23) தபூக் போர் – ஹிஜ்ரி 9
ஹஜ்ரி 8 ல் நடைபெற்ற மக்கா வெற்றிக்கு பிறகு மக்கள் கூட்டம், கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரத்துவங்கினார்கள்.
எனினும் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரும் தொல்லை அளிக்கும் அரசாக ரோமானிய அரசு இருந்தது. அப்போதைக்கு அது பேரரசாகவும் திகழ்ந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சி பிடிக்காத ரோமானிய பேரரசு, கஸ்ஸான் கோத்திரத்தார் உள்ளிட்ட இன்னும் சிலரையும் ஒன்று திரட்டி முஸ்லிம்களுடன் போர் செய்ய தயாரானார்கள்.
இந்த தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வரவே அவர்களை எதிர் கொள்ள போருக்கு தயாராகும் படி நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.
அது தான் வரலாற்றில் தபூக் போர் என்றழைக்கப்படுகிறது. இது ஹிஜ்ரி 9 ரஜப் மாதம் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோம பைஸாந்தியர்களையும் ஷாமிலிருந்த அரபுக் கிறித்தவர்களையும் நோக்கி தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்” (முஸ்லிம்: 5346) ➚
தபூக் போருக்காகாக தயாராகும் படி நபிகள் நாயகம் அறிவிப்பு செய்யவும் அதற்காக பல நபித்தோழர்கள் உதவி செய்ய முன்வந்தார்கள். அதில் உஸ்மான் (ரலி) அவர்கள் மட்டும் 600 ஒட்டகங்களை அர்ப்பணிப்பு செய்தார்கள். அதன் காரணத்தால் நபியவர்களும் உஸ்மான் அவர்களை சிறப்பித்து கூறினார்கள். (திர்மிதி 3633)
இன்னும் எண்ணற்ற நபித்தோழர்கள் இப்போருக்காக தங்களால் இயன்றதை வழங்கினார்கள். அதை பின்வருமாறு இறைவன் தெரிவிக்கின்றான்.
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 9:79)➚
நபியவர்கள் தபூக் போருக்கு செல்லும் போது ஊர் மக்களை பாதுகாப்பதற்காக அலீ அவர்களை பொறுப்பாளராக நியமித்து சென்றார்கள். இதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள். “மூசாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை” என்று சொன்னார்கள். (புகாரி: 4416) ➚
கடும் வெயில், பாலைவனப் பயணம், வாகனப் பற்றாக்குறை என பல சிரமங்கள் தபூக் போரின் போது இருந்தது. இச்சிரமங்களை தாங்கியே போருக்கு புறப்பட்டார்கள். இது பற்றி கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை.
ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்ல விருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். (புகாரி: 4418) ➚
தபூக் போரில் பங்கு கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. “எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது’ எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். (போரில் கலந்துகொள்ளாமல்) தலை மறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு ( வராத வரையில் (தான் போருக்கு வராத விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற (அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். (புகாரி: 4418) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடு களைச் செய்துகொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன் எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். ‘நினைக்கும்போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத்தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்? என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர் (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக்கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டுவிட்டார்கள். (முஸ்லிம்: 5346) ➚
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்று தான் புறப்பட்டார்கள். (புகாரி: 2950) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால் மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர் களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர். பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. (முஸ்லிம்: 5346) ➚
தபூக் போரை பற்றி மேற்கண்ட நிகழ்வுகளை தெரிவிக்கும் கஅப் பின் மாலிக் ரலி உள்பட மூவர் தபூக் போரில் கலந்து கொள்ளவில்லை இதோ போகலாம், அதோ போகலாம் என்று இறுதி வரை போருக்கு செல்லாமல் அவர்கள் ஊரிலேயே தங்கி விட்டார்கள். அவர்கள் தொடர்பாக அருளப்பட்ட பின்வரும் வசனம் இறுதியில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் இறைவன் மன்னித்தான்) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள் பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன் (அல்குர்ஆன்: 9:118)➚
முஸ்லிம்கள் படை தபூக்கை நோக்கி புறப்பட்டு குறிப்பிட்ட இலக்கை அடைந்தது. போர் வீரர்களின் எண்ணிக்கை அதிகமான அளவில் இருந்ததால் அனைவருக்குமான உணவு மற்றும் வாகன வசதி போதிய அளவில் இல்லை எனவே கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆகையினால் ஹதீஸ்களில் இப்போர் ஜைஷூல் உஸ்ரா சிரமம் கொண்ட படை என்று வர்ணிக்கப்படுகிறது. (புகாரி: 2266) ➚
தபூக் போருக்கு செல்லும் போது ஸமூத் கூட்டத்தார் வசித்த பகுதியை கடந்து சென்றார்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் மக்கள் தபூக் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான ‘ஹிஜ்ர் என்னும் பகுதியில் தங்கினார்கள் அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணிரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார் கள். மேலும் ஸாலிஹ் அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்ததோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத் தைக் கடந்து சென்ற பொழுது, ‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள்.
பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புகாரி: 3380) ➚
தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள்.
பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்” என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (முஸ்லிம்: 45) ➚
தபூக்கை நெருங்கும் போது படையினருக்கு பின்வருமாறு நபிகள் நாயகம் அறிவுரை கூறினார்கள். அதில் சில முன்னறிவிப்புகளும் அடங்கும்.”அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் ஊற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்குமுன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள் நான் வருவதற்குமுன் உங்களில் எவரும் அங்கு சென்றுவிட்டால், அங்குள்ள தண்ணீரில் கை வைத்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்
அவ்வாறே நாங்கள் அங்கு சென்றோம்.
அப்போது இரு மனிதர்கள் எங்களை முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் தண்ணீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள்.) அவர்கள் இருவரிடமும் அதன் தண்ணீரில் கை வைத்தீர்களா?” என்று கேட்டார்கள் அவர்கள் இருவரும் ஆம்’ என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கண்டித்தார்கள். அவர்கள் சொல்ல வேண்டுமென அல்லாஹ் நாடியதையெல்லாம் அவ்விருவரிடமும் சொன்னார்கள்.
பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றி லேயே அந்தத் தண்ணீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான தண்ணீர் பீறிட்டு’ அல்லது “நிறைந்து ஓடியது மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘முஆதே! (எனக்குப் பிறகு) நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்” என்று (முன்னறிவிப்பாகக்) கூறினார்கள். (முஸ்லிம்: 4582) ➚
நாங்கள் தபூக்கை அடைந்த போது இன்றிரவு கடும் காற்று அடிக்கும். எனவே யாரும் வெளியில் செல்ல வேண்டாம் ஒட்டகமுடையவர்கள் அதை நன்கு சுட்டி வைக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டடையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப் போட்டு விட்டோம். கடும் காற்று வீசத் தொடங்கிற்று. நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக ஒரு மனிதர் வெளியே எழுந்து வந்தார். உடனே காற்று அவரை தய்யி என்ற மலையில் கொண்டு போய்போட்டது. (புகாரி: 1482) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்காக மேற்கொண்ட பயணத்தின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரு நேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் தொழுதார்கள். (முஸ்லிம்: 1269) ➚
இஸ்லாமிய படையினர் தபூக்கில் முகாமிட்டு போருக்கு தயாராக இருந்த தகவல் அறிந்த ரோமானியர்களும் மற்றவர்களும் திடுக்கமடைந்தார்கள் தபூக்கின் அருகில் இருந்த அய்லா எனும் பகுதியின் மன்னன் போர் செய்வதை விட்டும் விலகும் முகமாக நபி ஸல் அவர்களை சந்தித்து அன்பளிப்பு வழங்கினார் நபியவர்களின் ஆளுகையின் கீழ் வருவதற்கும் ஒப்புக் கொண்டார்.
