23) தொழுகையிலும் தொழுகைக்குப் பின்பும் பாதுகாப்புத் தேட வேண்டும்
23) தொழுகையிலும் தொழுகைக்குப் பின்பும்
தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் போதும் தொழுது முடித்த பிறகும் மண்ணறை வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மறவாமல் பாதுகாப்புத் தேட வேண்டும்.
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் அடக்கவிட (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை.
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி)
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின் வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி
“இறைவா! நான் கோழைத் தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகி றேன்” என்று கூறிவிட்டு, “இந்த விஷயங்களிலிருந்தல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தி (ரஹ்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:)
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம், வ மின் அதாபில் கப்ரி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்,
(பொருள் இறைவா! உன்னிடம் நான் நாகத்தின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும். இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிழிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர்:அபூஹூரைரா (ரலி)