22) தேவையுள்ளோருக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

சமூகத்தில் ஏதேனும் தேவையை நிறைவேற்ற முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கும் மக்கள் இருப்பார்கள். அத்தகைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்கக் கூடாது.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம் நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ‘இல்லை’ என்றார். வானவர்கள் நன்கு நினைவுபடுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) ‘நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், வசதியுடையோருக்கு (அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால்) கண்டுகொள்ளாமல் விட்டு விடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு வந்தேன் என்று கூறினார். அல்லாஹ், ‘அந்த மனிதரின் குற்றங்குறைகளை கண்டு கொள்ளாமல் (மன்னித்து)விடுங்கள்’ என்று (வானவர்களிடம்) கூறினான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி), நூல் : (முஸ்லிம்: 3178)

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும் ) ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், ‘எந்த அடிமைனயை விடுதலை செய்வது) சிறந்தது’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள்.

நான் ‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது இயலவில்லை என்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள். பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள். நான். ‘இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்..?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),                         நூல் : (புகாரி: 2518)