அய்லா என்ற ஊரின் மன்னன் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் வழங்கினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்று எழுதிக் கொடுத்தார். (புகாரி: 1482) ➚
அதே போல தூமத்துல் ஜன்தல் பகுதியின் மன்னன் உகைதிரை நோக்கி காலித் (ரலி) அவர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். உகைதிர் யூதராகவும், ரோமர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களுடன் போர் செய்யும் முனைப்பிலும் இருந்தவர். அவர் மாட்டை வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில் நீ காண்பாய் என்று காலித் ரலி அவர்களுக்கு அறிவித்து கொடுத்தார்கள் நபிகள் நாயகம் அறிவித்தது போலவே உகைதிரை கண்டு, அவரை சிறைபிடித்து நபியவர்களிடம் கொண்டுவந்தார்கள். இறுதியில் அவரும் நபிகள் நாயகம் முன் பணிந்தார். (பிதாயா வந்நிஹாயா 521)
உகைதிர் பற்றி புகாரியிலும் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.
தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார். (புகாரி: 2616) ➚
இவ்வாறு அன்பளிப்புகள் பல வழங்கி நபிகள் நாயகத்துடன் சமரச தொடர்பை தொடர்ந்துள்ளார் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.
எனினும் அபூபக்கர் ரலி ஆட்சி காலத்தில் சுமூக ஒப்பந்தத்தை உகைதிர் முறித்தார் என்று வரலாறு கூறுகிறது.
இவ்வாறு ரோமர்களின் நட்பு நாடுகளும் ஆதரவாளர்களும் தபூக்கில் முகாமிட்ட இஸ்லாமிய படையை கண்டு அஞ்சி நடுங்கி ஒவ்வொருவராக அவர்களை விட்டு விலகினர். அதை தொடர்ந்து இஸ்லாமிய படையின் கை ஓங்கியது. ரோமர்களின் கை ஒடுங்கியது. போரிடாமலும் ரத்தம் சிந்தாமலும் தபூக்கில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.
அதன் பின் மதீனாவை நோக்கி தம் படையுடன் புறப்பட்டு வந்தார்கள்.
நபியவர்கள் தபூக்கிலிருந்து திரும்பி வந்த போது உஹது மலையை கண்டதும் பின்வருமாறு கூறினார்கள்.
நாங்கள் “தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம் பிறகு நாங்கள் (போரை முடித் துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) வாதில் குரா எனும் இடத் திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன் எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம் விரும்பியவர் (இங்கேயே தங்கியிருக்கலாம்” என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது. “இது தாபா தூய நகரம்) ஆகும். இது உஹுத் மலை, இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 4583) ➚
மதீனாவை நோக்கி வருகையில் ஒரு குழு நபிகள் நாயகத்தையும் முஸ்லிம்களையும் தாக்க திட்டம் தீட்டியது அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்தான் பின்வரும் வசனம் இந்த வரலாற்று நிகழ்வை தெரிவிப்பதாகவே விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்
இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். (அல்குர்ஆன்: 9:47)➚
காலை நேரத்தில் நபிகள் நாயகம் மதீனா வந்தடைந்தார்கள். இது பற்றி கஅப் ரலி அவர்கள் கூறும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (முஸ்லிம்: 5346) ➚
தபூக்கிலிருந்து ஷாம் பிரதேசம் தாண்டி மதீனா வருகையில் தலஅல் பத்ரு அலைனா எனும் கவியை பாடி நபிகள் நாயகத்தை சிறுவர்கள் வரவேற்றனர்.விடைபெறும் பள்ளத்தாக்கிலிருந்து பௌர்ணமி நிலவு நம்மிடையே தோன்றியது அழைப்பவர் அழைக்கும் வரை அதற்கு பதிலளிப்பது நம் கடமை என்பதே அக்கவியின் பொருள்
இது மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத் பயணத்தின் போது நடைபெற்றதாக வரும் செய்திகள் முற்றிலும் பலவீனமாக இருப்பதாலும், ஸனிய்யதுல் வதா எனும் பள்ளத்தாக்கு ஷாம் பிரதேசத்தை ஒட்டியே இருப்பதாலும் இது தபூக் போரிலிருந்து திரும்பி வரும் போது நடைபெற்ற நிகழ்வு என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (பத்ஹுல் பாரி 7263)
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம் வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தார்கள்.
தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு தாம் போருக்கு வராமல் போனதற்கு! சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் வெளிப்படையான காரணங் களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
மிகவும் நெருக்கடியான. சிரமமான கட்டத்தில் நடைபெற்ற இந்த போரில் கஅப் பின் மாலிக் உள்பட கலந்து கொள்ளாத மூவர் விவகாரத்தில்
அம்மூவருடனும் எந்தவித உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் (புகாரி: 4418, 4676, 4677, 6690) ➚
அம்மூவரும் தமது செயலுக்காக மிகவும் வருத்தினார்கள். எனவே அவர்களை இறைவன் மன்னித்தான். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள் பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன் (அல்குர்ஆன்: 9:118)➚
இது தான் தபூக் போரின் போது நடைபெற்ற நிகழ்வாகும். நபிகள் நாயகம் கலந்து கொண்ட இறுதி போரும் இதுவே.
போருக்கு வராதோர் நபி ஸல் அவர்களிடம் வந்து காரணம் கூறும் தருணத்தில் கஅப் பின் மாலிக் அவர்ளும் வந்து தாம் போருக்கு வராததன் பிண்ணனியை விளக்கினார். அது தொடர்பாக அவரே கூறும் விபரத்தை காண்போம்.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, “வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே. நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், *(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ள வில்லை நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக்கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
நான் “ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணை யாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்துகொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவரது) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தி யடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப் படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர் பார்க்கிறேன்.
இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட
அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை என்று கூறினேன் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொல்லிவிட்டார்’ (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறி னார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.
பனூ சலமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்துகொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே” என்று சொன்னார்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலமா குலத்தாரை நோக்கி, “தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா?” என்று கேட்டேன்.
அதற்கவர்கள் ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதுதான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது” என்று கூறினார்கள். உடனே நான், “அவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்” என்று பத்ருப் போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச் சென்றுவிட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்துகொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய்விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம் எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும் செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவ னாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத் தொழுகயில் கலந்துகொண்டும்.
கடை வீதிகளில் சுற்றிக்கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன் எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர் களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகை களை நிறைவேற்றுவேன் அப்போது என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்றுன ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிட மிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக இருந்தார்கள்.
மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது. நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், ‘அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா?” என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர். “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெளியேறினேன்.
நிலைமை இவ்வாறு நீடித்துக்கொண்டி ருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், கஅப் பின் மா-க்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?” என்று (என்னைக் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர் உடனே அவர் என்னிடம் வந்து, ஃகஸ்ஸான்’ நாட்டின் அரசனிட மிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த கடித மொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து(ஒதுக்கி) விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.
இதை நான் படித்தபோது, “இது இன்னொரு சோதனையாயிற்றே!” என்று
(என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்துவிட்டேன்.
ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியைவிட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், “அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டேன். அவர், இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம் அவரைவிட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)” என்று கூறினார். இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் ளநபி (ஸல்) அவர்கள் உத்தரவுன அனுப்பியிருந்தார்கள்.
ஆகவே, நான் என் மனைவியிடம், “உன் குடும்பத்தாரிடம் சென்று. இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!” என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் பின் உமய்யா (ர-) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவுகொள்ள) நெருங்க வேண்டாம்” என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி “அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்” என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார்.
என் வீட்டாரில் ஒருவர். ‘தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் நன்றாயிருக்குமே)* என்று கூறினார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன் என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்!” என்று கூறி மறுத்து) விட்டேன்.
அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன் எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து (அல்குர்ஆன்: 9:118)➚ ஆவது வசனத்தில் குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது) “பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி. நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமா யிருந்தது. அப்போது, “சல்உ’ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்க!” என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அறிவித்துவிட்டார்கள் என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.
அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார் (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். (முஸ்லிம்: 5346) ➚