து, இன்ஷா அல்லாஹ் நாளை காண்போம்.