22) அடைமானமும் அமானிதமும்
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் ஒரு யூத மனிதனிடம் அடைமானப் பொருள் கொடுத்து கொஞ்சம் கோதுமை வாங்கினார்கள். அதைத் திருப்பி வாங்காமலேயே மரணித்தார்கள் என்ற ஹதீஸை பார்க்கிறோம். அது வட்டிக்கு இல்லை. அடைமானப் பொருளுக்கும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பொருளை வாங்கும் போது அதற்குப் பதிலாக ஒரு பொருளை கொடுப்பதே அடைமானமாகும்
எனவே அடைமானம் வைத்து பொருளை வாங்கலாம் அல்லது அடைமானத்துக்கு பொருட்களை கொடுக்கலாம் என்பதை பின்வரக் கூடிய ஹதிஸ்கள் உணர்த்துகின்றது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள். (புகாரி: 2068, 2200, 2096, 2069)
ஆனால் இன்றைக்கு கிராமப்புறங்களில் அடைமானம் வைக்கப்பட்ட பொருட்களை அடைமானம் வாங்கியவர்கள் பயன்படுத்துவதைப் பரவலாகக் காணமுடிகிறது. வீட்டை வாடகை இல்லாமல் ஒத்திக்கு விடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இது கூடாது. ஏனென்றால் நாம் கொடுத்த ரூபாயைத் தான் திரும்ப வாங்கப் போகிறோம். அதைக் குறைத்து வாங்க மாட்டோம். இதைப் போன்று தான் அவனுடைய பொருளையும் அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும். இதற்கு பெயர் தான் அடைமானம்.
ஆடு, மாடு, ஓட்டகம், கழுதை இவைகளை அடைமானம் வைத்தால் அவைகளை அடைமானம் வாங்கியவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அடைமானம் வைக்கப்பட்ட கால்நடைகளுக்கு உணவு கொடுத்தால் அவற்றுக்கு உணவு கொடுக்கின்ற அளவு பயன்படுத்திக் கொள்ள முடியும் உதாரணமாக, பால் தரக்கூடிய பசுவில் பாலைக் கறந்து குடித்து கொள்ள முடியும். அதே போல சவாரி செய்ய கூடியதாகயிருந்தால் அதில் சவாரி செய்து கொள்ள முடியும், இன்னும் சில பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்தவில்லை என்றால் அது கெட்டு விடும் என்றால் நிபந்தனை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்
அமானிதம் என்றால் ஒரு பொருளை எப்படித் தந்தாரோ அப்படியே திருப்பிக் கொடுப்பது தான் அமானிதம் ஆகும்.
அமானிதத்தை எப்படிப் பதுகாக்க வேண்டும் என்றால், ஒரு மனிதர் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் நம்மிடம் ஒரு பொருளை அமானிதம் என்று தருகிறார் என்றால் அந்தப் பொருளை எப்படி அந்த மனிதர் தந்தாரோ அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அன்றைக்கு வாழ்ந்த யூதர்கள், முஷ்ரிக்கீன்கள் மத்தியில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நம்பிக்கையாளர், உண்மையாளர் என்றெல்லாம் பெயர் எடுத்தார்கள் என்றால் நபியவர்கள் அமானிதத்தைப் பேணிப் பாதுகாக்கக் கூடியவராகயிருந்தார்கள்.
அமானிதத்தைப் பாதுகாக்க வேன்டும் என்று அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான்.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவ னாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:58) ➚
அல்லாஹ்வுடைய கட்டளைகளில் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை எப்படிக் கட்டளையிடுகிறானோ அதே போன்று அமானிதம் விஷயத்தில் திருப்பிச் செலுத்துவதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்,
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ், ரசூலுக்கு மாறு செய்தால் எப்படி குற்றமோ அதற்கு அடுத்த குற்றம் அமானித மோசடி என்று அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன்: 8:27) ➚
அமானிதத்தைப் பாதுகாப்பவரே மறுமையில் வெற்றி பெறுவார்
அமானிதத்தை நல்ல முறையில் யார் பாதுக்கிறாரோ அவர் வெற்றி பெற்று விட்டார்.
தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன்: 23:8) ➚
அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள். (அல்குர்ஆன்: 70:32) ➚
அமானிதத்தை மோசடி செய்பவன் நயவஞ்சகர்களின் பட்டியலில் வந்து விடுவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 330)
ஒருவர் நம்மை நம்பி பொருளை ஒப்படைத்தால் அதை மோசடி செய்யாமல் கொடுத்து விடவேண்டும். அவ்வாறு கொடுக்காமல் மோசடி செய்வது யூதர்களுடைய நடைமுறை என்று அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.
ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 3:75) ➚